
அந்தப் பெண்மணி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர். அந்தக்கால வழக்கப்படி அவருக்கும் அவரது பெற்றோர்கள் காது வளர்ப்புச் செய்திருந்தனர். சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது பெண் குழந்தைகளின் காது மடல்களில் துளையிட்டு, அவற்றில் பஞ்சைச் செருகி வைப்பர். பஞ்சின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிக்கொண்டே வந்து துளையைப் பெரிது பண்ணுவர். அதன் பின்பு ஈயத்தில் செய்யப்பட்ட குணுக்குகளைக் காதுகளில் தொங்கவிட்டு துளையிடப்பட்ட காது மடல்களை நீளப்படுத்துவர்.
அவ்வாறு காது வளர்த்த பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் திருமண வயதை எட்டியவுடன், குணுக்குகளைக் கழற்றிவிட்டு தண்டட்டி அல்லது சவுடிகளை காதில் அணிவிப்பர். ஈயத்தில் செய்யப்பட்ட குணுக்குகளை ஒத்ததாக சவுடிகள் தங்கத்தில் செய்யப்பட்டிருக்கும். தண்டட்டியானது சற்று மாறுபட்ட வடிவத்தில் இருக்கும். கோயில் தேர் வடிவத்தில் பெரும்பாலான தண்டட்டிகள் அமைந்திருக்கும். அரக்கில் செய்யப்பட்ட தண்டட்டியின் மேல் பகுதியில் தங்கத் தகடு ஒட்டப்பட்டிருக்கும். தங்கத் தகட்டில் குறைந்தபட்சம் இருபது கிராம் தங்கம் இருக்கும்.