துளசி என்னும் அருமருந்து!

துளசி என்னும் அருமருந்து!

தோட்டத்தில் எத்தனை செடிகள் இருந்தாலும் அது நந்தவனம் ஆகாது. அதுவே ஒரே ஒரு துளசி செடி இருந்தால் கூட அது நந்தவனமாக மாறிவிடும் என்று வேதம் கூறுகிறது. மூலிகைகளின் ராணி என போற்றப்படும் துளசியை பிருந்தை எனவும் அழைப்பார்கள்.

இது ஒரு சிறந்த மூலிகை செடி ஆகும் . இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. இதன் தாயகம் இந்தியா தான். இதனை விதைகள் மற்றும் இளம் தண்டு குச்சிகள் மூலம் வளர்க்கலாம். துளசியில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. கருந்துளசி, வெண்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி,சிவ துளசி, பெருந்துளசி, சிறு துளசி, கல் துளசி, நல் துளசி, நாய் துளசி, நில துளசி, முள்துளசி, கற்பூர துளசி என நிறைய வகைகள் உள்ளன.

பொதுவாக நாம் வெண் துளசியைத் தான் உபயோகப்படுத்துகிறோம். காட்டு துளசி என்ற ஒரு வகை உண்டு. இது மற்ற துளசி இலைகளைப் போல் மணக்காது. இதனை வெறுமனே துளசியை உண்பது போல் யாரும் உண்பதும் இல்லை. இது மருத்துவ பயன்பாட்டில் உள்ளது.

துளசி செடிகள் நோய்க்கு மட்டும் மருந்தாவது இல்லை. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் தன்மை கொண்டது.

1) ஜீரண சக்தியை உண்டு பண்ண கூடியது.

2) வாய் ,வயிறு ,குடல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க வல்லது.

3) துளசி இலைகளை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகிவர நீரிழிவு வியாதி நம்மை நெருங்காது.

4) உடலில் ஏற்படும் அரிப்பு, சொறி சிரங்குகளுக்கும் இதனை சிறிது உப்பு கலந்து கசக்கி அதன் சாறை தடவ நல்ல நிவாரணம் கிடைக்கும்.

5)இது ஒரு சிறந்த கிருமி நாசினி.

6)வாய் துர்நாற்றத்தை போக்க வல்லது.

7) துளசி சாறு சளி தொல்லை, ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு துளசி சாறுடன் தேன் கலந்து கொடுக்க சளி கரைந்து வெளியேறிவிடும். பெரியவர்கள் துளசியை மஞ்சள் தூள், மிளகு பொடி சேர்த்து கஷாயம் வைத்து பருக நன்கு கேட்கும்.

8) தினமும் இரண்டு துளசி இலைகளை சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்க நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

9) சுத்தமான ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை சுத்தம் செய்து சேர்த்து இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் அதன் நீரை வடிகட்டி பருக நம்மை எந்த நோயும் அண்டாது.

10) துளசி இலைகள் ஊறிய நீரை தினமும் பருக உடல் புத்துணர்ச்சி பெறும்.

மருத்துவ குணம் மிக்க இந்த மூலிகை செடிகளை நாம் வீட்டில் வளர்த்து சுற்றுச்சூழலையும் காக்கலாம்.G

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com