

'கூறை' என்பதற்கு புத்தாடை என்று பொருள். பெரியாழ்வார் இந்த கூறைப்புடவை (Koorai pudavai) பற்றி ஒரு பாசுரத்தில் மிக அழகாகப் பாடுகின்றார். பெரியாழ்வார் திருமகள் ஆண்டாள் எதையும் முன்னாலேயே செய்து பார்த்துவிடும் சுபாவம் உண்டு. எம்பெருமானுக்கு மாலை சாற்றுவதற்கு முன், தான் மாலைசார்த்தி அழகு பார்த்தார். விரும்பிய கணவனை அடைய நினைக்கும் பெண்கள் திருமண நாளுக்கு முன் என்ன நிலையில் இருப்பார்கள் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது.
காறை பூணும் கண்ணாடி காணும்
தன்கையில் கைவளை குலுக்கும்
கூறை உடலுக்கும் அயர்க்கும்தன்
கொவ்வை செவ்வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
பாயில் மா மணிவண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே
(பெரியாழ்வார் திருமொழி)
வாங்கி வைத்திருக்கும் ஆபரணங்களை மாற்றி மாற்றி போட்டுக் கொள்கிறாள். இது தனக்கு அழகாக இருக்கிறதா? என்று கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள். கைவளையல்கள் குலுங்க அந்த சத்தத்தைக் கேட்டு சிரிக்கிறாள்.
திருமணத்திற்கு என்று வாங்கிய கூறையை எடுத்து உடுத்தி, தன் வாயில் சிவந்த நிறம் பூசுகிறாள். பிறகு பெருமாளை நினைத்து பிதற்றுகிறாள்.
இந்தப் பிதற்றலுக்குக் காரணமாக இருக்கும் பொருட்களில் ஒன்று கூறைப்புடவை. கூறைப்புடவை பெரும்பாலும் பட்டுப் புடவையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். உண்மையில் பட்டுப்புடவை அவசியமில்லை. சாதாரண நூல் புடவை போதும்.
இந்த கூறைப் புடவை கொடுப்பதற்கு முன்னால் மணப்பெண்ணுக்கு தர்ப்ப வளையம் வைத்து நுகத்தடி துளையில் தங்கக் காசு வைத்து மந்திரங்களால் அபிஷேகம் செய்கின்ற முறை உண்டு. இந்த நுகத்தடி ஸ்நானம் முடிந்ததும் கூறைப் புடவை உடுத்துவார்கள்.
அந்தப் புடவையையும் திருமாங்கல்யத்தையும் பெரியோர்களும் சுமங்கலிகளையும் தொட்டு ஆசீர்வாதம் செய்யச் சொல்வார்கள்
இதை ஆண்டாள் பாசுரத்தில்,
இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டிக் கனா கண்டேன் தோழி நான்
இதில் இரண்டு செய்திகள் உண்டு.
1. இந்த கூறைப்புடவையை மந்திரக் கோடி என்பார்கள்.
2. இதனை மணமகனின் உடன்பிறந்தவள் மணமகளுக்கு தந்து கட்டச் செய்து அழைத்து வர வேண்டும்.
இந்த கூறைப் புடவையைக் கொடுக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. அது இந்திரனை நோக்கி சொல்லப்படுகிறது. அதைத்தான் இந்திரனுட்ட தேவர் குழாமெல்லாம் என்று பாசுரத்தில் சொன்னாள்.
பரித்வாகிர் என்று ஆரம்பிக்கும் அந்த மந்திரத்தின் பொருள் இதுதான்.
இந்திரத் தேவனே! இந்த மணப்பெண் உடுத்தியிருக்கும் புதிய புடவை எப்படி அவளைச் சுற்றி பாதுகாப்பாக இருக்கிறதோ அப்படியே உன்னைச் சுற்றி இப்போது எனது இந்த வேண்டுகோளும் நிற்க வேண்டும். நீ பெரியோர்களை கௌரவிப்பவன். அப்படிப்பட்ட உனக்கு ஏற்றவையாக எனது இந்த மந்திரம் இருக்கட்டும்.
இதற்குப் பிறகு மௌஞ்சி தாரணம் என சொல்லப்படுகின்ற தர்ப்பையால் முறுக்கப்பட்ட கயிறை மணப்பெண்ணின் இடுப்பில் கட்டி பிறகுதான் மணப்பெண் அக்னி அருகே அழைத்துச் செல்லப்படுகிறாள். அதில் கூறப்படும் மந்திரத்தின் பொருள் "ஏ ,மணப்பெண்ணே அக்னி அருகே சென்று திருமணம் செய்து கொண்ட பின் என்னுடைய இல்லத்திற்கு அஸ்வினி தேவதைகள் தங்கள் ரதத்தின் மூலமாக உன்னை அழைத்து வருவார்கள். அங்கு நீ தன்னிச்சையாக செயல்படுபவளாக இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய இல்லற தர்மத்தைப் பற்றியும் அந்த தர்மத்தைக் காப்பாற்றும் முறை பற்றியும் சேர்ந்து நடத்துவோம்" என்பதே அர்த்தம்.
பெண்ணை அடிமைப்படுத்தும் மந்திரம் என்று முழுமையாக அறியாதவர்கள் சொல்வார்கள். ஆனால், இந்த மந்திரம் பெண் இல்லத்து அரசியாக செயல்படும் தன்மை உடையவராக இருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறுகிறது.