-தா. சரவணா
இன்றைய காலகட்டத்தில், திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஆண்களுக்கு, பெண்கள் சரி வர கிடைக்காதச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய மற்றும் முழு முதல் காரணம், கருவில் இருப்பது பெண்ணாக இருந்தால் அதை அழித்து விடுவதுதான்.
கருக்கொலை என்பது தமிழகத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணத்துக்கு ஆசைப்படும் சிலரால், இன்னமும் ஒரு சில இடங்களில் கருக் கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நம் மாநிலத்தின் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 995 பெண் குழந்தைகள் ஆகும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தப் பாலின விகிதம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இதற்கான முக்கியக் காரணங்களுள் போலி டாக்டர்களின் பங்கும் உள்ளது. பணத்தாசைப் பிடித்த இவர்கள் இக்கருக் கலைப்பினை செய்துவருகின்றனர்.
அந்தந்த மாவட்ட மருத்துவப்பணி இணை இயக்குனர் அலுவலகங்கள் மூலமாக போலி டாக்டர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர் என்றாலும், அவர்கள் சிறைக்குள் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி விடுகின்றனர். போலி டாக்டர்களைப் பிடித்துவிட்டால், உள்ளூர் அரசியல்வாதிகள் தொடங்கி, கோட்டை அதிகாரிகள் வரையில் விட்டு விடுங்கள் என பரிந்துரைகளும் எழும்புகின்றன.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நபர், சட்ட விரோத கருக்கலைப்பு செய்வதில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்தார். அவருக்கு அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் இருந்த செல்வாக்கு காரணமாக அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தது. அப்போது அங்கு கலெக்டராக வந்த பாஸ்கர பாண்டியன், அதிரடி நடவடிக்கை எடுத்து எந்தச் சிபாரிசையும் ஏற்காமல், அந்த நபரை சிறைக்குள் தள்ளினார். இது பலரின் பாராட்டையும் பெற்றது.
இப்படி பெண் குழந்தைகள் என்றாலே கருவில் அழிக்கத் துடிக்கும் நபர்கள், தங்களைப் பெற்றதும் ஒரு பெண்தான் என்பதை உணர வேண்டும். எந்தக் குழந்தை என்றாலும் நன்கு படிக்க வைத்தால் மட்டும் போதும். அவர்கள் தாங்களாகவே சமூகத்தில் தடம் பதிப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அரசும், பெண் குழந்தை கல்விக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்து எந்தக் குழந்தை என்றாலும் அது நம் குழந்தை என்பதை மனதில் கொள்வோம். ஏமாற்றும் கும்பலை அடையாளம் காண்போம். கவனத்துடன் செயல்படுவோம். கருக்கொலைகளில் ஈடுபட்டிருக்கும் கயவர்களை காவல் துறையினருக்குக் காட்டிக் கொடுப்போம். அவர்கள் தக்க தண்டனைப் பெறும்படி செய்வோம்.