என்றென்றும் இளமையாக வாழ்வதற்கு திருமூலர் கூறும் உபதேசம்!

Thirumoolar's Beauty Tips
Thirumoolar's Beauty Tips

என்றும் இளமையாக வாழ யாருக்குத் தான் ஆசை இருக்காது. இருப்பினும் இது சாத்தியமா எனக் கேட்கும் பலரது கேள்விக்கும் திருமூலரின் உபதேசத்தை பதிலாய்த் தருகிறது இந்தப் பதிவு.

இன்றைய இளம் தலைமுறையினர் அழகை அதிகம் விரும்புகின்றனர். இதில் தவறேதுமில்லை. ஆனால், தங்களின் அழகை பல ஆண்டுகளாக பராமரித்து வருவது தான் கொஞ்சம் கடினம். ஏனெனில் வயதாக ஆக நம் உடலிலும் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். இதனால் சருமம் சுருங்கி வயதான தோற்றம் வருவதை யாராலும் தடுக்க இயலாது. ஆனால், சித்தர்கள் கூறிய சில உபதேசங்களை நாம் தொடர்ந்து பின்பற்றி வந்தால் எதையும் மாற்ற முடியும்.

ஆம்! என்றென்றும் இளமையை தக்க வைத்துக் கொள்ள திருமூலர் சில உபதேசங்களை அளித்துள்ளார்.

நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் ஆசைப்படுவார்கள். இதற்காக பலவிதமான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி முகத்தை பாழ்படுத்தி விடுகிறார்கள். ஆனால், திருமூலரின் உபதேசத்தின் படி என்றென்றும் இளமையாக இருக்க கடுக்காய் ஒன்றே போதும். அது எப்படி கடுக்காய் மட்டும் போதும் என நீங்கள் நினைப்பது சரி தான். இருப்பினும் நமது பண்டைய வரலாற்றை ஒருமுறை அலசிப் பார்த்தால், அதில் மூலிகைகளுக்கு என்றே ஒரு தனியிடம் இருக்கிறது. அவ்வகையில் கடுக்காய் நம் இளமையை தக்க வைப்பது மட்டுமின்றி, இளமையை மீட்டெடுக்கவும் உதவுகிறது.

ஒருவனுடைய உடல், ஆன்மா மற்றும் மனம் ஆகிய மூன்றினையும் சுத்தம் செய்யும் ஆற்றலை கொண்டது கடுக்காய். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்திற்கு இணையானது கடுக்காய் என்று சித்தர்கள் குறிப்பிடுவதால் இதற்கு அமுதம் என்ற பெயரும் உண்டு.

நமது உடலுக்கு அறுசுவையும் தேவை. அப்போது தான் உடல் சமநிலையாக இருக்கும். ஆனால் வாழைப்பூவைத் தவிர்த்து துவர்ப்பு சுவையுடைய மற்ற உணவுகளை பலரும் எடுத்துக் கொள்வதில்லை. கடுக்காய் துவர்ப்பு சுவையுடையது என்பதால், வயிற்றில் இருக்கும் அழுக்குகளை நீக்கி நம் உடலைப் பாதுகாக்கிறது. ரத்த விருத்திக்கு துவர்ப்பு சுவை இன்றியமையாத ஒன்று என்பதால், உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இளமை, வயதானபோதும்!
Thirumoolar's Beauty Tips

“காலை இஞ்சி

கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய்

மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே”

என்ற திருமூலர் சித்தரின் பாடல் கடுக்காயின் தேவையை உணர்த்துகிறது. அதாவது, 48 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு மற்றும் இரவில் கடுக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிழவனும் இளமையான தோற்றம் பெற்று குமரனாக மாறலாம். அனைவரது வீட்டிலும் அவசியமாக இருக்க வேண்டிய பொருள் கடுக்காய். இது நாட்டு மருந்து கடைகளில் விலைக்கு கிடைக்கும்.

நமது உடலில் உஷ்ணம், நீர் மற்றும் காற்று ஆகியவை தனது அளவில் இருந்து குறைவதாலும், அதிகமாவதாலும் தான் நோய்கள் ஏற்படுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், நீரினால் கப நோய்களும், காற்றினால் வாத நோய்களும் உண்டாகிறது. இதனைத் தீர்க்கும் அருமருந்தே கடுக்காய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com