
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வசித்து வருகிறார் நிர்மலா தேவி. அவருக்கு வயது ஐம்பத்தி ஐந்து. கடந்த எட்டு ஆண்டுகளாக ‘வின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை’ எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கட்டணமில்லாமல் மாலை நேர டியூசன் வகுப்புகள், சேவை மனப்பான்மை கொண்ட ஆசிரியைகளை வைத்து நடத்தியுள்ளார். இப்போதும் அந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இது ஒருபுறம். கொரோனா காலத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வயோதிகர் களுக்கு ஒரு நாளும் இடைவெளி விடாமல் மதிய நேரத்தில் முழு சாப்பாடு வழங்கி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
இந்தச் செயல்பாடு எப்போது ஏற்பட்டது? உங்களுக்கு ஏன் இது தோன்றியது?
கொரோனா காலத்தில் பெருமளவு போக்குவரத்து இல்லை. கடைகள் இல்லை. அப்போதுதான் இந்த எண்ணம் தோன்றியது. ஆதரவற்ற முதியோர்கள், வீட்டில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிகர்கள் ஒரு வேளை சோற்றுக்கு என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். என்னுடைய வீட்டில் வைத்தே நம்மால் இயன்ற அளவுக்கு நான்கைந்து வயோதிகர்களுக்கு மதிய உணவாக முழு சாப்பாடு அவர்களுக்கு திருப்தியாகப் போட வேண்டும் என்று முடிவெடுத்தேன். 2௦2௦ல் விட்டிலேயே தொடங்கினேன். முதலில் தினசரி நான்கைந்து வயோதிகர்கள் மட்டும் மனதார வயிறாரச் சாப்பிட்டுப் போனார்கள்.
அது என்ன முழுச் சாப்பாடு?
பொதுவாகவே சாலையோரங்களில் அமர்ந்திருக்கும் யாருமற்ற வயோதிகர்களுக்கு, நல்ல உள்ளம் கொண்ட சேவையாளர்கள் பலரும் பாக்கெட் உணவாக புளியோதரை சோறு, தக்காளி சோறு, கதம்பச் சோறு என்று ஏதாவது ஒரு பொட்டலம்தான் தந்துவிட்டுப் போவார்கள். அந்த இடங்களில் அது போலத்தான் தந்துவிட்டு வரமுடியும். அப்படி இல்லாமல், அவர்களுக்கு முழு சாப்பாடு நம் வீட்டில் வைத்தே போடவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். வயோதிகர்களுக்கு மதியம் ஒரு நேரமாவது வடித்த சோறு, சாம்பார், ரசம், பொறியல், அப்பளம் என்று தினசரி முழுச் சாப்பாடு தந்து வர வேண்டும் என்று தீர்மானித்தேன். தொடக்கத்தில் மதிய நேரத்தில் வீட்டுக்கு தினசரி நான்கைந்து வயோதிகர்கள் மட்டுமே வந்து வயிறாரச் சாப்பிட்டுப் போனார்கள். பிறகு...
பிறகு என்ன ஆயிற்று?
பரவலாகக் கேள்விப்பட்டு ஒவ்வொரு நாளிலும் கொஞ்சம் பேர் கொஞ்சம் பேர் என வயோதிகர்கள் கூடுதலாக வரத் தொடங்கினார்கள். அவ்வளவு நபர்களுக்கும் வீட்டில் சமைப்பதும் வீட்டிலே வைத்துப் பரிமாறுவதும் ரொம்ப சிரமமாகப் போனது. என் வீட்டுக்குப் பக்கத்திலேயே தனியாக வாடகைக்கு இடம் பிடித்தேன். பிறகு, அங்கேயே சமைத்து அங்கேயே வைத்து, சாப்பாடு பரிமாறத் தொடங்கினோம். சமையல் செய்வதற்கும் சாப்பாடு அன்புடன் பரிமாறவும் இரண்டு பெண்கள் வேலைக்குச் சேர்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வயோதிகர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது தினசரி அறுபது வயோதிகர்கள் மதிய நேரத்தில் இங்கு வந்து திருப்தியாகச் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.
இதற்கான செலவுகள் நிறைய ஆகுமே?
மதியம் ஒரு மணிக்கு சாப்பாடு பரிமாறத் தொடங்குவோம். மதியம் மூன்று மணிக்குள் நிறைவு பெற்றுவிடும். வடித்த சோறு, காய்கறியுடன் சாம்பார், ரசம், தினசரி ஏதேனும் ஒரு காய்கறி பொறியல், அப்பளம் இந்த மெனு எந்த நாளிலும் மாறாது. குறையாது. அறுபது வயோதிகர்களுக்கு ஒரு வேளைக்கு குறைந்தபட்சமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகும். தொடக்கத்தில் ஒரு வருடம் முற்றிலும் என் சொந்தப் பணத்தில் செய்து வந்தேன். அப்போது எனக்கு சில பணக் கஷ்டங்களும் ஏற்பட்டன. எனக்குத் தெரிந்தவர்கள் “மேடம் உங்கள் சேவையினை வீடியோ எடுத்து முகநூலில் பதிவேற்றுங்கள். அதனைப் பார்த்த தொண்டு உள்ளம் படைத்தவர்கள் நிதி தர முன் வரலாம். அதன் மூலம் உங்கள் கஷ்டம் குறையும். மேலும் இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்து வரலாம்” என வழி காட்டினார்கள். எனது முகநூலில் பதிவேற்றத் தொடங்கினேன். அது எனது செயல்பாட்டுக்கு இன்று வரை மிகவும் உதவியாக இருந்து வருகிறது. சில அன்பர்கள் வீட்டில் தங்கள் பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் போன்ற தினங்களுக்கு நன்கொடையாகத் தந்து உதவி செய்கிறார்கள். இவைகள் இல்லாமல் இந்தத் தனி இடத்துக்கு மாத வாடகை நான்காயிரம் ரூபாய் மற்றும் மின்சாரக் கட்டணமும் செலுத்தி வருகிறோம். அவ்வப்போது வெளியில் இருந்து அன்பர்கள் மூலமாகக் கிடைத்து வரும் நிதியுதவி மூலமாகவே எங்களால் இதனைத் தொய்வின்றி இந்தச் சேவையினைச் செய்து வர முடிகிறது.
வேறு சேவைகள் ஏதேனும் செய்து வருகிறீர்களா?
தானமாகப் பெற்ற இரண்டு பசுக்களை வைத்து வளர்த்து வருகிறோம். அதில் இருந்து கிடைக்கும் பசும்பாலை, குழந்தைகளுக்குப் பால் புகட்டும் தாய்மார்களுக்கு தந்து வருகிறோம். தினசரி பத்துப் பதினைந்து தாய்மார்கள் வந்து பசும்பால் பெற்றுச் செல்கின்றனர்.
பார்வையற்றோர் குடும்பங்களுக்கு மாதாந்திரமாக அரிசி, மளிகைப் பொருட்கள், கொஞ்சம் காய்கறிகள் ஆகியன பல அன்பர்களிடம் இருந்து பெற்று அவர்களுக்கு அன்புடன் தந்து வருகிறோம். இதன் மூலமாக அறுபத்தைந்து குடும்பங்கள் மாதாந்திரமாகப் பயன் பெற்று வருகின்றன” என்கிறார் நிர்மலா தேவி.