

'அன்பு' என்ற சொல் வெறும் சொல்லல்ல ஓர் ஆயுதம். நீங்கள் நினைக்கும் ஆயுதம் அல்ல. ஒருவனை நல்வழிப்படுத்தவும், தன்னுடன் பரிவோடு இணக்கமாக இருக்க வைக்கவும் உதவும் ஒரு பேராயுதம்..! அதை விளக்க ஒரு குட்டி கதை.
எல்லோரும் கதை சொல்ல ஆரம்பிக்கின்ற கோணத்திலேயே ஆரம்பிக்கின்றேன். ஓர் ஊர்ல, ஒரு அறிஞர் இருக்கிறார். அவர் பல புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிவியல் நோக்கத்துடனும், கண்ணோட்டத்துடனும் கண்டுபிடிப்பார். ஒரு நாள் அவருக்கு ஒரு யோசனை வந்தது. நாம் ஒருவரிடம் அன்பு காட்டுவதால், என்ன நிகழும் என்பதை ஆராய முடிவு செய்தார். அதன்படியே முதலில் மூன்று கூண்டுகளை சந்தைக்குச் சென்று வாங்கி வந்தார்.
மூன்று பூனைக் குட்டிகளை அந்த கூண்டுகளில் தனித்தனியாக வளர்க்க ஆரம்பிக்கிறார். மூன்று பூனை குட்டிகளுக்கும் சம அளவில் மூன்று வேலையும் சரிசமமாக சாப்பாடு போடுகிறார். ஆனால், முதல் கூண்டில் உள்ள பூனைக்கு மட்டும் அன்பு, பாசம், கருணை, நேசம் என்று எல்லாவற்றையும் காட்டுகிறார்.
அதேபோல் இரண்டாவது கூண்டில் உள்ள பூனைக்கு கோபத்தையும், பயத்தையும் காட்டுகிறார். பின், மூன்றாவது கூண்டில் உள்ள பூனைக்கு சாப்பாடு போடுவதோடு சரி எந்த தொந்தரவும், அன்பும், அக்கறையும் கொடுக்கவில்லை. சிறிது நாட்களுக்குப் பின், ஒவ்வொரு கூண்டையும் திறக்கிறார். முதல் கூண்டில் உள்ள பூனையானது அந்த அறிஞரிடம் பாசத்தோடு தாவுகிறது. அதேபோல் இரண்டாவது கூண்டில் உள்ள பூனையானது அவரைக் கண்டு மிகவும் பயந்து நடுங்குகிறது, பக்கத்தில் கூட வரவில்லை..! இறுதியாக, மூன்றாவது கூண்டில் உள்ள பூனையை பார்க்கும் பொழுது அந்த பூனையானது இறந்த நிலையில் காணப்படுகிறது.
இதைக் கண்டு அறிஞருக்கு ஒரு பக்கம் நாம் நினைத்த ஆராய்ச்சியை நாம் நினைத்தபடி செய்து விட்டோம். இருந்தாலும் மறுபக்கம் அவருக்கு அந்தப் பூனையின் இழப்பை நினைத்து வேதனையாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் அந்த அறிஞர் இறுதியில் என்ன பாடத்தை கண்டுபிடித்தார் என்றால், “கவனிக்கப்படாமல் இருக்கும் உயிரினங்கள் தான் உடலளவில் மோசமடைந்து இறக்க நேரிடுகின்றன..”
இதனை மனித வாழ்வோடு ஒப்பிடும் போது, அன்பு (power of love) காட்டப்படாமல், அரவணைப்பில்லாமல் கவனிக்கப்படாமல் இருக்கும் குழந்தைகள் சுலபமாக நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவை திறக்கக்கூடிய மந்திரச்சொல்..!
“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு..!”
(குறள்-75).
பொருள்: இவ்வுலகில் இன்பமாக வாழ்பவனின் சிறப்புக் காரணம் எதுவென்றால், அவன் அன்புடையவராக வாழ்ந்ததின் பயன் தான்.
அன்பெனும் ஆயுதம் அகிலத்தை கட்டிப்போடும். அன்பின் வழி நிற்போம். அனைவரிடமும் அன்போடு இருப்போம். குழந்தைகளிடம், அன்பு காட்டுவதை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அதே போல் நாமும் எல்லோரிடமும் அன்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்..!