ஜனாதிபதி தேர்தல் அமெரிக்காவில் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நவம்பர் 5ல் பொதுத் தேர்தல். டொனால்டு ட்ரம்ப்பும், கமலா ஹாரிஸும் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆமாம், நம்ம ஊரு பெண்ணான கமலா அல்லவா அந்த உயர் பதவிக்குப் போட்டியிடுகிறார்!
கோபாலன் – ராஜம் கோபாலன் பெயர்த்தியும், டொனால்டு ஹாரிஸ்-சியாமளா மகளுமான கமலா ஹாரிஸுக்கு பூர்வீகம், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகே உள்ள துளசேந்திரபுரம்.
தாயார், சியாமளா தன்னுடைய 19வது வயதில் (1958) கலிஃபோர்னியா பல்கலை கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியலில் பட்டப் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர். 1964ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் பூரோஜெஸ்டிரோன் ஏற்பி மரபணு (Progesterone Receptor – PR) ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார் சியாமளா.
ஜமைக்கா நாட்டவரான, டொனால்டு ஜே. ஹாரிஸ், அதே கலிஃபோர்னியா பல்கலை கழகத்தில் படித்து பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
காதல் மணம் புரிந்து கொண்ட இவர்களுக்கு கமலா தவிர, மாயா என்ற இளைய மகளும் உண்டு.
இள வயதிலிருந்தே கமலாவுக்கு (ரொம்பவும் சொந்தம் கொண்டாடுகிறோமோ!) அரசியல் ஈடுபாடு இருந்தது. சட்டத் துறையில் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க ஜனநாயக கட்சியில் உறுப்பினராகி, தேர்தலில் வெற்றி பெற்று கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக 2011 முதல் 2017வரை பொறுப்பு வகித்தார். அதற்குப் பிறகு 2017 முதல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் செனட்டராகப் பணியாற்றி உதவி ஜனாதிபதியாக சிகரம் தொட்டிருக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராக ஒரு பெண் அதிலும் குறிப்பாக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ஒரு பெண் பதவியேற்றது இதுவே முதல் முறையாகும்.
பிறப்பினால் அமெரிக்க பிரஜையானாலும், கமலாவுக்கு இந்திய நினைவுகள் எப்போதும் உண்டு. தாயார் சியாமளா சொல்லிக் கொடுத்திருந்த ‘கொஞ்சம் கொஞ்சம்‘ தமிழும் அதற்குக் காரணம். ஆனால், தந்தை மொழி, நண்பர்கள் மொழி மற்றும் வெளிவட்டாரப் பழக்க மொழியின் ஆதிக்கம், அந்தத் தமிழை கமலாவின் மனதளவில், ஒருசில வார்த்தைகளாக மட்டும் தங்கச் செய்துவிட்டது. தொடர்ந்த சொற்பொழிவாகவோ, உரையாடலாகவோ அது நீடித்ததில்லை. ஆனாலும் தமிழ்நாட்டு உணர்வு உள்ளத்தை விட்டு நீங்காதிருந்ததால், தன் தாத்தா-பாட்டியைப் பார்ப்பதற்கு கமலா தன் தங்கையுடன் தமிழ்நாட்டிற்கு சிலமுறை வந்திருக்கிறார். அது சுற்றுலா சந்தோஷமாக இல்லாமல், தன் உறவினர்களை சந்திக்கும் பாச உணர்வாகவே இருந்தது.
அமெரிக்காவில் இறந்துவிட்ட தன் தாயாரின் அஸ்தியை இந்திய நதியில் கரைப்பதற்காக தன் தங்கை மாயாவுடன் வந்ததே அவருடைய கடைசி வருகை. இதற்காக உதவியவர், பாலச்சந்திரன், கமலாவின் தாய் மாமன். இவர் புதுடில்லியில் வசிக்கிறார். இந்திய அரசின் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான ஆய்வு அமைப்பின் முன்னாள் ஆலோசகராகப் பணியாற்றியவர். இப்போதைக்கு இவரும், சென்னையில் வசிக்கும் இவருடைய சகோதரி சரளாவும்தான் இந்தியாவில் வாழும், கமலாவின் உறவினர்கள்.
ஒரு சராசரி அரசியல்வாதி என்பதற்கும் மேலாக மனிதாபிமானம் மிக்க, மக்கள் நலன் காக்க விழையும் சமூக சேவகராகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் கமலா.
‘‘என் தாயார் சியாமளா கோபாலன், புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, மக்கள் உரிமைக்காகப் போராடியவரும்கூட. அவரை முன் உதாரணமாக வைத்துதான் நான் வாழ்ந்து வருகிறேன். என்னையும் என் சகோதரி மாயாவையும் பொறுப்புணர்வுடன் வளர்த்தவர் அவர். ‘நீ முதலிடத்தில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் கடைசி இடத்திற்கு வந்துவிடக் கூடாது‘ என்று சொல்லி எங்கள் தன்னம்பிக்கைக்கு உரம் சேர்த்தவர். என்னுடைய இந்த உயர்வுக்குக் காரணம் அவர் என்னை வளர்த்த விதம்தான். இப்போதும் சொர்க்கத்திலிருந்து அவர் என்னை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார்,’’ என்று நெகிழ்ந்து கூறுகிறார் கமலா.
இந்தியத் திறமை பல்வேறு துறைகளில் உலகெங்கும் பரவி வருகிறது. அவற்றில் அரசியலும் விதிவிலக்கல்ல என்பதை கமலா நிரூபித்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதியாகவும் நிரூபிப்பார் என்று நம்புவோம்!