கர்ப்பிணிப் பெண்களுக்கு பல் பிரச்னை ஏற்பட்டால் குழந்தைக்கு ஆபத்தா?

Toothache during pregnancy
Toothache during pregnancy

கர்ப்ப காலத்தில் இயல்பாகவே பெண்களுக்கு உடல் ரீதியான சில பிரச்னைகள் வருவது உண்மைதான். அதனால், கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்போதும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக இந்த நேரத்தில் கால்களில் வீக்கம், தைராய்டு மற்றும் ரத்த சர்க்கரை அளவு உயர்தல் போன்ற பிரச்னைகள் நிச்சயம் ஏற்படும். இவை அனைத்தையும் சமாளித்துத்தான் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், கர்ப்பிணிகளுக்கு பல் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், அது வேறு சில பிரச்னைகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது. 

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பல் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் தம்முடைய பற்களைத் தாமே பாதிப்படையும்படி செய்வதில்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களின் பற்களைப் பொறுத்துத்தான் பிறக்க இருக்கும் குழந்தைகளின் பற்கள் அமையும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

 கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணும் உணவில் கால்சியத்தின் அளவு குறைவாக இருந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான கால்சியத்தைத் தாயின் உடலிலுள்ள எலும்பு ஈடு செய்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் பல் பிரச்சினையால், குறைப் பிரசவத்துடன் குறைந்த எடையைக்கொண்ட குழந்தை பிறக்கும். இவ்வாறு குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கண் பார்வையில் குறைபாடு மற்றும் காது கேட்பதில் பிரச்னை உண்டாக வாய்ப்பு அதிகமாகிறது. இதனைத் தடுக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

கர்ப்பிணிப் பெண்கள் செய்ய வேண்டியவை:

  • ப்ளூரைடு டூத் பேஸ்ட்டைக்கொண்டு தினசரி இருமுறை பல் துலக்க வேண்டும். 

  • இரு பற்களுக்கு இடையில் அழுக்குகள் மற்றும் உணவுத் துகள்கள் சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  • பற்களில் பிரச்னை இருப்பதை நீங்கள் உணர்ந்தால், தாமதம் செய்யாமல் உடனே பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். 

இதையும் படியுங்கள்:
பெண்களின் கரு வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் அமிலம் எது தெரியுமா?
Toothache during pregnancy

பற்களைப் பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் கர்ப்பம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பாக பல் பிரச்னையை சரிசெய்ய மருத்துவரை அணுகினால், அவர் X கதிர்களை பற்களில் செலுத்தக்கூடும். ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் கர்ப்பமாக இருப்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் தெரிவித்துவிட்டால், பற்களில் செலுத்தப்படும் X கதிர்களின் அளவானது அதற்கேற்ப குறைவாக கையாளப்படும்.

பெண்களுக்கு பிரசவக் காலம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள். ஏனெனில், அளவிட முடியாத அளவிற்கு வலியைப் பிரசவக் காலத்தில் பெண்கள் அனுபவிக்கிறார்கள். இப்படியான சூழலில், தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். குறிப்பாக பல் குறித்த பிரச்னைகளுக்கு, குறித்த நேரத்தில் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com