திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 49 

அதிகாரங்கள் 72 ,73 "அவையறிதல்" "அவையஞ்சாமை"

 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்  பாத்தியுள் நீர்சொரிந் தற்று

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல் வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர்ப்பாய்ச்சுவது போல பயன் விளைவிக்கும் .

 (சுந்தரச்சோழர் அரசவையில்...)

          "புலவர்களே! தமிழ்ப் பாடல்கள் கேட்டு அதிக காலமாயிற்று.என் செவிகள் தமிழ்ப் பாடலுக்குப் பசித்திருக்கின்றன. உங்களில் எவரேனும் புதிய பாடல் எதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார். 

            உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, "பிரபு! உலக புரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும் பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்த தமிழகமெங்கும் உள்ள பெளத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள். தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல்,மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தவேண்டும்!" என்றார். 

           "அப்படியே சொல்லவேணும்; கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன் "என்றார் சக்கரவர்த்தி. 

 புலவர் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார். 

                  "போதியந் திருநிழல் புனித! நிற் பரவுதும் 

                               மேதகு நந்திபுரி  மன்னர் சுந்தரச் 

                    சோழர் வண்மையும் வனப்பும் 

                               திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே!"

 பாடலைக்கேட்டதும் புலவர்கள் அத்தனை பேரும் 'நன்று! 'நன்று!  என்று கூறித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். 

          புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு, வியப்பு" என்றார் ஒரு வீர சைவக்கவிராயர். 

          "ஆம்; அது வியப்பான காரியந்தான். உலகபுரம் புத்த மடத்துக்கு நான் செய்த சேவை மிக அற்பம். அதற்கு இவ்வளவு பாராட்டு வேண்டுமா?” என்றார் மன்னர். 

            “சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை அநுபவித்தவர் யார் தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்திப் பாராட்டாதிருக்க முடியும்? இந்திரனும், சூரியனும், சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின் பயனை அநுபவித்திருக்கிறார்கள்! என்றார் மற்றோர் புலவர் சிரோமணி. 

(இப்படியாக தமிழ் மொழி தென்றலாய் தவழ்ந்து கொண்டிருந்த அச்சபையில் யாரோ ஓர் புலவர் பாடிய பாடல் ஒன்று பாடப்பட்டது ..அப்புலவரின் பெயர் என்ன என தங்களுக்குள் பேசிக் கொள்ளும் காட்சி...) 

நல்லன் சாத்தனார், ''அரசர்க்கரசே! அதுதான் தெரிய வில்லை! நாங்களும் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டு தானிருக்கிறோம். கண்டுபிடித்து அந்த மாபெரும் புலவருக்குக் 'கவிச் சக்கரவர்த்தி' என்று பட்டம் சூட்டவும் சிவிகையில் ஏற்றி அவரை நாங்கள் சுமந்து செல்லவும் சித்தமாயிருக்கிறோம். இதுகாறும் எங்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை" என்று சொன்னார். 

            ''அதில் வியப்பு ஒன்றுமில்லை. நாலுவரி கொண்ட பாடலில் இவ்வளவு பெரும் பொய்களை அடக்கக்கூடிய மகாகவிஞர் தமது பெயரை வெளிப்படுத்திக்கொண்டு முன்வர விரும்ப மாட்டார் தானே?" என்று மகாராஜா கூறியதும், புலவர்களின் திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே! ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை. என்ன மறுமொழி சொல்லுவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. 

           இந்த நிலைமையில் நமது வந்தியத்தேவன் துணிச்சலாக எழுந்து, "பிரபு! அப்படி ஒரே அடியாகப் பொய் என்று தள்ளி விடக்கூடாது. இல்லாத விஷயத்தைச் சாதாரண பாமர மக்கள் சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது ராஜதந்திர சாணக்கியம்; கவிகள் அவ்வாறு கூறினால் அது கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை...." என்றான். 

           புலவர்கள் அத்தனைபேரும் அவன் பக்கமாகப் பார்த்து “நன்று! நன்று!" என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள். 

          சக்கரவர்த்தியும் வந்தியதேவனை உற்று நோக்கி, "ஓ! நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டுவந்தவன் அல்லவா? கெட்டிக்காரப் பிள்ளை! நன்றாக என்னை மடக்கி விட்டாய்!" என்றார். பிறகு சபையைப் பார்த்து, 'புலவர்களே! பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும். ஏற்கனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணி மகுடம் உட்கார்ந்து அழுத்திக் கொண்டிருக்கிறது. 'புவிச் சக்கரவர்த்தி', திரிபுவன சக்கரவர்த்தி, 'எழுலகச் சக்கரவர்த்தி', என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறார்!" என்றார் சுந்தர சோழர். 

        இதைக் கேட்ட புலவர்கள் அத்தனை பேரும் ஆச்சரியக் கடலில் முழுகித் தத்தளித்தார்கள். 

கற்றாருள் கற்றார் எனப்படுபவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார் 

 

கற்றவர் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர் கற்றார் எல்லோரிடத்திலும் கற்றறிந்தவராக மதித்து சொல்லப்படுவார். 

          பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி தம் கையிலிருந்த ஓலைச் சுவடியிலிருந்து படிக்கத் தொடங்கினார். ஞானசம்பந்தர் மதுரை மாநகரைப் பார்த்ததும், "சிவபக்திச் செல்வத்திற் சிறந்த மங்கையர்க்கரசியார் வாழும் பதி அல்லவா இது?" என்று வியந்து பாடிய பதிகங்களை முதலில் அவர் பாடினார். 

         “மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை 

                   வரிவளைக் கைம் மடமானிப் 

           பங்கயச் செல்வி பாண்டிமா தேவி 

                    பணிசெய்து நாடொரும் பரவப் 

           பொங்கழலுருவன் பூத நாயகனால் 

                    வேதமும் பொருள்களும் அருளி 

           அங்கயர்க்கண்ணி தன்னொடும் அமர்ந்த    

                      ஆலவாயாவதும் இதுவே!"

           

           "மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் 

                     மணிமுடிச் சோழன்றன் மகளாம் 

            பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி 

                     பாங்கினாற் பணி செய்து பரவ

            விண்ணுனோர் இருவர் கீழோடுமேலும் 

                     அளப்பரிதாம் வகை நின்ற 

            அண்ணலார் உமையோடு இன்பறுகின்ற

                       ஆலவாயாவதும் இதுவே!" 

          என்னும் பாடல்களைக் கேட்டபோது செம்பியன் மாதேவியின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. அத்தகைய மங்கையர்க்கரசியைப் பெற்ற குலத்தில் தாமும் வாழ்க்கைப்பட்டு, மகாராணியாக வாழ்ந்திருக்கக் கொடுத்து வைத்திருந்த பூர்வ ஜன்ம பாக்கியத்தை எண்ணி எண்ணி மனம் பூரித்து மகிழ்ந்தார். 

        சம்பந்தர் மங்கையர்க்கரசியாரைப் போய்ப் பார்க்கிறார். பாண்டியமாதேவி அந்தப் பாலகரைப் பார்த்து, 'ஐயோ! இந்த இளம் பிள்ளை எங்கே? பிரம்ம ராட்சதர்கள் போன்ற சமணர்கள் எங்கே? இந்தப் பிள்ளை அவர்களுடன் எப்படி வாதப்போரிட்டு வெல்ல முடியும்?" என்று கவலையுறுகிறார். அதையறிந்த சம்பந்தர் பாண்டிமாதேவியைப் பார்த்துச் சொல்லுகிறார்:

 

                   "மானினேர் விழி மாதராய் வழுதிக்கு 

                            மாபெருந்தேவி கேள்! 

                    பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் 

                            என்று நீ பரிவெய் திடேல்! 

                   ஆனை மாமலை யாதியாய 

                             இடங்களிற் பல அல்லல் சேர் 

                   ஈனர்கட் கெளியேன் அலேன்திரு 

                              ஆலவாயரன் நிற்கவே!" 

        என்ற பதிகத்தைத் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய போது செம்பியன் மாதேவி தம்மையே மங்கையர்க்கரசியாகவும், பதிகம் பாடிய நம்பியையே ஞான சம்பந்தராகவும் பாவனை செய்து கொண்டு இந்த உலக நினைவையே மறந்து மனம் பூரித்தார். 

கற்றாருள் கற்றார்...மேன்மையிலும் மேன்மை...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com