
திருவள்ளுவர் தினம் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞரான திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் 2ம் நாளை, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் குறித்த சில விஷயங்களை இங்கே காணலாம்.
திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: நாயனார் தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானபங்கி, பெருநாவலர், செந்நாப்போதார்.
திருவள்ளுவர் எழுதிய மற்ற நூல்கள்:
ஞானவெட்டி, நவரத்தின சிந்தாமணி, பஞ்சரத்தினமாலை, திருப்புகழ் நட்பு சாஸ்திரம் ஆகியனவாகும்.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
தெய்வ நூல், முப்பா நூல் திருவள்ளுவம், தமிழ் மறை, பொதுமறை, உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து ஆகியவை ஆகும்.
உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று நாம் உழவர் தினம் கொண்டாடுகிறோம். அன்றே திருவள்ளுவர் திருக்குறள் பொருட் பாலில் உழவு என்ற தலைப்பில் பத்து திருக்குறட்பாக்களில் உழவையும், உழவர்களையும் போற்றியுள்ளார்.
திருவள்ளுவரை உக்கிர பெருவழுதியார், கபிலர், பரணர், நக்கீரர், கல்லாடர், சீத்தலை சாத்தனார், வெள்ளிவீதியார், மாங்குடி மருதனார், மோசுகீரனார், பெருஞ்சித்திரனார், பாரதம் பாடிய பெருந்தேவனார் அவ்வையார் போன்ற பெரும் புலவர்கள் போற்றி பாடியுள்ளனர்.
கன்னியாகுமரியில் நடுக்கடலில் திருவள்ளுவருக்கு சிலை கடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் உயரம் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலை 150 சிற்பக்கலைஞர்கள் மூலம் தினம் 16 மணி நேரம் 4 ஆண்டுகள் தொடர் உழைப்பின் மூலம் உருவானது.