பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் ஆனால், அதே பூ கால்வாயில் விழுந்தால்?

Flower and Flowers in the sewer
flowerImg credit: AI Image
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் என்று முன்னோர்கள் சொல்வதை நாம் கேள்விப் பட்டிருப்போம். இயற்கையிலேயே நாருக்கென்று ஒரு விதமான வாசனையும் கிடையாது; வாழை மரத்தின் அடியிலே இருக்கும் வேர் பட்டையை தான் நாம் கிழித்து நாராக உபயோகிக்கிறோம். இந்த நாருக்கு ஒரு மணமும் இல்லை.

ஆனால் அதே நாரில் எந்த பூவை வைத்து நாம் தொடுக்கிறோமோ அந்தப் பூவின் வாசனை நாரில் வந்து விடும். நாரிலே தொடுத்த அந்தப் பூக்கள், நாரிலிருந்து கீழே விழுந்த பிறகும் கூட அந்த நாரில் அந்த வாசனை இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக மொத்தத்தில் இந்த பூக்களால் அந்த நாருக்கும் நன்மை. அதே சமயத்தில் அந்த பூக்களுக்கும் ஒரு கேடும் ஏற்படாது; வாசனையும் குறையாது.

சரி இப்போது இதே பூக்களை ஒரு கால்வாயில் போட்டால் என்ன ஆகும்? ஒரு கால்வாயில் உள்ள நீரில் அதிகமான துர்நாற்றம் அடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக ஒரு கூடை நிறைய பூக்களை அள்ளி அதில் போடுவோம் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்? ஒரு ஐந்து நிமிடத்திற்கு அந்த பூவின் வாசனை அங்கே இருக்கும். ஆனால் அதே சமயத்தில், அந்த பூக்கள் கால்வாய் நீருக்குள் முழ்க ஆரம்பித்து விட்டால் அந்த பூக்களும் தன் வாசனையை இழந்து துர்நாற்ற வாசனை தான் வரும். பிறகு, அந்த பூக்களை நாம் வெளியே எடுத்து எத்தனை தடவை கழுவினாலும் கால்வாயின் துர்நாற்றம் போகவே போகாது. மேலும், பூவின் வாசனையும் திரும்பி வராது. ஏனென்றால், கால்வாயில் உள்ள அழுக்கு நீருக்கு அத்தனை சக்தி.. அது தானும் கெட்டது மட்டுமல்லாமல் அதில் விழுகின்ற பொருட்களையும் கெடுத்து விடும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? சாணக்கியர் கூறும் 6 விதிகளின் 'சீக்ரெட் பார்முலா'!
Flower and Flowers in the sewer

இதே போலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும். ஒருவருக்கு நீங்கள் உதவ வேண்டும் அல்லது அவர்களோடு கூட்டு சேர வேண்டும் என்று நினைத்தீர்களே ஆனால், முதலில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு தான் முடிவெடுக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் உதவி செய்ய போகும் அல்லது கூட்டு சேரப் போகும் நபர் வாழை நாரைப் போல் இருந்தால் பிரச்னை இல்லை; உங்களுக்கும் நன்மை பயக்கும்; அவரும் நன்றாக இருப்பார். உங்களால் அவருடைய வாழ்க்கையும் செழிப்பாகும்.

ஒருவேளை நீங்கள் உதவி செய்யவோ அல்லது அவரோடு கூட்டு சேரவோ நினைக்கும் நபர் கால்வாய் நீரைப் போல் இருந்தால் அவர் கெட்டது மட்டுமல்லாமல் உங்களையும் கெடுத்து நஷ்டத்தை அளித்து மேலும் உங்களை படு குழியில் தள்ளி விட்டு விடுவார். இதில் நஷ்டம் அவருக்கு இல்லை; உங்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். அதிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும் என்று நினைத்தால் கூட உங்களால் அத்தனை சீக்கிரம் இயலாது.

ஆகவே நண்பரை தேர்ந்தெடுத்தாலும் சரி, ஒருவரோடு கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்தாலும் சரி, இல்லை யாருக்காவது எதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் சரி, அந்த குறிப்பிட்ட நபர் வாழை நாரைப் போல் உள்ளவரா? அல்லது கால்வாய் நீரை போல் உள்ளவரா? என்று யோசித்து பிறகு முடிவு செய்யவும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com