படிக்காத மேதை - பெண் குழந்தைகளை படிக்க வைத்த மாமேதை!

காமராஜர்
காமராஜர்
Published on

படிக்காத மேதை, மிகப்பெருந் தலைவர் காமராஜர் பற்றின நினைவலைகள்:

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாளாகிய இன்று, அவர் முதலமைச்சராக இருந்தபோது தனிப்பட்ட முறையில் நான் பெற்ற சிறப்பான அனுபவம் ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

விருதுநகர் மாவட்டத்தில் தியாகராஜபுரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்தேன் நான். அப்போது எங்கள் ஊரில் எட்டாவது மட்டுமே படிப்பதற்கான வசதி இருந்தது. பையன்கள் எல்லாம் எட்டாம் வகுப்புக்குப் பின் சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் திருத்தங்கல், சிவகாசி போன்ற ஊர்களுக்கு நடந்து சென்று பள்ளி இறுதி வகுப்பு படிப்பை முடிப்பதுண்டு. பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறு சென்று வர அனுமதி இல்லை.

பெண்களின் படிப்பறிவு எட்டாம் வகுப்புக்குட்பட்டதாகவே இருந்தது. நானும் அதற்கு விதி விலக்கல்ல. எட்டாவது முடித்து விட்டு மேற்கொண்டு படிப்பதெல்லாம் எட்டாக்கனி என்றெண்ணி இரண்டு ஆண்டு காலம், ஆறு, நீச்சல்,மாந்தோப்பு, மாங்கா திருடுவதென சக பெண்களுடன் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில்தான் ஒரு முறை காமராஜர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்தார். அவரிடம் ஊரார் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பள்ளியின் நிலையை விளக்கிவிட்டு, "எங்க ஊர் பெண் குழந்தைகளும் உயர் கல்வி பெற ஆர்வமுடன் உள்ளனர். அதற்கு நீங்கதான் உதவ வேண்டும்." என்றனர்.

மனுவைப் படித்த அவர் எங்கள் பள்ளியை ஹை ஸ்கூலாக உயர்த்த உடனடியாக உத்தரவிட்டுச் சென்றார். ஒன்பதாம் வகுப்பு அட்மிஷன் ஆரம்பமானது. முதல் அப்ளிகேஷன் என்னுடையது. அதன் பின் பள்ளி இறுதி வரை படித்து முடித்து சென்னை வந்தேன்.

மேலும் படிப்பு, வேலை, நல்ல வாழ்க்கை என எல்லாம் சிறப்பாக அமைந்தது. எங்கள் வாரிசை உயர் கல்விக்கு அமெரிக்கா அனுப்ப முடிந்தது. உலகின் பல நாடுகளை சுற்றி வரும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. பணி ஓய்வு பெற்ற பின், பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பினால் இன்று ஒரு எழுத்தாளர் என்ற ஸ்டேட்டஸும் கிடைத்துள்ளது.

இத்தனை பெருமைகளுக்கும் பின்னணியாய் நிற்கும் கர்ம வீரர் காமராஜர் அவர்களை இன்று மட்டுமல்ல என்றென்றும் நினைக்காமல் இருந்ததில்லை. எனக்குக் கிடைத்த இந்த மாதிரி வாய்ப்பு மேலும் எவ்வளவோ பேருக்கும் கிடைத்திருக்கும். அவர்கள் அத்தனை பேர் மனதிலும் அவர் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது நிச்சயம். என்றென்றும் வாழ்க அவர் புகழ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com