
பாகம் - 32.
அதிகாரம் 39 இறைமாட்சி
பாகம் - 2
பொருட்பாலின் முதல் அதிகாரம்.
தமிழ் மொழியின் கம்பீரமாம் திருக்குறள் சொல்லும் அரச அரசியல் பற்றிய ஓர் குறட்பா பின் வருவது... இது அரசனுக்கு மட்டும் அல்ல இன்றைய நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்... நாம் ஒவ்வொருவரும் அரசராய் நினைத்துக்கொண்டு நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் பொதுமக்கள் என நினைத்து நம் நிலையை நாமே சீர்தூக்கிப் பார்க்க முடியும்.
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
ஆற்றல்மிகு படை - நாட்டுப்பற்று மிக்க குடிமக்கள்- குறையா வளம் - நாட்டின் நலமறிந்து செயல்படும் அமைச்சு -துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு -அழிக்க முடியாத காவல் - ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
சரி வாருங்கள் வழக்கம் போல நாம் நம் மாயாஜால உலகுக்குள் செல்வோம்.நம் பொன்னியின் செல்வனில் பின்வரும் ஒரு காட்சியே மேற்கூறிய அனைத்து பண்புகளையும் அழகாய் காட்டிவிடும் நண்பர்களே. "குறையா வளம்" மட்டும் வளமாய் தொடர்கிறது தனி பத்தியில்...
திருநாவலூரில் இராஜாதித்யர் முப்பதினாயிரம் வீரர்களுடன் தங்கியிருந்தார். பெண்ணையாற்றங் கரையிலுள்ள முடியூரில் சேர நாட்டுச் சிற்றரசன் வெள்ளன் குமரன் இருபதினாயிரம் வீரர்களுடன் முகாம் செய்திருந்தான். உன் பாட்டன் அரிஞ்சயன் என்னுடன் திருக்கோவலூரில் இருந்தான். நானும், அரிஞ்சயனும் ஐம்பதினாயிரம் வீரர்களை ஆயத்தம் செய்தோம். இன்னும் கொடும்பாளூர்ப் பெரிய வேளான், இன்று சோழ நாட்டுக்குச் சனியனாக முளைத்திருக்கும் பழுவேட்டரையன், கடம்பூர் சம்புவரையன், இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசனான முனையதரையன், மழநாட்டு மழவரையன், குன்றத்தூர்க் கிழான், வைதும்ப ராயன் முதலியவர்கள் தத்தம் படைகளுடன் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் தங்கியிருந்தார்கள். யானைப் படைகளும், குதிரைப் படைகளும் தெரிந்த கைக்கோளரின் மூன்று கைப் படைகளும் இங்கே முகாம் போட்டிருந்தன. இப்படித் தங்கியிருந்த படைகளுக்குள்ளே அடிக்கடி பயிற்சிப் போர்கள் நடக்கும். யானைகளோடு யானைகள் மோதும்போது பூகம்பம் வந்து விட்டதாகத் தோன்றும். குதிரைப்படைகளின் அணி வகுப்புகள் வேல்பிடித்த வீரர்களுடன் பாய்ந்து செல்லுங்கால் எழும் சத்தம் பிரளய கால சமுத்திரம் பொங்கிவருவது போலிருக்கும். வீரர்கள் வில்லுகளிலிருந்து அம்புகள் விட்டுப் பழகிக் கொள்ளும்போது அந்தச் சரமாரியினால் வானமே மறைந்துவிடும். எதிரிப் படைகளைத் தாக்குவதற்காக ஆயிரமாயிரம் வீரர்கள் 'நாவலோ நாவல்' என்று ஏககாலத்தில் கர்ஜித்துக்கொண்டு கிளப்பிப்பாயும்போது உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதாகவே தோன்றும். இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்குத் திரள் திரளாக ஜனங்கள் வருவார்கள்"
"இந்தத் திருமுனைப்பாடி நாட்டிலும் நடு நாட்டிலும் ஜனங்கள் மிக நல்லவர்கள். அதோடு வீரம் மிகுந்தவர்கள். இங்கே படை திரண்டிருந்தபோது அவர்களுடைய விவசாயத்துக்குப் பெரும் குந்தகங்கள் நேர்ந்தன. அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இத்தகைய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே இராஜாதித்யர் இந்த இரண்டு நாட்டிலும் பல ஏரிகள் தோண்டுவித்தார். கொள்ளிடத்தில் இருந்து புதிய ஆறு வெட்டிக் கொண்டு வந்து வீரநாராயணபுரத்து ஏரியில் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்தார்.
"அந்தச் சைன்யத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு முன்னால் வாயுவேக மனோவேகமாக ஓடிவந்து அறிவித்த நம் ஒற்றர்கள் அவ்வாறு சொன்னார்கள்."
"ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லதே என்று பராந்தக சக்கரவர்த்தி கூறினார். நம்முடைய சைன்யங்களைத் தொலைதூரம் பிரயாணம் செய்யப் பண்ணி, பிரயாணக் களைப்புடன் பகைவர்களின் நாட்டில் எதிரி சைன்யத்துடன் போர் புரியச் செய்வதைக் காட்டிலும் எதிரி சைன்யங்களை நமது நாட்டுக்குச் சமீபமாக இழுத்து அவர்களை நாலாபுறமும் மடக்கி, அதம் செய்வதுதான் நல்ல போர் முறை என்று சக்கரவர்த்தி கூறினார். எதிரி சைன்யம் வடவேங்கடம் வரை நெருங்கி விட்டதென்று தெரிந்தபிறகுதான் பிரயாணப் படுவதற்கு அநுமதி கொடுத்தார்.
"அநுமதி கிடைத்ததோ, இல்லையோ, இராஜாதித்யர் புறப்பட்டு விட்டார். மூன்று லட்சம் காலாள் வீரர்களும், ஐம்பதினாயிரம் குதிரை வீரர்களும், பதினாயிரம் போர் யானைகளும், இரண்டாயிரம் ரதங்களும், முந்நூற்றிருபது தளபதிகளும், முப்பத்திரண்டு சிற்றரசர்களும் அப்பெரும் சைன்யத்தில் சேர்ந்து சென்றார்கள். அவர்களில் ஒருவனாகச் செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.
(சோழநாட்டு வளத்துக்கோர் வளமான வர்ணனை...)
இப்படியாக என்னவெல்லாமோ வானத்தையும் பூமியையும் சேர்த்து எண்ணமிட்டுக்கொண்டு வந்தியத்தேவன் காவேரிக் கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அது திருவையாறுதானா என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அந்த அற்புத க்ஷேத்திரத்தின் மகிமையைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மைக்குச் கொஞ்சம் குறைவாகவே தோன்றியது. மரங்கள் என்ன செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன! பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக்காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான்! ஆகா! வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்துவிடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது? சம்பந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார்? இதோ ஞாபகம் வருகிறது! திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன! அடடா! இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமா யிருக்கிறது! உயர்ந்த மரங்களில் உச்சாணிக் கிளைகளில் குரங்குகள் ஏறுகின்றன ! ஆடல் பாடல்களுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன. யாழ், குழல், முழவு, தண்ணுமை முதலிய கருவிகளின் ஒலியுடன் சதங்கைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கின்றன. இங்கே ஆடுகிறவர்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆடியவர்களைப்போல் குரவைக் கூத்தர்கள் அல்ல. ஆகா! இங்கே கேட்பது பண்பட்ட இனிய கானம். கலைச் சிறப்பு வாய்ந்த பரத நாட்டியம் ஆடுவோரின் சதங்கை ஒலி. அதோ, ஆட்டிவைக்கும் நடன ஆசிரியர்கள் கையில் பிடித்த கோலின் சத்தம் கூடச்சேர்ந்து வருகிறதே!
(இப்படி கலையும் பண்பாடும் கலாச்சாரமும் பின்னிப் பிணைந்து நம் தமிழ் மொழியாம் உயிர் மொழியால் உயிரூட்டம் பெற்று இன்றும் அதே மாறா சுவை தருவதுதானே நம் உயர்தனிச் செம்மொழியின் சிறப்பு. அப்படித்தான் ஆஸ்தானப் புலவர்களுடன் சுந்தர சோழர் ... ஒரு காட்சி...)
அதிகாரம் 40 - கல்வி அதிகாரத்தில்...
தாமின் புறுவ துலகின் புறங்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
தம் மனதை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
கோட்டைத்தளபதி சின்னப் பழுவேட்டரையர் இத்தனை நேரமும் நின்று கொண்டேயிருந்தவர், சக்கரவர்த்தியைக் கைகூப்பி வணங்கி' "பிரபு! நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும்!" என்றார்.
"ஆ!தளபதியா பேசுகிறது? நீர் என்ன பிழை செய்தீர்? ஏதற்காக மன்னிப்பு? ஒரு வேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும், சூரியனுக்கு அளித்த குதிரைகளையும் திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ? சிவபெருமானிடமிருந்த சிவிகையையும் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டீரோ? செய்யக் கூடியவர்தான் நீர் !” என்று சுந்தரசோழர் சொல்லி மீண்டும் சிரித்ததும், சக்கரவர்த்தியுடன் சேர்ந்து புலவர்களும் சிரித்தார்கள். எல்லாரையும் காட்டிலும் அதிகமாக வந்தியத்தேவன் சிரித்தான். அதைச் சின்னப் பழுவேட்டரையர் கவனித்து அவனை நோக்கிக் கடுமையாக ஒரு பார்வை பார்த்தார். உடனே, சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கூறினார்:-
"அரசர்க்கரசே! நான் செய்த பிழை இதுதான். இத்தனை காலமும் நான் இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளைத் தங்களிடம் வரவொட்டாமல் தடைசெய்து வைத்திருந்தேன். அரண்மனை மருத்துவர் சொற்படி செய்தேன். ஆனால் இப்போது அது பிழை என்று உணர்கிறேன். இந்தப் புலவர்களின் வரவினால் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய்விட்டுச் சிரித்தீர்கள். அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின் முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன. நானும் மகிழ்ந்தேன். இவ்வளவு குதூகலம் தங்களுக்கு அளிக்கக் கூடியவர்களை இத்தனை நாள் தங்கள் சந்நிதானத்துக்கு வரவொட்டாமல் தடுத்தது என்னுடைய பெரும் பிழைதானே?...” என்றார்.
''நன்று சொன்னீர், தளபதி! இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா? 'வைத்தியர் சொல்லுவதைக் கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்" என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதன் காரணம் தெரிகிறது அல்லவா?” என்றார். சக்கரவர்த்தி.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் துறும் அறிவு.
கல்வியெனும் செல்வத்தின் இம்மாபெரும் சிறப்பால்தான் கற்றவரைக் காமுறுவர் கற்றறிந்தார்.