அயராது உழைக்கும் நிலவழகி!

அயராது உழைக்கும் நிலவழகி!

யார் இந்த நிலவழகி? எதற்காக உழைக்கிறார்கள்? பெயரைக் கேட்டால் நன்றாக இருக்கிறதா? பார்க்கலாமா!

ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தனி ஆளாக தனது சிறிய காய்கறி – பழங்கள் கடையில் சோம்பலின்றி அயராது உழைக்கும் பெண்மணியைக் கண்டேன். மேலும் இவரது கடையில் பப்படம், சிப்ஸ், வெற்றிலை, பூ, அநேக வகை காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவைகள் உள்ளன. கால்குலேட்டரை வைத்து பரபரவென கணக்கு போட்டு சொல்லி பணம் வாங்குவார். சில சமயங்களில் மனக்கணக்குப் போட்டும் கூறுவதுண்டு. தேவையான பொருட்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவித்தால், அவைகளை வீட்டிற்கே கொண்டு வந்தும் கொடுப்பார்.

அவ்வப்போது அவரிடம், நானும் காய்கறிகள் – பழங்கள் போன்றவைகளை வாங்குவதுண்டு. சுறுசுறுவென ஓடி உழைக்கும் அப் பெண்மணியின் பெயர் ‘நிலவழகி’ எனத் தெரிய வந்தது. (அவருக்குச் சரியாக ‘ழ’ உச்சரிப்பு கிடையாத காரணம் ‘நிலாவலகி’ என்பார்.) சமீபத்தில் அவரிடம் எடுத்த சிறு பேட்டி இதோ!

நிலவழகி
நிலவழகி
Q

தங்களுடைய சொந்த ஊர் மற்றும் குடும்ப விபரம் கூறுங்களேன்...

A

பிறந்து வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வரண்டியேவல் என்கிற கிராமம். பெளர்ணமி இரவு பிறந்த காரணம் வீட்டில் எனக்கு ‘நிலாவலகி’ எனப் பெயரிட்டனர். நாங்கள் 5 பெண்கள், 3 பையன்கள். அம்மா – அப்பா இருவருமே விவசாயம் செய்து எங்களை வளர்த்தார்கள். என்னால் பத்தாவது வகுப்பு வரை கூட படிக்க இயலவில்லை.

Q

மும்பைக்கு வந்தது எப்படி?

A

1991ஆம் ஆண்டு திருமணமானது. கணவருக்கு மும்பையில் கார் ஓட்டுனர் வேலை. திருமணமானவுடன் அவருடன் மும்பை வந்து சேர்ந்தேன். 1992இல் மகனும் 1994இல் மகளும் பிறந்தனர்.

Q

கறிகாய் வியாபாரத்தை எப்போது ஆரம்பித்தீர்கள்?

A

ணவரின் மறைவிற்குப் பிறகு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல இருந்தது. STD Booth, 2 வீலர் ஒர்க்ஷாப் போன்ற இடங்களில் வேலை பார்த்தேன். சில நேரங்களில் தம்பி நடத்திவந்த கறிகாய் கடை செல்வதுண்டு.

தம்பி ஊர் சென்று விவசாயம் பார்க்கத் தீர்மானித்த காரணம், கடையை என்னிடம் ஒப்புவித்து ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் செய்யக் கூறினான். ஆரம்பத்தில் அநேக விஷயங்கள் புரியவில்லை. தம்பி கொஞ்சம் கற்றுக் கொடுத்தான்.

Q

காய்கறி – பழங்களை எங்கிருந்து வாங்கி வருகிறீர்கள்?

A

வாஷியிலுள்ள APMC மார்க்கெட் சந்தைக்கு தினசரி அதிகாலை சென்று தேவையானவைகளை பணம் கொடுத்து வாங்கி டெம்போவில் ஏற்றிக்கொண்டு வந்து, கடையருகே இறக்கிக்கொள்வேன். பிறகு அந்தந்த இடங்களில் வைத்து வியாபாரத்தை ஆரம்பிப்பேன். அனைத்தையும் சரியாக தெரிந்துகொள்ள பல நாட்கள் எடுத்தது. தொழிலில் முன்னேற வேண்டுமென்ற நோக்கம். முயற்சி இருந்த காரணத்தால் பழகிக்கொண்டேன். அந்தந்த சீஸனுக்கு ஏற்றமாதிரி காய்கறிகள் – பழங்கள், மற்றைய பொருட்களை 5 கிலோ, 3 கிலோ என்ற கணக்கில் வாங்கி வருவேன்.

Q

ஊர்ப்பக்கம் செல்வதுண்டா? கடையை யார் கவனித்துக்கொள்வார்கள்?

A

போவதுண்டு என்றாலும் குறைவான நாட்களே செல்வேன். அச்சமயம் மகன் அல்லது மகள் வந்து பார்த்துக் கொள்வார்கள். தம்பியும் வந்து ஒத்தாசையாக இருப்பான்.

Q

இவ்வளவு உழைக்கிறீர்களே... லாபம் ஏதாவது?

A

கிடைக்கும். ஒரு பில்டிங்கை ஒட்டி வெளியே இருக்கும் நடைபாதையில் கடை இருப்பதால், அநேக பொருட்களை ரோட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை. அதனால், முனிசிபாலிட்டிகாரர்களுக்கும் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும். லாபம் கிடைப்பதில் சிறுகச் சிறுக சேர்த்து ‘கல்யாண்’ என்கிற இடத்தில் ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறேன். செம்பூர் பகுதியில் வசிப்பதாலும், கடையும் இங்கேயே இருப்பதாலும், பக்கத்திலேயே ஒரு வாடகை வீட்டில் மகன், மகளுடன் வசித்து வருகிறேன். மகன் கம்ப்யூட்டர் எஞ்சீனியர், மகள் BMS (Media) படித்து தற்சமயம் இருவரும் வேலை பார்க்கிறார்கள். திருமணம் செய்ய வேண்டும். இறைவனின் அருளால் வாழ்க்கை சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ தடங்கல்கள், எதிர்பாராத சம்பவங்கள் அத்தனையையும் தாண்டி உழைத்துக்கொண்டிருக்கிறேன் ஒருவித தன்னம்பிக்கையுடன்.

நிலவழகியின் வாழ்வில் நிம்மதி நிறைந்து நீடூழி வாழ வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com