

சென்ற இதழ் தொடர்ச்சி...
-ஜெயகாந்தி மகாதேவன்
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் சிங்கப்பூரில், நாங்கள் , கார்டன்ஸ் பை த பே (Gardens By The Bay) க்கு சென்றோம். அங்குள்ள பல வகையான தாவரங்கள் மற்றும் பூக்களின் அழகு பிரமிப்பூட்டியது.
பின், 2500 சதுர மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள, மெர்லியன் பார்க் சென்றோம். தேசிய வரலாற்று சின்னமாகிய, சிங்கத்தின் தலையும் மீனின் உடம்பும் கொண்டு, வாயிலிருந்து நீரை பீச்சியடிக்கும் மெர்லியன் சிலை அங்குதான் உள்ளது. மேடம் டஸ்ஸவ்ட்ஸ் வேக்ஸ் ம்யூசியம், யுனிவெர்சல் ஸ்டூடியோஸ், லிட்டில் இந்தியா ஆகிய புகழ்மிக்க சுற்றுலா இடங்களுக்கும் சென்று வந்தோம்.
யுனிவெர்சல் ஸ்டூடியோஸ் உள்ளே செல்ல, குறிப்பிட்ட பணத்தை செலுத்தி நுழைவு சீட்டு பெற்றுக்கொண்டால், உள்ளே, லஞ்ச் கூப்பன் உள்பட அனைத்துமே இலவசம் தான். ஏகப்பட்ட அரங்குகள், ரோலர் கோஸ்டர், நீரில் சென்று சாகசம் புரியும் விளையாட்டுக்கள், பொழுது போக்கு அம்சங்கள், பீச், ஸ்விம்மிங் பூல், ஃபுட் கோர்ட் என கணக்கில் அடங்காத விஷயங்கள் அங்கு இருந்தன. ஒரே ஒரு நீர் விளையாட்டில் நாங்கள் பங்கேற்றது செம த்ரில்லிங்கான அனுபவம். மற்றொரு நிகழ்ச்சியாக, கடலுக்குள் செல்லும் கப்பலில் நெருப்பு பிடித்தால், அதை எப்படி அணைப்பர் என்பதை செயல் முறையாக காட்டியதையும் பார்த்தோம். அனைத்து இடங்களையும் சுற்றி வரவும், மற்றும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவும் ஒரு நாள் பத்தாது என்பதே உண்மை.
புத்தாண்டுக்கு முந்தின நாள் சாயங்காலம், ஆறு மணிக்கு மேல், மெரினா சான்ட்ஸ் பே (Marina Sands Bay) அருகில் மணல் பரப்பில் அமர்ந்து, நீருக்கு மேல் நடை பெறுகிறாற்போல் காட்டிய கலர்ஃபுல்லான 'லைட் அன்ட் வாட்டர் ஷோ (Light and Water Show) ஒன்றை கண்டு ரசித்தோம். இரவு, ஸ்டார் ஹோட்டலில், சுவையான டின்னரை முடித்தோம். சிங்கப்பூர் உட்பட பெரும்பாலான வெளிநாடுகளில், வீடுகளிலும், பொது இடங்களிலும் மக்கள் பட்டாசு வெடிப்பதற்கு தடை உண்டு. அதற்குப் பதில், அரசாங்கமே, விசேஷ தினங்களில், குறிப்பிட்ட ஒரு திறந்த வெளியிடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், மக்களுக்கு அறிவித்துவிட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவர். பொதுமக்கள் முன்கூட்டியே, அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ள பெரிய மைதானத்தில், கும்பல் கும்பலா வந்தமர்ந்து வாணவேடிக்கையை கண்டு களிப்பர். நான், என் கணவர், எங்கள் சக பயணிகள் நான்கு பேர் சேர்ந்து, நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, ரயிலில் சென்று, புத்தாண்டு பிறக்க அரை மணி நேரம் இருக்கும்போதே குறிப்பிட்ட மைதானத்தை அடைந்து, அமர்ந்துகொண்டோம்.
ஏற்கனவே, அங்கு, பல நாடுகளிலிருந்து வந்திருந்த, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு மக்கள் என பெரிய கூட்டம் கூடியிருந்தது. சரியா பன்னிரண்டு மணிக்கு வெடி சத்தம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து, நவீன பட்டாசு ரகங்கள் வானத்தில் சீறிப் பாய்ந்தும், பறந்தோடியும், நெருப்புப் பொரிகளை உமிழ்ந்தபடி, வண்ணங்களை வாரியிறைத்து, மாயாஜாலம் புரிந்தன. பத்து நிமிடங்கள் தொடர்ந்த இந்நிகழ்வை கண்ட பார்வையாளர்கள், "வாவ்", "சூப்பர்", "ஆ... ஊ..ஹோ..." என்றெல்லாம் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியையும், பிரமிப்பையும் வெளிப்படுத்தினர். எங்களுக்கும் புத்தாண்டை புதியதொரு நாட்டிலிருந்து தொடங்கியது மகிழ்ச்சியை அளித்தது. பின், கூட்டம் கலைய ஆரம்பித்தது. ரோட்டை கடந்து ரயிலை பிடிக்க ஸ்டேஷன் செல்ல வேண்டும். ரோட்டில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. என் உடன் வந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றுவிட்டனர். நெரிசலில் சிக்கிக்கொண்ட நான் பயத்தில், "ஹெல்ப்... ஹெல்ப்..." என கத்த ஆரம்பித்தேன். உடனே கூட்டத்தில் வந்த இளைஞர்கள் சிலர் முயற்சி செய்து, விஐபி க்களுக்கு பாதுகாப்பு செய்வது போல், என்னை சுற்றி ஒரு வளையம் அமைத்து, பத்திரமாக ஸ்டேஷனுக்குள் கொண்டுபோய் விட்டனர். மனிதாபிமானம் மிக்க அவர்களின் செயல், வாழ்நாள் முழுக்க என் நினைவில் நிற்கக் கூடிய ஒன்று. பின் என் உடன் வந்தவர்களை எல்லாம் சந்தித்து, ரயில் பிடித்து, ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
மறுநாள், பொட்டானிக்கல் கார்டன், ஒரு இந்திய உணவகத்தில் லஞ்ச் என நாள் கழிந்தது. அடுத்தநாள், வாங்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டுடன் ஷாப்பிங் சென்று வந்தோம். பிறகு, புறப்பட தயாரா பேக்கிங் முதலிய வேலைகளை செய்து முடித்தோம். மூன்றாம் தேதி வெற்றிகரமா பயணத்தை முடித்த சந்தோசத்துடன் விமான நிலையம் சென்று, விமானத்தில், சென்னை வந்தடைந்தோம்.
'சொர்க்கமே என்றாலும் அது
நம்மூரு போலாகுமா'ன்னு சும்மாவே இருக்காம, நாலு அண்டை, அயல் நாடுகளைப் பார்த்து வருவது, உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் என்பதே உண்மை.