
ஓவியம்: பத்மவாசன்
பாகம் - 22
திருக்குறளின் 22 ஆம் அதிகாரம் " ஒப்புரவறிதல்"
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
(முதலில் அத்தகு பேரறிவாளர்களின் நாட்டுச் செல்வ வளத்தை நோக்கி அதன்பின் அவர்களின் கொடை வளத்தைப் பார்ப்போம்... வாணர் குலம் பற்றி குழந்தை சோதிடரின் கவி பாடல்.)
"வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடி இருக்கிறார்கள்! ஒருவேளை நீ கேட்டிருக்கமாட்டாய்."
"ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்."
சோதிடர் உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:
வாணன் புகழுரையா
வாயுண்டோ மாகதர்கோன்
வாணன் பெயரெழுதா
மார்புண்டோ-வாணன்
கொடிதாங்கி நில்லாத
கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நில்லா
அரசு!"
சோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும் போது வெளியாயிற்று.
"கவி எப்படியிருக்கிறது?" என்று கேட்டார்.
(பழையாரையின் செழிப்பை வந்தியத்தேவன் வழிச் சென்று கண்டு பின்னர் சேக்கிழார் பெருமானின் அவர்களின் செந்தமிழால் சுவைப்போம்...)
"வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பி பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால் நம்முடன் பழையாறைப்பதிக்கு விஜயம் செய்யும்படி நேயர்களை அழைக்கிறோம்.
அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்த நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த் தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த இரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது!
நதிகளும், ஓடைகளும், தடாகங்களும், கழனிகளும் புது நீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும், புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. கொன்னை மரங்களில் பொன் வர்ணப் பூங்கொத்துக்கள் சரம் சரமாகத் தொங்குகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணிமாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளி வீசுகின்றன.
அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்தி முற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திர புரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நான்கு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படைவீடு, புதுப் படைவீடு, மணப்படைவீடு, பம்பைப் படைவீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன. இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை வானளாவும் மணிமாட கூடங்களுடன் விளங்குகிறது. சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரச குமாரனுக்கும் ஒவ்வொரு மகாராணிக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப் பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனா சக்தி போதாது.
இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான்,
"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை"
என்று வர்ணித்தார் என்றால், சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமா யிருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
(இத்தகைய செழிப்புமிகு நாட்டில் வாழ்ந்த பேரறிவாளர்களின் செல்வம் ஊர்மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போல அமைந்திருந்ததை பின்வரும் சில பகுதிகள் நமக்கு விளக்கும் நண்பர்களே.)
(நாம் ஏற்கனவே பாகம் 3 (நீத்தார் பெருமை)யில் சுந்தர சோழரின் வண்மைச் சிறப்பை விளக்கும்
" இந்திரன் ஏறக் கரி அளித்தார்
பரிஏ ழளிதார் ...
பாடல்களில் கண்டு மகிழ்ந்தோம். மேலும் சக்கரவர்த்தி அவர்களின் கொடைத்திறனை பழுவேட்டரையரின் வாயினின்றுச் சிதறும் கோப வார்த்தைகளில் கூடப் பிரதிபலிப்பதைப் பாருங்கள்.)
"அன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரை யருக்கு மிக்க எரிச்சலை உண்டு பண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கல்லவா அது ஒரு சந்தர்ப்பமாகப் போய்விட்டது? “ஜனங்களாம் ஜனங்கள்! அறிவற்ற ஆடுமாடுகள்! நாலு பேர் எந்த வழி போகிறார்களோ அதே வழியில் நாலாயிரம் பேரும் போவார்கள்! சுய அறிவைப் பயன்படுத்திக்கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது?" என்று தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு பொருமினார். "சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப் பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது! 'இந்த ஊருக்கு வரியைத் தள்ளிவிடு!', 'அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு!” என்று கட்டளையிட்டுக் கொண்டே போகிறார்! கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரிகொடுக்கும் கிராமமே இல்லாமற் போய்விடும். ஆனால், போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும் உணவுக்குத் தானியமும் அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும்.எங்கிருந்து அனுப்புவது?" என்று அவர் இரைந்து கத்தியதைக் கேட்டு அவருடைய பணியாட்களே சிறிது பயப்பட்டார்கள்.
(இளைய பிராட்டி குந்தவையோ...)
"இதற்குள் தேவாரப் பாடல் முடிந்து தான சாஸன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கர வர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது. "நமது திருமகளார் குந்தவைப் பிராட்டிக்கு நாம் சர்வமானியமாகக் கொடுத்திருந்த நல்லூர் மங்கலம் கிராமத்தின் வருமானம் முழுவதையும் இளைய பிராட்டியார் தஞ்சை புறம்பாடி ஆதுரசாலைக்கு அளிக்க உவந்திருப்பதால், அந்த ஊர் நன்செய் நிலங்கள் யாவற்றையும் 'இறையிலி' நிலமாகச் செய்திருக்கிறோம்” என்று அந்த ஓலையில் சக்கரவர்த்தி தெரியப்படுத்தியிருந்தார். திருமந்திர ஓலை நாயகர் அதைப் படித்தபின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரை யரிடம் கொடுக்க, பழுவேட்டரையர் அதை இருகரங்களாலும் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டு கணக்காயரிடம் கொடுத்துக் கணக்கில் பதிய வைத்துக்கொள்ளும்படி சொன்னார்.
பிறகு குந்தவைப் பிராட்டியின் தான சிலா சாஸனம் படிக்கப்பட்டது. மேற்கூறிய கிராமத்து சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமை களுடன் அநுபவித்துக்கொண்டு தஞ்சாவூர் சுந்தர சோழ ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு ஒன்றுக்கு இருநூறு கலம் நெல்லும் ஆதுர சாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்காகத் தினந்தோறும் ஐம்பது படி பசும்பாலும், ஐந்து படி ஆட்டுப்பாலும், நூறு இளநீரும் அனுப்ப வேண்டியது என்று கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்த துடன், எழுதியவன் பெயரும் எழுதியதை மேற்பார்வை செய்த அதிகாரிகளின் பெயர்களும் அதில் விவரமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.
(பொன்னியின் செல்வர் தன்னுடன் போர் புரிய இலங்கை மாநகர் புகுந்த போர்வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை சோழ நாட்டிலிருந்தே வழங்க ஏற்பாடு செய்திருந்தார் என்பதையெல்லாம் சென்ற பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.)
( பெரிய பிராட்டியார் செம்பியன் மாதேவி சோழ சாம்ராஜ்யம் முழுவதும் சிவாலயங்களை அமைக்கவும், புதுப்பிக்கவுமான திருப்பணிகளை மேற்கொண்டு டிருந்தார். மேலும் ஆங்காங்கே கிடைக்கும் அப்பர், சுந்தரர், சம்பந்தர் அவர்களின் தெய்வீகப் பதிகங்க ளையும், பாடல்களையும் சேகரித்துத் தனித்தனியாக தொகுக்கும் பெரும்பணியிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய ஆன்மிகப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சான்றோர்களுக்குப் பெரிய பிராட்டியாரின் வாய்மொழி வார்த்தைகளைக் கேளுங்கள்.)
"நீங்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு வேண்டிய சிவிகைகள், ஆட்கள், பரிவார சாதனங்கள், - எல்லாம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியின் அநுமதியைக் கோரி என் குமாரனிடமே செய்தி சொல்லி அனுப்புகிறேன்!" என்றார்.
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
கைமாறு கருதி மழை பொழிவதில்லை . அந்த மழையை போன்றவர்கள் கைமாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
இங்கு அம்மழை போன்ற பெரியோர்களைப் பொன்னியின் செல்வன் மூலம் சந்தித்த மனநிறைவுடன் அடுத்த வாரம் பார்ப்போம்...
(தொடரும்)