

வேப்ப மரத்தை 'கிராமத்து மருந்தகம்' என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை 'மிராக்கிள் மரம்' (Miracle Tree), அதாவது 'விந்தை விருட்சம்' என்று வர்ணிக்கிறார்கள்.
ஆன்மிகம் என்றாலும் வேம்பு; மருத்துவம் என்றாலும் வேம்பு. இது வேகமாக வளரக்கூடியதும், நீண்ட ஆயுள் கொண்டதுமான மரம். ஆலமரமும் அரசமரமும் மட்டுமல்ல, வேப்ப மரங்களும் நீண்ட காலம் வாழக்கூடியவை. 150 முதல் 200 ஆண்டுகள் வரை நிலைத்து நின்று நிழல் கொடுக்கும் ஒரு மரமாகும் வேப்ப மரம்.
வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான மரங்களுள் வேப்ப மரமும் ஒன்று. வேப்ப இலைகளைத் தொட்டு வரும் காற்று ஒன்றே போதும், நோய்க்கிருமிகளை ஓட ஓட விரட்ட!
வேப்ப மரத்திற்கு இணையாக ஒரு மருத்துவ மரத்தைச்(Neem tree benefits) சொல்ல வேண்டுமென்றால், அது மேற்கத்திய நாடுகளில் போற்றப்படும் 'ஆலிவ்' மரம் ஒன்றுதான். பல் பராமரிப்புக்கு வேப்பங்குச்சி, சரும பராமரிப்புக்கு வேப்பிலை என இதன் பயன்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.
வேப்பிலை ஒரு பக்கவிளைவு ஏற்படுத்தாத இயற்கை பூச்சிக்கொல்லி (Pesticide). வேப்பங்குச்சியை வைத்துப் பல் துலக்கினால், உங்கள் வாய் சீக்கிரத்தில் 'மணிபர்ஸ்' வாயாக (மருத்துவச் செலவுமிக்க வாய்) மாறாது. கிராமப்புறங்களுக்குச் சென்றால் வேப்பங்குச்சியால் பல் துலக்கிவிட்டு, கரும்பு தின்னும் பெரியவர்களை இன்றும் நாம் பார்க்கலாம். அந்த வகையில் வேப்பங்குச்சியோடு ஒப்பிட்டால், பற்பசை (Paste) ஒரு 'வேஸ்ட்' தான்!
நமது ஆன்மிகத்தில் வேப்ப மரம் ஒரு பெண்ணாகவே (அம்மனாக) பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் ஒருசேர நட்டு வளர்ப்பார்கள்.
புளிய மரத்தில் வசிக்கும் 'காத்து கருப்புகளுக்கும்', பேய் பிசாசுகளுக்கும் வேப்பிலை என்றாலே நடுக்கம். அதனால்தான் பேய் ஓட்டுபவர்கள் வேப்பிலை கொத்தால் அடிப்பார்கள்; அந்தத் தீய சக்திகளும் 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று ஓட்டம் பிடிக்கும். காரணம், வேப்பமரம் காளியின் அம்சம் உடைய ஒரு 'மந்திரவாதி' மரம்.
வெப்பம் தரும் கோடை காலம் வந்தால் எதற்குப் பயம்? வீதிக்கு வீதி வேப்பமரம் இருக்கிறதே! ஆன்மிகம், நீண்ட ஆயுள், நல் ஆரோக்கியம் என அனைத்தையும் தரும் வேப்ப மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் கரம் கூப்பி வணங்குவோம்.