

மாலை 4 மணியளவில்; லட்சுமி பாட்டி, புதுப்பட்டினம் கடைத்தெருவிலிருந்து மீன்களை விற்று முடித்துவிட்டு வீடு திரும்புகிறார். வீட்டிற்கு வந்த பின் கட்டிலில் படுத்துகிடந்த கணவனை பார்த்து, “என்னையா கால் ரொம்ப வலிக்குதா?”.
அதற்கு தாத்தா படுத்துக் கொண்டே, “என்னத்தா வந்துட்டியா..! கால்வலி பரவாயில்லன்னு நெனைக்கிறேன்.”
அதன்பின் பாட்டி, மீன் சட்டியை கீழே வைத்து விட்டு, டீ போட செல்கிறார். அந்தி மாலை தென்றல் காற்றை ரசித்துக்கொண்டே தாத்தாவும் பாட்டியும், திண்ணையில் அமர்ந்து டீயை குடிக்கிறார்கள்.
அப்போது, “ஏய்யா இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரியுமா?” என்று பாட்டி வினவ...
“என்ன நாள்ன்னு தெரியலையே யாத்தா!”
“இன்னைக்கு நம்ம கல்யாண நாள்ய்யா..! மறந்துட்டியா..?"
“கல்யாணமாகி, மொதராத்திரி அன்னிக்கி நீ வெக்கப்பட்டு என்னைய மாமானு கூப்ட்ட நாள எப்படி தா மறக்க முடியும் சொல்லு..!” என்று நக்கலாக பொக்கை வாயை காட்டி சிரித்தபடியே தாத்தா கூறுகிறார்.
பாட்டி வெட்கத்தோடு, “அட போயா எனக்கு வெக்க... வெக்கமா… வருது…!” என்று இருவரும் சந்தோசமாக பேசுகிறார்கள்.