
போர்ச்சுகல் நாட்டில் கேபிரியல் என்ற வணிகன் தன்னுடைய மூன்று மகள்களுடன் வசித்து வந்தான். பெரிய மகள் லூசியா, அடுத்தவள் லாரா, இளைய மகள் லையா. பொருட்களை வாங்கி விற்று வாணிகம் புரிந்து வந்த கேபிரியல், மாதம் ஒரு முறை, பணம் கொடுக்கல், வாங்கல் ஆகியவற்றை செய்வதற்காக சுற்றிலுமுள்ள நகரங்கள், கிராமங்களுக்குச் செல்வது வழக்கம். அந்த சமயத்தில் அவருடைய மனைவி ஆண்டிரியா, வீட்டை நிர்வகித்து வந்தாள்.
அந்த நாட்டில் ஆயுதம் ஏந்திய திருடர்கள் அதிகம். புத்திசாலியான ஆண்ட்ரியா, புதியவர்கள் எவருக்கும் வீட்டில் அனுமதியளிக்காமல், வீட்டைப் பாதுகாத்து வந்தாள். ஆண்ட்ரியா சமீபத்தில் இறந்து விட்டாள். வியாபர நிமித்தம் கேபிரியல் வீட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டும். திருடர் பயம் அதிகமாக இருக்கின்ற இந்தக் காலத்தில், மூன்று இளம் பெண்களைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்வது எப்படி, என்ற குழப்பத்தில் இருந்தான் கேபிரியல்.