

கதை 1: வாட்சப் க்ரூப்:
சிவாவை அம்மா அழைத்தாள் “டேய்.. ஆஃபீசுக்கும் போகற வேலை இல்லை; வீட்ல சும்மாதானே இருக்கே? ஒண்ணு கேட்பேன் செய்வியா?"
"சொல்லும்மா.. வெட்டியா தான் இருக்கேன்னு குத்திக்காட்றே, பரவால்ல.."
"அடப்பாவி, அதெல்லாம் இல்ல. எங்க அண்ணன் பசங்க ஒரு வாட்சப் க்ரூப் ஆரம்பிச்சிருக்காங்க.."
"சரி, நீயும் ஜோதில ஐக்கியம் ஆகனுமா?"
"ஆமாண்டா.."
"அம்மா, உன் கிட்டே இருக்கறது பேசிக் மாடல். அதுல வாட்சப் எல்லாம் வராதும்மா, போன் பேசலாம்; மெசேஜ் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்; அவ்ளோ தான்!"
"சரி, அப்பா போன் ஆண்ட்ராய்டு போன் தானே? அதுல வாட்சப் ஓப்பன் பண்ணிக்குடுத்து எப்படி ஆபரேட் பண்றதுனு சொல்லிக்குடேன்."
"அட ஏம்மா? இனிமே வாட்சப் பழகி நீ என்ன பண்ணப்போறே? விட்டா ஃபேஸ்புக், ட்விட்டர், டிக் டாக், இன்ஸ்டா எல்லாம் ஓப்பன் பண்ணித்தானு சொல்வே போல."
"ஏண்டா? அதெல்லாம் நான் யூஸ் பண்ணக்கூடாதா?"
"அம்மா, அதெல்லாம் யூத் மேட்டர்மா, நீ வழக்கமா பார்க்கற சீரியல் இருக்கே? மதியம் 2 மணில இருந்து மிட் நைட் 12 வரை ஒரு சேனல் விடாம ஒரு சீரியல் விடாம விளம்பரம் வரும்போதெல்லாம் இங்கே மாத்தி அங்கே, அங்கே மாத்தி இங்கேனு பார்த்துட்டுதானே இருக்கே? வாட்சப் பழகி நீ என்ன பண்ணப்போறே?"
அம்மா முகம் சுருங்கி எதுவும் பேசாமல் உள்ளே போனாள். எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு இருந்த அப்பா, சிவாவை அழைத்தார்.
"சிவா, நீ குழந்தையா இருந்தப்போ மெழுகுவர்த்தி நெருப்பு ஜ்வாலைல கை வைக்கப்போவே, அது சுட்டுடும்னு அம்மா உனக்கு சொல்லி தள்ளி நிக்க வெச்சாங்க. விளையாடறப்ப குழில விழுந்துடக்கூடாதுனு எச்சரிச்சு உன்னை விலக்கி வெச்சாங்க. இப்படி உன்னோட ஒவ்வொரு அசைவையும் பாத்து, உனக்கு எது நல்லதுனு பார்த்து பார்த்து தனக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லித்தந்தாங்க... அவ்வளவு ஏன்? உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்றப்போ வர்ற மருமகளுக்கு சமைக்கத்தெரியுமோ தெரியாதோ, உனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிப்போனா எப்படி சமாளிப்பேனு தனக்கு தெரிஞ்ச சமையல் கலையையும் கத்துக்கொடுத்தாங்க. இப்படி பெற்றோர்கள் எல்லாருமே அவங்கவங்க குழந்தைக்கு அவங்களுக்கு தெரிஞ்ச எல்லா விஷயங்களையும் சொல்லிக்குடுத்துதான் வளர்க்குறாங்க.
ஆனா பெரியவன் ஆன பிறகு ஒரு சின்ன விஷயம் சொல்லித்தர உனக்கு மனசு வர மாட்டேங்குது; ஈகோ தடுக்குது. நாம எவ்ளோ பெரிய ஆஃபீசர், நாம இதை எல்லாம் சொல்லிக்குடுத்துட்டு இருக்கனுமா? என்ற கர்வம் வருது. உன் ஃபிரண்ட்ஸ், உன் கொலீக்ஸ் ஏதாவது கேட்டா அவங்களுக்கு ஓடி ஓடி போய் சொல்லித்தந்து, புரிய வெச்சு அவங்க பாராட்டனும்னு நினைக்கறே, உன் சொந்த அம்மாவுக்கு ஒரு உதவி செய்ய மாட்டேங்க்றே... என்னப்பா நியாயம் இது?"
அந்த நொடிப் பொழுதில் சிவாவின் கர்வம் மரண அடி வாங்கியது.
கதை 2: பெஸ்ட் ஒர்க்கர் விருது:
கம்பெனியின் 25 வது ஆண்டு விழா. எம். டி யாருக்கு சிறந்த பணியாளர் விருது தரப்போகிறாரோ என அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். ஜெனரல் மேனேஜர் சிவா தன் அசிஸ்டெண்ட் மேனேஜரும், நண்பனும் ஆகிய நந்தாவிடம் டிஸ்கஸ் பண்ணினார்.
“யாருக்கு இந்த விருது கிடைக்கும்னு நினைக்கறே?"
"இதுல என்னங்க சந்தேகம்? இந்த கம்பெனிலயே நீங்க தான் சீனியர், 20 வருச சர்வீஸ் வேற. நீங்க தான் ஹையஸ்ட் சேலரி வாங்கற ஆளு. உங்களுக்குத்தராம வேற யாருக்கு தரப்போறாங்க?"
இல்லை, எனக்கு என்ன டவுட்னா புரொடக்சன் மேனேஜர் கூட என் சர்வீஸ் தான்; சம்பளமும் நான் வாங்கறதை விட கொஞ்சம் தான் கம்மி. கம்பெனியோட புரொடக்சன் கச்சிதமா மெயிண்ட்டெயின் பண்றதுல கில்லாடி. பர்ச்சேஸ், மேனேஜர்க்கு எம்.டி கிட்டே நல்ல பேரு.. கம்பெனியின் செலவை மினிமைஸ் பண்றாரு, எங்கே எந்த பொருள் சீப் அண்ட் பெஸ்டா கிடைக்குதுனு பார்த்து கரெக்டா அதை அந்த இடத்துலயே போய் வாங்கறாருனு ஒரு நல்ல பேரு இருக்கு, அதான் காத்து எந்தப்பக்கம் அடிக்கும்னு டவுட்டா இருக்கு.."
"என்ன சார் சொல்றீங்க? ஒரு கம்பெனில புரொடக்சன் மேனேஜர் பர்ச்சேஸ் மேனேஜர் இவங்க 2 பேருமே ஜெனரல் மேனேஜருக்குக் கீழே தானே வருவாங்க? அவங்க எதுனா சிறப்பா செஞ்சா அந்த க்ரெடிட் ஜி.எம். ஆன உங்களுக்குத்தானே வரும்?
"சரி சரி.. பேச்சை நிறுத்து, எம்.டி மைக் முன் வந்துட்டாரு, இப்போ அறிவிப்பார்."
எம்.டி அருணாச்சலம் கணீர் குரலில் அறிவித்தார்...
"அனைவருக்கும் வணக்கம். கொரோனா வைரஸ் பிரச்னை வந்தப்ப ஒர்க் ஃப்ரம் ஹோம் அமலில் இருந்தது. எல்லாரும் அதை ஃபாலோ பண்ணீங்க. கம்பெனிக்கு தேவைப்படும்போது ஷிஃப்ட் முறைல ஆல்ட்டர்நேட்டிவ் ஆக உங்களுக்குள் மாறி மாறி ஒர்க் பண்ணீங்க. மகிழ்ச்சி. எல்லாருக்கும் மாசாமாசம் 2 நாள் சம்பளத்தோட லீவ் தர்றோம். எல்லாரும் அந்த லீவை யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா 25 வருசமா இங்கே தூய்மைப்பணியாளரா ஒர்க் பண்ற திருமதி. வனஜா ஒரு நாள் கூட லீவே எடுத்ததில்லை. கொரோனா பீரியட்ல கூட அவங்க கரெக்டா கம்பெனி வந்து க்ளீன் பண்ணிட்டு தான் போனாங்க. தூய்மை இந்தியா உருவாகணும்னா தூய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்படணும்; அவங்களுக்கான அதீத சம்பளம், வசதிகள் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். எனவே, அவங்களுக்கே அந்த பெஸ்ட் ஒர்க்கர் விருதையும், 1 லட்சம் ரூபாய் பரிசையும் அளிக்கிறேன்."
அனைவரும் கை தட்டினார்கள்.