ஓவியம்: லலிதா
“புதுசா குடி வந்திருக்கீங்களாம்மா” என்றான் கார்பொரேஷன் குப்பை எடுக்கும் ஆள். அதற்குள் குப்பை வண்டியில் உட்கார்ந்திருந்த டிரைவர் சத்தம் போட்டான், “அங்கே என்னப்பா பேச்சு... நேரமாகுதில்ல... வாவா...” ஹாரனையும் அடித்தான். ‘கொஞ்சம் பொறு’ என்பதுபோல் சைகை காட்டிவிட்டு இவளிடம் திரும்பினான் அவன்.
“ஆமாம்பா... நாலஞ்சு நாள் ஆச்சு... ஏன்பா கேட்டே...” என்றாள் மங்களம்.
“இல்ல, வீட்டு வேலைக்கு ஆள் இருக்கு என்கிட்டே. வேணுமானா சொல்லுங்கம்மா, அனுப்பி வெக்கறேன்...” என்றான்.
“சரிப்பா, நானும் ஆள் கிடைக்குமானுத்தான் பாத்திட்டிருக்கேன்... நல்ல ஆளா இருக்கணும். வேலையில சுத்தம் வேணும். நேர்மை வேணும். சரியான நேரத்துக்கு வந்து வேலை பாக்கணும்... உனக்குத் தெரிஞ்சு ஆள் யாராவது இருந்தா சொல்லுப்பா...” என்றவள் உடனே “எவ்வளவு சம்பளம் கேட்பாங்க?” என்று இழுத்தாள்.
“அம்மா, நான்தான் அனுப்பி வைக்கறேனு சொல்லிட்டேனே, வருவாங்கம்மா, நீங்களே பேசிக்கங்க” என்று சொல்லிவிட்டு அவளது பதிலுக்குகூடக் காத்திராமல், ஓட்டமும் நடையுமாய் குப்பை வண்டியைப் பார்த்து ஓடிவிட்டான்.
மகன் மணிமாறன் சேலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். மருமகள் அனு நாமக்கல்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். சேலத்தில் இருந்து அனுவால் பஸ்ஸில் போய்வர முடியவில்லை என்பதால் மணிமாறனும் மாற்றல் கேட்டு வாங்கிக்கொண்டு நாமக்கல்லுக்கே வீட்டையும் மாற்றிக்கொண்டார்கள்.
சேலத்தில் வீட்டு வேலைகளை சுமதி பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கே யாரிடம் போய் வேலைக்கு ஆள் கிடைப்பாளா என்று கேட்பது என்று மங்களம் யோசித்துக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக குப்பை எடுப்பவன் ஆபத்பாந்தவனாக வந்து ஆள் அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டுப் போனதும் மங்களத்துக்கு கவலை போய், ஒரு நிம்மதி உண்டானது.
அடுத்த நாள் ஒரு பெண்மணி வந்து நின்றாள். வயது முப்பதுக்குக் குறையாது. கந்தசாமி சொல்லி யனுப்பியதாக சொன்னாள். “யார் அந்தக் குப்பை எடுக்கும் தம்பியா?” என்றாள் மங்களம். தலையை ஆட்டிவிட்டு வெட்கத்துடன் சொன்னாள், “அது எங்க ஊட்டுக்காரருதாங்க.”
தினமும் வரவேண்டும், சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதை அழுத்தமாய் சொல்லிவிட்டு, லீவு வேண்டுமென்றால் முன்கூட்டி சொல்லிவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லிவைத்தாள் மங்களம்.
“சரிம்மா, வந்திடறேன்” என்றவள் தனது சம்பளத்தையும் இரண்டாயிரம் என்று உடனே சொல்லிவிட்டாள். சேலத்தில் மூவாயிரம் கொடுத்துக்கொண்டிருந்த மங்களத்துக்கு இரண்டாயிரம் என்று அவள் சொன்னது நெஞ்சில் பாலைவார்த்தது போல இருந்தது. சேலத்தில் இருந்த வீட்டை விட இங்கே வீடும் பெரியது, வாடகையும் ஆயிரம் ரூபாய் குறைவு. யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டாள் மங்களம்.
மறுநாளிலிருந்து வேலைக்கு வர ஆரம்பித்தாள் அவள். வீட்டைப் பெருக்கித் துடைத்தாள். பாத்திரங்களை கழுவி கவிழ்த்துப் போட்டாள். காய்ந்த பாத்திரங்களை எடுத்து ஸ்டேண்டில் வைத்தாள். துணிமணிகளை வாஷிங் மெஷினில் போட்டு மொட்டைமாடியில் கிளிப் போட்டு காய வைத்தாள். காய்ந்த துணிமணிகளை மடித்து வைத்தாள். கதவுச் சந்து, ஜன்னல் சந்து, டேபிளுக்கடியில், ஸோஃபாவுக்கடியில் என்று பார்த்து பார்த்து சுத்தம் செய்தாள். இரண்டு முறை மாப்பு போட்டு துடைத்தும் விட்டாள். அவள் வேலை செய்தவிதம், அதன் நேர்த்தி எல்லாமே ரொம்பவும் பிடித்துப்போனது மங்களத்துக்கு.
வேலையெல்லாம் முடித்து, சோப்புப் போட்டு முகம் கைக்கால்களை கழுவி முந்தானையால் துடைத்துக் கொண்டு வந்து மங்களத்தின் முன் நின்றாள் வேலைக்காரி.
“அம்மா என் மொபைல் நம்பரைத் தர்றேன் குறிச்சுக்கங்க.” மொபைலைத் தேடி எடுத்து நம்பரை ஏற்றிக்கொண்டாள் மங்களம். அதே நேரம், “பேரு ராணினு குறிச்சுக் கங்கம்மா...” என்றாள் அவள்.
பெயரையும் நம்பரையும் மொபைலில் ஏற்றிவிட்டு, “டீ குடிக்கிறியா?” என்று கேட்டாள் மங்களம். சரி என்றவள், “உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, நானே டீ போட்டுத் தரட்டுமாமா” என்றாள். பழம் நழுவி பாலில் விழுந்தது போல அவள் சொன்னதும், நமக்கும் ஒரு வேலை மிச்சம் என்று நினைத்துக்கொண்டு சரியென்றாள் மங்களம்.
“மூணு டீயா போடுமா. ஐயா வெளியே போயிருக்கார். அவரும் இப்போ வர்ற நேரம்தான். திரும்ப ஒரு தடவை போடவேணாம் பார்...” என்று சொல்லிவிட்டு டீ.வி சீரியல் ஒன்றைப் பார்க்க ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரத்தில் டீ போட்டு முடித்து, ஒரு டீ கப்பை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து நீட்டினாள் ராணி.
டீ நன்றாகத்தான் இருந்தது.
ராணி, டீயைக் குடித்துக்கொண்டே, “நீங்க டீதான் குடிப்பீங்களாமா?” என்றாள். மங்களம், “ஆமாம்” என்று விட்டு “ஏன் கேட்கறே?” என்றாள்.
“இல்லே... இதே லைன்ல கடைசி வீடு ஒன்னு இருக்கு பாருங்க. மஞ்சள் கலர் பெயின்ட் அடிச்சிருக்கும் பாருங்க, அங்கேயும் நான்தாம்மா வேலை செய்யறேன். அங்கேயும் வேலையெல்லாம் முடிச்சிட்டு நான்தான் டீ போட்டுத் தருவேன். எல்லாருக்கும் நான் போடற டீ ரொம்பப் பிடிக்கும். ஆனா, அங்கே டீயும் போடணும், காபியும் போடணும்” என்று நிறுத்தினாள் அவள். மங்களத்துக்குப் புரியவில்லை.
பிறகு அவளே தொடர்ந்தாள். “பெரியவரும் பெரியம்மாவும் எப்பவும் காபிதான்மா குடிப்பாங்க. அவங்க மகனும் மருமகளும் இருக்காங்களே, டீதான் குடிப்பாங்க...” என்றாள். அவளே தொடர்ந்தாள், “ஒரு நாள் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்துடுச்சு... இனிமே வீட்டிலே டீ மட்டும்தான். காபி கிடையாதுன்னுடுச்சு மருமக. என்கிட்டே இனிமே டீ மட்டும்தான் போடணும்னு சொல்லிட்டாங்க. புருசனும் பொண்டாட்டியும் சம்பாதிக்கறாங்க இல்லே. அவங்க வச்சதுதான் சட்டம் அங்கே. இப்போ பெரியம்மாவும் ஐயாவும் டீதான் குடிக்கறாங்க... என்கிட்டே, “எங்களுக்கு வந்து வாய்ச்சது எங்களை ஆடிப்படைக்குது பாரு ராணி’னு புலம்புனாங்க பெரியம்மா. அவங்க மகன் இருக்காரே அவரு ஒரு வாயில்லா பூச்சிமா...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மொபைல் அடித்தது. எழுந்துகொண்டாள் மங்களம்.
ராணியும் சொல்லிக்கொண்டு கிளம்பி விட்டாள்.
லைப்ரரிக்கு போய்விட்டு திரும்பிய மணிமாறன் வீட்டுக்குள் நுழைந்ததுமே மங்களத்தைப் பார்த்து, “வீடே பளிச்னு இருக்கு... அத்தோட வாசனையாவும் இருக்கு...” என்றார் கண்களை விரித்துக்கொண்டு. அத்துடன் நில்லாமல், “எல்லாத்தையும் நீட்டா ஒதுக்கியும் அடுக்கியும் வச்சிருக்கு” என்றும் பாராட்டினார்.
“புதுசா ஒரு வேலைக்காரி வந்தாங்க... ராணின்னு பேரு... சுமதியை விட இவ நல்லாவே வேலை பண்றாங்க... சம்பளம் ரெண்டாயிரம் கேட்டா. சரின்னுட்டேன். அவ செய்யற வேலைக்கு ரெண்டாயிரம் தாராளமா தகும். அதுமட்டுமா, அவளை டீ குடிக்கறியானு மட்டும்தான் கேட்டேன். உடனே உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நானே டீ போட்டுத் தரட்டுமானு கேட்டுட்டு உடனே டீயும் போட்டுக் கொடுத்தாங்க... டீ நல்லாத்தாங்க இருந்துச்சு...” என்றவள் ஓடிப்போய் மிச்சம் இருந்த டீயை சூடேற்றி ஒரு கப்பில் ஊற்றி எடுத்து வந்து மணிமாறனிடம் நீட்டினாள்.
டீயை உறிஞ்சியவர், “நல்லாத்தான் இருக்கு...” என்றார்.
“ஆனாலும் இவ வேண்டாம்ங்க...வேற வேலைக்காரிதான் பார்க்கணும்...” என்றாள். திகைத்துப் போனார் மணிமாறன்.
“என்ன சொல்றே மங்களம், இப்போத்தானே சுமதியை விட இவ ரொம்ப நேர்த்தியா வேலை செய்யறானு பாராட்டினே. உடனேயே வேற வேலைக்காரி பார்க்கனுங்கறே...” என்று புருவத்தை வளைத்தவர், தொடர்ந்து சொன்னார், “நேத்து எப்படி கிடந்த வீடு, இப்போ எப்படி பளிச்னு இருக்கு. இப்படி வேலை செய்யறவளை ஏன் வேண்டாங்கறே?” என்றார் புரியாமல்.
“நல்லாத்தான் வேலை செய்யறா. ஆனா வாய் கொஞ்சம் ஜாஸ்தி...” என்றாள்.
புரியாமல் விழித்தார் அவர்.
“இவ வேலை செய்யற வேற ஒரு வீட்டைப் பத்தி சொன்னா. அங்கே மாமியார் மருமக சண்டையாம். அடுத்த வீட்டுல நடக்கறதை ரசிச்சு ருசிச்சு நம்மக்கிட்டே சொல்றவ நாளைக்கு நம்ம வீட்டுல நடக்கறதைப் பத்தியும் வெளியேப் போயி சொல்லமாட்டானு என்ன நிச்சயம்... அதான் வேற வேலைக்காரி பார்த்துக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்...” என்று முடித்தாள் அவள்.
திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் மாறன்.