
காய்கறிகளில்தான் உயிர்ச்சத்துக்களும் தாது உப்புக்களும் நார்சத்துக்களும் பெருமளவில் உள்ளன. ஆனால், அவற்றின் நல்ல தோற்றம். வேகமான முதிர்ச்சி, நல்ல மகசூல் இவற்றுக்காக எக்கச்சக்கமான மருந்துகள், இரசாயன உரங்கள் இடப்படுகின்றன. இவை காய்கறிகளிலும், பழங்களிலும் தம் குணத்தைப் பதிக்கின்றன. விளைவு. புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் நம்மை எளிதில் பாதிக்கின்றன. இவற்றிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க முடியுமா?
வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு, கேரட்
இவற்றின் தோலை முழுமையாக நீக்கவும். கேரட்டுக்கு மாதத்திற்கு மூன்று முறையாவது மருந்தடிப்பார்களாம். கேரட்டில் அடிப்பாகம் ஒரு இன்ச், பச்சை நிறமுள்ள காம்புப் பகுதி இவை கண்டிப்பாய் நீக்கப்பட வேண்டும். உப்பு நீரில் நன்கு கழுவி பின் உபயோகிக்கவும்.
கத்தரி மற்றும் தக்காளி:
இவற்றில் அடிக்கப்படும் பூச்சி மருந்து காம்புப் பகுதியில்தான் அதிகம் இடம் பிடிக்கின்றன. கத்தரிக்காய்க் காம்பைப் பூரணமாக நீக்கவும். தக்காளியின் குழிப் பகுதியான காம்புப் பகுதியை நன்கு வெட்டி நீக்கவும். இதனால், தக்காளியால் ஏற்படும் சிறுநீரகக் கல் உருவாகுதலும் தடுக்கப்படுகிறது.
காராமணி (தட்டைப் பயறு):
புழுக்களை விரட்ட காய் மேலேயே மருந்தடிப்பார்கள். வாங்கியவுடன் உப்பு நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு நன்கு கழுவி உபயோகிக்கவும். காம்புப் பகுதி, நுனிப் பகுதிகளை நீக்கவும்.
பாகல்:
பாகற்காயின் முள் போன்ற பகுதிகளில் மருந்து தங்கி நிற்க இடமுண்டு. அவற்றைக் கத்தியால் கீறி உரசி எடுப்பதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம். உப்பு கலந்த நீரில் நன்கு கழுவி உபயோகிக்கவும்,
கீரை:
கொஞ்சம் பூச்சிகள் அரித்த கீரை மருந்தடிக்கப்படாதது என அறியவும்.
முட்டைக்கோஸ்:
காபேஜ் எனப்படும் முட்டைக்கோஸில் மருந்து காணப்படுவது வெளியே காணப்படும் பச்சை நிறம் படர்ந்திருக்கும் இதழ்களில்தான். அவற்றை நீக்கி, உப்பு நீரில் கழுவிப் பயன்படுத்தவும்.
காலிஃபிளவர்:
காலிஃபிளவர் வளர வளர புழுத் தொல்லை அதிகமாகிறது. அதனால் அதற்கு அடிக்கடி புழு நீக்க மருந்து அடிக்கப்படுகிறது. மருந்தில் குளித்து வருபவற்றைத்தான் நாம் வாங்குகிறோம். முதலில் சுற்றியுள்ள இலைப் பகுதியை நீக்கி நீரில் கழுவவும். உப்பு நீரில் நறுக்கிப் போட்டு அலசிய பின் கொதிக்கும் நீரில் போடவும். புழுக்கள் மேலே வந்து விடும். மறுபடி அலசி உபயோகிக்கவும்.
பச்சை மிளகாய்:
மிளகாயில் நீர் உறிஞ்சும் புழுக்களைத் தடுப்பதற்காக மருந்தடிப்பார்கள். காம்பை நீக்கி, கழுவி, சுடுநீரில் போடவும். இதனால் கொஞ்சமாவது ஆபத்து நீங்கும்.
கறிவேப்பிலை:
எல்லாக் காய்கறிகளும் விலை கொடுத்து வாங்கினாலும் இரண்டு ஆர்க்கு கறிவேப்பிலையாவது ஓசியில் கிடைத்தால்தான் நிம்மதி இல்லையா? ஜாக்கிரதை. ஒவ்வொரு வாரமும் கறிவேப்பிலையை ஒடித்து எடுப்பதுதான் வழக்கம். மறுபடியும் சட்டெனத் துளிர்விட ப்யூரிடான் இடுவார்கள். பூச்சிகளால் இலை அரிக்காமல் இருக்க மருந்தடிப்பார்கள். இலை செழுமைக்காக யூரியா போடுவார்கள். ப்யூரிடான் நம் ஹார்மோன் செயல்களைத் தூண்ட வல்லது. வினிகர் கலந்த நீரிலோ, சுடுநீரிலோ கழுவித் துடைத்து உபயோகிக்கவும்.
எல்லாக் காய்களையும், பழங்களையும் (கொய்யா, பேரிக்காய்) புளி ஊறவைத்த நீரிலோ அல்லது வினிகர்சில சொட்டுக்கள் சேர்த்த நீரிலோ ஐந்து நிமிடம் ஊறவைத்து அல்லது போட்டு வைத்து பின் கழுவி உபயோகிக்கவும்.