

அதிகாரி வர நேரம் இருக்கிறதென்றும், பக்கத்தில் வேறு வேலைகள் இருந்தாலோ, சாப்பிடாமல் வந்திருந்தாலோ அதை முடித்து வருமாறும் அலுவலத்தின் முன் பகுதியில் இருந்த வயதான அம்மா கூறினார்.
'இவருக்கு இந்த அலுவலகத்தில் என்ன வேலையாக இருக்கும்? சரி எதுவாக இருந்தால் நமக்கென்ன? அவர் கூறுவது போல கடைப் பக்கம் சென்றால் அருணின் நினைவும் வந்துவிடும். அவனுடன் பழகத் துவங்கிய பிறகுதான், எங்கு வேண்டுமானாலும், எதையும் சாப்பிடுகிற பழக்கமே உருவானது. இப்போது அவன் இல்லை. அவன் பரிசாகக் கொடுத்த குழந்தை இடுப்பில் உட்கார்ந்திருக்கிறது....'
"ம்மா... பசிக்கு... ம்மா... ம்மா..." அதற்கு மேல் பேசத்தெரியாமல் வயிற்றைத் தொட்டுத், தொட்டுக் காட்டிய குழந்தையை அதட்டினாள்.
"ம்... இப்பத்தானே... வூட்டுல இட்லியை முழுங்கினே... இப்ப எதுக்குப் பசிக்குது... பசிக்குதுன்னு உயிர வாங்கிற..." விசாலாட்சி குழந்தையின் மீது எரிந்து விழுந்தாள்.
"ம்... ஏம்மா... கொழந்தய திட்டறே... உனக்கு வேண்டாம்னாலும் பரவாயில்ல, கொழந்தைக்காவது சூடா பாலையாவது வாங்கிக் கொடும்மா..."