திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
Published on

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 43 

அதிகாரங்கள் - 60, 61 ஊக்கமுடைமை, மடியின்மை

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு.

உடல் முழுவதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்பட மாட்டார்கள்.

(வனத்தின் நடுவில் சோழ வீரர்கள்...)

இளவரசரை மகிழ்விப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த "ஏலேல சிங்கன் சரித்திரக்கூத்து ஆரம்பமாயிற்று

       இந்தசமயம் சோழவீரர்கள் இலங்கையில் பெரும் பகுதியை பிடித்திருந்ததுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தடவை தமிழ் வீரர்கள் ஈழநாட்டைக் கைப்பற்றியிருந்தார்கள்.

அப்போது அத்தமிழ் வீரர்களின் தலைவனாக விளங்கியவன் ஏலேல சிங்கன். அவனால் துரத்தப்பட்டு இலங்கை அரசன் சில காலம் மலைநாட்டில் போய் ஒளிந்திருந்தான். அவனுடைய புதல்வனின் பெயர் துஷ்டகமனு. இவன் பொல்லாத வீரன். இலங்கையைத் திரும்பவும் ஏலேல சிங்கனிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்று நெடுங்காலம் கனவு கண்டான். அவ்வீரன் சிறு பிள்ளையாயிருந்தபோது ஒருநாள் படுக்கையில் கையையும் காலையும் மடக்கி ஒடுக்கி வைத்துக்கொண்டு படுத்திருந்தான். அவனுடைய அன்னை, "குழந்தாய்! ஏன் இப்படி உன்னை நீயே குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய்? தாராளமாய்க் காலையும் கையையும் நீட்டிவிட்டுப் படுத்துக்கொள்வதுதானே!'' என்றாள். அப்போது துஷ்டகமனு, "தாயே! என்னை ஒரு பக்கத்தில் தமிழ் வீரர்கள் நெருக்குகிறார்கள். மற்றொரு பக்கத்தில் கடல் நெருக்குகிறது நான் என்ன செய்வேன்? அதனாலேயே உடம்பைக் குறுக்கிக்கொண்டு படுத்திருக்கிறேன்!" என்றான். இத்தகைய வீரன் காளைப் பருவம் அடைந்தபோது படை திரட்டிக்கொண்டு ஏலேல சிங்கனுடன் போருக்குச் சென்றான். அவன் கொண்டுபோன படைகள் சின்னாபின்னமாகிச் சிதறி ஓடிவிட்டன. அப்போது துஷ்டகமனு ஒரு யுக்தி செய்தான். ஏலேல சிங்கன் இருக்குமிடம் சென்று நேருக்கு நேர் நின்று, ''அரசே! தங்களுடைய பெரிய சைன்யத்துக்கு முன்னால் என்னுடைய சிறிய படை சிதறி ஒடி விட்டது, நான் ஒருவனே மிஞ்சி யிருக்கிறேன். தாங்கள் சுத்த வீரர் குலத்தில் பிறந்தவர். ஆதலின் என்னுடன் தனித்து நின்று துவந்த யுத்தம் செய்யும்படி அழைக்கிறேன். நம்மில் வெற்றி அடைபவருக்கு இந்த இலங்கா ராஜ்யம் உரியதாகட்டும்; மற்றவருக்கு வீரசொர்க்கம் கிடைக்கட்டும்!" என்று சொன்னான்.

       துஷ்டகமனுவின் அத்தகைய துணிச்சலையும் வீரத்தையும் ஏலேல சிங்கன் மிக வியந்தான். ஆகையால் அவனுடன் தனித்து நின்று போர் செய்ய ஒப்புக் கொண்டான். இடையில் வந்து குறுக்கிட வேண்டாம் என்று தன் வீரர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளை யிட்டான். துவந்த யுத்தம் ஆரம்பமாயிற்று. இந்தச் செய்தியை அறிந்து சிதறி ஓடிய துஷ்டகமனுவின் வீரர்களும் திரும்பி வந்து சேர்ந்தார்கள். நெடுநேரம் போர் நடந்தது. துஷ்டகமனுவோ தன் பிறப்புரிமையைப் பெறும் பொருட்டு ஆத்திரத்துடன் சண்டையிட்டான். ஏலேல சிங்கன் அந்த இளைஞனிடம் அனுதாபம் கொண்டிருந்தபடியால் பூரண வலியையும் உபயோகித்துப் போர் செய்யவில்லை. ஆகையால் ஏலேல சிங்கன் இறந்தான். துஷ்டகமனு முடிசூடியதும், ஏலேல சிங்கன் இறந்த இடத்தில் அவனுக்குப் பள்ளிப்படைக் கோயில் எழுப்பி அவனது வீரத்தையும் தயாளத்தையும் போற்றினான்.

 சிதைவிடத்து ஒல்கார் உரவோர்...

 (அநுராதபுரம் மகா போதி விஹாரத்தில் புத்த  பிக்ஷூகளும் அருள்மொழிவர்மரும்...)

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்  தாஅய  தெல்லாம் ஒருங்கு 

 அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். 

              ளவரசர் மீண்டும் சிரம் வணங்கி, "மகாகுருவே! அடியேன் புத்த சங்கத்தாருக்கு இன்னும் ஏதேனும் சேவை செய்யக்கூடியதாக இருந்தால் கருணைகூர்ந்து பணித்தருள்க!"  என்றார்.

         அத்தியட்சகர் புன்னகை புரிந்து, ''ஆம், இளவரசே! புத்த சங்கம் மேலும் தங்களுடைய சேவையை நம்பிக்கை யுடன் எதிர்பார்க்கிறது. அதற்கு முன்னதாக இன்னும் சில வார்த்தைகள் கூற வேண்டும். புத்த பகவான் கடைசித் திரு அவதாரத்துக்கு முன்னால் வேறு பல அவதாரங்களில் தோன்றியதாக அறிந்திருப்பீர்கள். ஒரு சமயம் சிபிச் சக்கரவர்த்தியாக அவதரித்துக் கொடுமை நிறைந்த இந்த உலகத்தில் ஜீவகாருண்யத்தின் பெருமையை உணர்த்தினார். ஒரு சிறிய புறாவின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத் தமது திருமேனியில் சதையைத் துண்டு துண்டாக அவர் அரிந்து துலாக்கோலில் இட்டார். அந்தச் சிபிச் சக்கரவர்த்தியின் வம்சத்திலே வந்தவர்கள் என்று சோழ குலத்தவராகிய நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். சிபியின் வம்சத்தில் வந்த காரணம் பற்றிச் 'செம்பியன்' என்ற பட்டப் பெயரும் சூடிக்கொள்கிறீர்கள். ஆனால், இதுவரையில் புத்த சங்கத்தார் அதை நம்பவில்லை. சோழ குலத்துப் புரோகிதர்கள் கட்டிய கதை என்றுதான் எண்ணியிருந்தார்கள். இன்று - தங்களுடைய அரும் பெரும் செயல்களைப் பார்த்த பிறகு, சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டி வருகிறது. புத்த பகவானுடைய பெருங் கருணையை மாயை காரணமாக இதுகாறும் சோழகுலம் மறந்திருந்தது. அந்தக் கருணை இன்றைய தினம் தங்கள் மீது ஆவிர்ப்பத்திருக்கிறது. அதற்கான தேவ சூசகமும் கிடைத்திருக்கிறது. இதோ!....' என்று கூறி அத்தியட்சக தேரோ பின்னால் திரும்பிப் பார்த்ததும், பிக்ஷுக்கள் சிலர் பீடம் ஒன்றில் சாய்ந்து படுத்திருந்த மற்றொரு பிக்ஷவைப் பீடத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிக்ஷுவின் உடம்பெல்லாம் இடைவிடாமல் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகள் வெடவெட வென்று நடுங்கின. கால்கள் நடுங்கின; உடம்பு நடுங்கிற்று; தலை ஆடிற்று; பற்கள் கிட்டின ; உதடுகள் துடித்தன; சிவந்த கண்களுக்கு மேலே புருவங்களும் அசைத்தன.

"இந்தப் பிக்ஷுவின் பேரில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் ஆவிர்ப்பவித்திருக்கிறார்கள். தேவர்கள் கருணை கூர்ந்து சொல்வதைக் கேட்டுக்கொள்ளுங்கள்!'' என்றார் மகா தேரோ.

              ஆவேசங்கொண்டிருந்த புத்த பிக்ஷுவின் வாயிலிருந்து நடு நடுங்கிக் குளறிய குரலில் ஏதேதோ மொழிகள் அதிவிரைவில் வந்தன. அவர் பேசி நிறுத்தியதும் அத்தியட்சக குரு கூறினார். "முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்களை ஆசீர்வதிக்கிறார்கள். முற்காலத்தில் தேவானாம்பிரிய அசோகவர்த்தனர் பாரத பூமியை ஒரு குடையில் ஆண்டு, புத்ததர்மத்தை உலகமெல்லாம் பரப்பினார். அத்தகைய மகா சாம்ராஜ்யத்துக்குத் தாங்கள் அதிபதியாவீர்கள் என்று தேவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள். அசோகரைப் போல் தாங்களும் புத்த தர்மத்தை உலகில் பரப்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். அசோகர் பாடலிபுத்திரச் சிம்மாசனத்தில் வீற்றிருந்து செய்த தர்மப் பெரும் பணிகளைத் தாங்கள் இந்தத் தொன்மை மிக்க அநுராதபுரத்தில் ஆரம்பித்து நடத்த வேண்டுமென்று கட்டளையிடுகிறார்கள். இளவரசே! தேவர்களுடைய கட்டளைக்குத் தங்கள் மறுமொழி என்ன?"

         இதைக் கேட்டதும் இளவரசர், "மகா குரு தேவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் சித்தப்படி நடத்திக் கொள்ளுவார்கள். ஆனால், அடியேனுக்கு இப்போது அவர்கள் இடும்பணி யாது என்று விளங்கவில்லையே?” என்றார்.

         "அதை நானே தெரிவிக்கிறேன்" என்று அத்தியட்சக தேரோ கூறிச் சமிக்ஞை செய்ததும், ஆவேசம் வந்திருந்த பிக்ஷுவை அப்பால் எடுத்துச் சென்றார்கள். பின்னர் பிக்ஷுத்தலைவர். கூறினார்:-  "இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள். மணி மகுடத்தைப் பாருங்கள். செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்காதனத்தில் அமர்ந்து, இந்த மணி மகுடத்தை அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகமனு சக்கரவர்த்தியும், தேவானாம்பிரிய திஸ்ஸரும், மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது! அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் - ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் - இதோ தங்களுக்காகக் காத்திருக்கிறது. இதில் அமரவும், இந்த மணி மகுடமும் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா?"

மடியில்லா மன்னவன் எய்தும்... உண்மைதான்...

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com