தித்திக்கும் தீபாவளி!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
தித்திக்கும் தீபாவளி!
Published on

கல்கண்டு சாதம்

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 2 கப், நெய் ½ கப், முந்திரி திராட்சை தலா15, எலத்தூள் 1/2டீஸ்பூன், குங்குமப்பூ 1சிட்டிகை (ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும்.)

செய்முறை: அரிசியுடன் பால் + 2கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் குழைய வேகவிடவும். வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை, பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். கல்கண்டு கரைந்து, சாதத்தோடு‌ நன்றாகக் கலந்ததும் இறக்கவும். நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். இந்த நாளில் கலவை + மீதமுள்ள நெய் + ஏலப்பொடி + பாலில் கரைத்து குங்குமப்பூ ‌அனைத்தையும் கல்கண்டு சாதக் கவலையோடு சேர்ந்த கிளறி இறக்கவும்.

*************************************

பாதம் கீர் 

தேவையானப் பொருட்கள்:  பால் – 1 லி,  குங்குமம் பூ- சிறிதளவு, பாதம்-10, சாரபருப்பு- 50 கி, ஏலக்காய் – 2, நெய் – 1 ஸ்பூன், சோளமாவு -1 ஸ்பூன், சர்க்கரை தேவையான அளவு.

செய்முறை: பாதம் ஊற வைத்து, தோல் உறித்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும். பாலை சுண்ட காய்ச்சவும். சோளமாவை சிறிது நீரில் கரைத்து பாலில் ஊற்றவும், பால் திக்கானவுடன் காய்ச்சிய பாலில், நெய்யில் வறுத்த பாதம் பருப்பு, சாரப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தேவையான அளவு சர்க்கரை, குங்குமம் பூ சேர்த்து இறக்கவும். சூடாகவும் அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

- நாகஜோதி கிருஷ்ணன், சென்னை

*************************************

தீபாவளி தகவல்கள்:

‘போனஸ்’ வழக்கம் எப்படி வந்தது?

ந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வருவதற்கு முன்புவரை, வாரச் சம்பள முறைதான் நடைமுறையில் இருந்தது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மாதச் சம்பளம் நடைமுறைக்கு வந்தது. நான்கு வாரங்களுக்கு ஒருமுறையென சம்பளம் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது. வருடத்திற்கு 12 சம்பளம். ஆனால், ஒரு வருடத்தில் 52 வாரங்கள் வருவதால், 4 வாரக் கணக்கின்படி, 13 மாதச் சம்பளம் கிடைக்க வேண்டும். நாளடைவில், ஒரு மாதச் சம்பளம் தராமல் ஏமாற்றப் படுவதை தொழிலாளர்கள் உணர்ந்தனர்.

போராட்டம்

1930 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலுள்ள தொழிற் சங்கங்கள் விடுபட்ட ஒரு மாத சம்பளத்திற்காக பத்து ஆண்டு காலம் தொடர்ந்து போராடினார்கள். இதன் பிறகுதான் பிரிட்டிஷ் அரசு, அதைக் கொடுக்க முன்வந்தது.

1940ம் ஆண்டு, ஜூன் 30 அன்று இந்தியாவில் முதன் முதலாக, விடுபட்ட ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட்டது. நாளடைவில், மக்கள் மகிழ்வுடன் செலவு செய்து கொண்டாடும் தீபாவளி நேரத்தில், போனஸ் கொடுப்பது வழக்கமானது.

ஜாதி, மத, இனம், ஏழை, பணக்காரன் என்றில்லாமல், அனைவரும் அவரவர்க்கேற்ப கொண்டாடும் தீபாவளி சமயம் கிடைக்கும் போனஸ் உதவிக்கரம் நீட்டும் போனஸ் எனலாம்.

- ஆர். மீனலதா, மும்பை

 *************************************

மராட்டிய மாநில தீபாவளி

தீபாவளிப் பண்டிகையை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலவிதமாக பல பெயர்களில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் தீபாவளியை நாக சதுர்த்தி என்று நான்கு நாட்களாகக் கொண்டாடுவார்கள்.

முதல் நாள்  - எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ‘கங்காஸ்நானம்’ என்றும்  ‘மங்கள ஸ்நானம்’ என்று சொல்லி, அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியலை செய்துவிட்டு இனிப்பு சாப்பிடுவார்கள்.

இரண்டாம் நாள் -  குபேர லட்சுமி பூஜை கொண்டாடப்படும். அப்போது புதிதாக வாங்கிய துடைப்பத்துக்குக்  ( வீட்டைச் சுத்தம் செய்யும் விளக்குமாறு) கூட பூஜை செய்வார்கள். துடைப்பத்தை அவர்கள் லக்ஷ்மி என்றுதான் சொல்வார்கள். துடைத்திற்கு குங்குமமும் சந்தனமும் வைத்து, பூஜை செய்து பின்பு அதை உபயோகிப்பார்கள்.

மூன்றாம் நாள்   - அன்று ‘பட்வா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடுவார்கள். அன்று தங்கள் கணவருக்காக நோன்பு இருப்பார்கள்.

நான்காம் நாள்  -  அன்று கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை ‘பாவ் பீஸ்’ என்று அழைக்கிறார்கள். பண்டிகையின்போது சகோதர சகோதரிகளுக்காக பூஜை  செய்வதுடன் உடன் பிறந்தவர்களுக்கு ஆர்த்தி எடுத்து பரிசு கொடுப்பார்கள்.

மேற்கு வங்காளத்தில் தீபாவளி பண்டிகையை  துர்க்கைக்குரிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். வீடு மற்றும் கடைகளில் மாவிலைத் தோரணத்தினால் வாசல்படியை அலங்காரம் செய்வார்கள். பின்னர் மாலையில் தீபங்களால் அழகு படுத்துவார்கள் பட்டாசு வெடிப்பார்கள் தீபாவளி அன்று 14 வகையான கீரைகளை சமைத்து உண்பார்கள். தீபங்களை அலங்காரம் செய்யும்போது ஒரு வரிசைக்கு 14 விளக்குகள் வைப்பார்கள். இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தீபாவளிப் பண்டிகையை வெவ்வேறு பெயரில் கொண்டாடப்படுகிறது .

-உஷாமுத்துராமன்,  திருநகர்

*************************************

தீபாவளி குவிஸ்

தீபாவளி தமாக்கா தெரியுமா?


1) நரகாசுரனின் இயற்பெயர் என்ன?  

2) நரகாசுரனின் அம்மா யார்?

3) தீபாவளிக்காக எண்ணெய், சீயக்காய் தருவது எந்த கோவிலில்? 

4) பாதாள உலகில் இருந்து தீபாவளியன்று பூவுலகம் வருவதாகக் கூறப்படுபவர் யார்?

5) மகாவிஷ்ணு நரகாசுரனுடன் போரிட  சென்றபோது அவரது தேரோட்டியாக இருந்தவர் யார்? 

6) நரகாசுரனின் மகன் பெயர் என்ன?

7) தீபாவளி இன்னொரு பெயர் என்ன?

8) மகாவிஷ்ணு நரகாசுரனின் அப்பா சரியா? தவறா?  

9) தீபாவளி குளியலுக்கு என்ன பெயர்?

10) பட்டாசு என்ற பெயரின் மூலச்சொல் எது?

தெரியுமே! 

1) பௌன், 2) பூமாதேவி, 3) ஸ்ரீரங்கம் திருக்கோவில்,  4) மகாபலி,  5) சத்தியபாமா,  6) பகத்தன்,  7) நாக சதுர்த்தி, 8) சரி  (பகவான் வராக அவதாரம் எடுத்த போது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்),  9) கங்கா ஸ்நானம், 10) டப்பாஸ் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததே பட்டாசு என்ற பெயர்.

-பிரகதா நவநீதன் மதுரை.

*************************************      

தீபாவளி நினைவலைகள்...

தாத்தாவுடன் தீபாவளி

1970-ல் எங்கள் தலை தீபாவளி. டெல்லியில் இருந்து கும்பகோணம் வந்தோம். 93-வயது என்னுடைய தாத்தா! மிகவும் அற்புதமான மனிதர். அவருடன் தீபாவளி கொண்டாடியது மறக்கவே இல்லை! என் கணவர் ஆண்கள் எல்லோருக்கும்  டெல்லியிலிருந்து ஜிப்பா வாங்கி வந்திருந்தார் (பெரிய குடும்பம் 4 தம்பிகள், 4 அண்ணன்கள்) தாத்தாவுக்காக ஸ்பெஷல் ஜிப்பா! அவரிடம் கொடுத்து நமஸ்கரித்தவுடன், “என்ன மாப்பிள்ளை! நான் சின்னப்பையனா? வேஷ்டி உத்திரியம் தவிர வேறு எதுவும் போட மாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே?” என்று சொன்னவுடன் 

“தெரியும் தாத்தா. மாலா மிகவும் ஆசைப்பட்டாள். மற்றவர்களுக்கு வாங்கும்போது தாத்தா இதை போட்டுக்கொண்டால் எப்படி இருக்கும்? பார்க்க வேண்டும் என்று" ஆதலால் வாங்கினேன் என்றவுடன்...

என்ன ஆச்சரியம்! தாத்தா கஷ்டப்பட்டு அதைப் போட்டுக்கொண்டார். என்னிடம் அவ்வளவு வாஞ்சை! அனைவரும் ஆச்சரியப்பட்டனர் தாத்தாவை வணங்கி ஆசீர்வாதம் பெற்றோம். மறக்க முடியாத தீபாவளி.

வாசலில் குழந்தைகள் எல்லோருடனும் அமர்ந்து வெடிகள் மத்தாப்பு - இவற்றைப் பார்த்து அப்பப்பா சன்னதி தெருவே அசந்து போனார்கள்!! 

ஆயிற்று திரும்ப டெல்லி கிளம்பும் நாள் வந்தது… காலையிலிருந்து தாத்தா சோகமான முகத்துடன் என் உடனேயே இருந்து பல விஷயங்கள்  நிறைய அறிவுரைகள் கூறினார்

“தாத்தா உங்களை விட்டுப் போக வருத்தமாக உள்ளது என நான் கூற, எனக்குச் சமாதானம் சொல்லி, வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்க வேண்டும்” என அறிவுரைகள் கூறினார்

மாட்டு வண்டி வந்தது. ரயிலில் இரண்டு நாள் பயணம், அம்மா செய்து கொடுத்தவைகளை எடுத்துக்கொண்டு சாமான்களை வண்டியில் ஏற்றிவிட்டு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு தாத்தாவிடம் வந்தால் கண்ணீருடன் ஆசீர்வாதம் செய்த பிறகு எங்கள் பின்னேயே வந்து, வண்டி ஏறிய பிறகு, “ஜாக்கிரதையாக போய் சேர்ந்தவுடன் கடிதம் போடு” என்றவர் வண்டி கிளம்பிய பிறகு வண்டியை பிடித்துக்கொண்டு பின்னாலே தொடர்ந்து வந்தார்! தெரு முனைவரை வண்டி பின்னாலேயே வந்த காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது. மனம் முழுவதும் வேதனையுடன் சென்றேன். தாத்தா உருவம் மனதை விட்டு அகலவே இல்லை.  (குறிப்பாக வண்டியை பிடித்த படி தொடர்ந்து வந்தது.) 

எப்பேர்ப்பட்ட மனிதர்கள்! கடவுள் அருள் இருந்தால் மட்டுமே  இவையெல்லாம் கிடைக்கும்!

-மாலதி நாராயணன், சென்னை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com