சோற்றுக் கற்றாழையின் அழகு + அரோக்கிய நன்மைகள்!

சோற்றுக் கற்றாழை...
சோற்றுக் கற்றாழை...

சோற்றுக் கற்றாழை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ‘குமரி’ என்று ஒரு பெயரும் உண்டு. அதைச் சின்ன வயதில் இருந்தே சாப்பிட்டு வந்தால் ‘குமரி’போல் என்றும் இளமையாக இருக்கலாம். ரத்த ஓட்டம் நன்கு இருந்தால் இளமை மிடுக்கு வெளியில் தெரியும்தானே! இந்தக் கற்றாழையின் வேலை அதுதான். முகத்துக்குப் பூசும் cream, soap- இதிலெல்லாம் கற்றாழை இருக்கிறதா? எனப் பார்த்து வாங்கும் நீங்கள், இதை எப்படி உண்ணலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? எப்படி இருக்கும் என்றாவது தெரியுமா?

கற்றாழையின் தோலைச் சீவி எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் நுங்கு போன்ற ‘சோறு’ பகுதியை நன்கு கழுவ வேண்டும். வழவழப்பாக இருக்கும். பசை போக வேண்டும். அது போனால்தான் ‘சோறு’ கையில் நிற்கும். இல்லையேல் வழுக்கும். கசக்கும். வழவழப்புப் போனபின் துண்டுகளாக வெட்டி, சிறிது ருசிக்காக சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது ‘இந்து உப்பு’ போட்டு, மத்தியான உணவுடன் (மதியம் என்பது தவறு. அது மாலையைக் குறிக்கும். மத்தியானம் என்பதே சரி. மத்தியில் சூரியன் நிற்பதைக் குறிக்கும்) சேர்த்துச் சாப்பிடுங்கள். அல்சர் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள்  சாப்பிடுங்கள். மீண்டும் வலி என்பது வரவே வராது. இது உறுதி.

நாட்டு மருந்துக் கடையில் சொல்லி வைத்து கற்றாழையை வாங்கி வீட்டில் தொங்க வைத்து விடலாம். தினமும் ஒரு மடல் வெட்டி இதுபோல் உண்டு வாருங்கள். கொஞ்சம் வளர்ந்த கற்றாழையாக இருக்க வேண்டும். அப்போதுதான் ‘சோறு’ இருக்கும். திருஷ்டிக்கு கட்டும் இத்துனூண்டு கற்றாழை வாங்கிவிட வேண்டாம்.  சாப்பிடக் கஷ்டமாக இருந்தால் வெண்ணெய் எடுத்த மோரில் போட்டு மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி (சிறிது இந்து உப்பு சேர்த்து) குடித்து விடுங்கள். இளமையான வர்கள் மேலும் இளமையோடு இருப்பீர்கள். கொஞ்சம் வயதாகிவிட்டதாக எண்ணுவோர் மேலும் வயதாகாமல் பார்த்துக்கொள்ளலாம். இதன் பெருமை அறிந்து, லண்டன், பாரீஸ், ஜெர்மனி போன்ற இடங்களில் எல்லாம் இந்த சோற்றுக் கற்றாழையை அடுக்களையிலேயே வைத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து வெள்ளரிக்காய்!
சோற்றுக் கற்றாழை...

உபரிச் செய்தி ஒன்று: உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே ஒரு துண்டு கற்றாழையை வெட்டி ஒரு பக்கத் தோல் சீவி அந்தச் சோற்றுப் பகுதியை தீக்காயத்தின் மேல் வைத்துக் கட்டுங்கள். சின்னக் காயமாக இருந்தால் சிறிது நேரம் வைத்து எடுத்து விடுங்கள். பொங்குவது - கொப்புளமாவது, நீர் கோர்த்து சீழ் வைத்த புண்ணாவது என்ற எதுவுமே ஏற்படாது. எத்தனை பெரிய தீக்காயமாக இருந்தாலும், கற்றாழைக்கு இணையான ஒன்றை தீர்வாகப் பார்க்கவே முடியாது. குமரியை வளைத்துப் போடுங்கள். நீங்களும் குமரியாகவே இருப்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com