நடையாம், நடையழகாம்!

நடையாம், நடையழகாம்!
Published on

டற்பயிற்சிகளுள் எனிதானதும் எந்தப் பருவத்தினரும் பின்பற்றக்கூடிய வகையில் அமைந்ததும் நடைப்பயிற்சி தவிர வேறில்லை. நடைப்பயிற்சிக்கென நீங்கள் ஏதும் செலவிட வேண்டியதில்லை. எந்த உபகரணங்களும் தேவையில்லை. நடைப்பயிற்சி உங்களுக்குப் பல்வேறு நலன்களை அள்ளித் தருகிறது.

நடை என்னென்ன அனுகூலங்களை அளிக்கிறது?

1. உடற்பயிற்சிகளை முறையாகச் செய்பவர்களைவிட மற்றவர்கள் எளிதில் முதுமையடைந்து விடுகிறார்கள். முப்பது வயதிற்கு மேல்தான் பெரும்பான்மையோரும் உடற்பயிற்சிகளைப் பற்றி சிந்திக்கிறோம். அப்போது உடல் ஏற்றுக்கொள்ளும் உடற்பயிற்சி நடத்தல் மட்டுமே. தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பவர்களை முதுமையின் பாதிப்புகள் அவ்வளவாக அலட்டுவதில்லை. இதை மருத்துவ உலக ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

2. வயதான காலத்தின் நம் எலும்புகளின் வலிமை நாம் இளமையில் உட்கொண்ட உணவுகள், உடற்பயிற்சிகளுக்கு உடல் எந்த அளவிற்கு உட்பட்டது என்பதைப் பொறுத்தே அமைகின்றன. எலும்புகளின் வலுவைப் பொறுத்து asteoporosis கூடவும், குறையவும் பாதிக்கிறது. இப் பிரச்னை பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

நிரந்தரமான நடைப்பயிற்சி எலும்புகளுக்கு வலிமை அளிப்பதன் மூலம் இப் பிரச்னை குறைய வழி கோலுகிறது. பரம்பரை வழி ஆஸ்டியோபோரஸிஸ் உள்ளவர்கள் இளமை முதலே நடைப்பயிற்சியைக் கைக் கொள்ளுதல் நலம்.

3.  உங்கள் உடல் எடையைக் குறைக்க எளிதான நல்ல பயிற்சி நடத்தலே. தேவைக்கதிகமான கலோரிகளை நடப்பதன் மூலம் இழக்க முடியம்.

4. மூட்டுக்கள் ஒழுங்காகப் பணியாற்றினால் அவைகளில் வலி ஏற்படுவதில்லை. அதற்கு நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. நடக்கும்போது ஒன்றரைப் பங்கு பளுவே பாதங்களில் செலுத்தப்படுகிறது. ஓடும்போது இது இரண்டு முதல் நான்கு பங்காகிறது. இது மூட்டுகளுக்கும் தசைகளுக்கும் நல்லதல்ல.

5. உடல்நலத்திற்கு மட்டுமா நடைப் பயிற்சி உதவுகிறது? மனநலத்திற்கும் கூடத்தான். அதிகமான மனஇறுக்கங் களால் தவிக்கும்போது ஓர் அரை மணி நேரம் நடப்பது சிறந்த வடிகாலாக அமையும். உடனே பலனளிக்கும் நிவாரணியாகும். அதுபோலவே மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள் உங்கள் ரத்த அழுத்தத்தை ஏறச் செய்யலாம். உங்கள் மனநிலையைக் (மூட்) கெடுத்துக் குட்டிச் சுவராக்கலாம். இவற்றையெல்லாம் மறந்து இயற்கையில் மனம் லயித்துச் சற்றே நடங்கள். மனத்திற்கு அமைதி தானாக வந்து சேரும்.

6. தூக்கமின்மை தீராத பிரச்னையாகிப் போகும் இரவுகள் மறுநாளைத் தள்ளி நீக்கும் அளவிற்குச் செய்துவிடும். சோர்வை மிகுதியாக்கி விடும். தூக்கத்திற்காய் உறங்கச் செல்லுமுன் சற்றே நடங்கள். அது மிகுந்த பலனளிக்கும்.

7. உடல் அழகிற்கும் நடைப்பயிற்சி உதவுகிறது. கைகளை வீசி வேகமாக நடப்பது உடலுக்கு நல்ல வடிவை அளிக்கிறது. உடலின் முக்கியமான தசைகள் வலுவடைகின்றன. ரத்த ஓட்டம் எளிதாக்கப்படுகிறது. வேண்டாத இடங்களில் சதை மடிப்புகள் ஏற்படுவதில்லை. அழகு நிலை நிறுத்தப்படுகிறது.

8. நடைப்பயிற்சியால் ஞாபக சக்தி கூட அதிகரிக்கிறதாம். ஆய்வுகள் சொல்கின்றன.

9. முதுகுவலி, இடுப்பு வலி போன்ற வலிகள் குறைகின்றன. காரணம் முதுகெலும்பின் கீழ்தான் உடலின் ஆதார சக்திக் கேந்திரம் உள்ளது. நடைப்பயிற்சி மூலம் அது தூண்டப்படுகிறது. உடல் முழுமைக்கும் பயிற்சி கிடைக்கிறது. இதனால் ஆரோக்கியம் பேணப்படுகிறது.

எப்போது நடக்க வேண்டும்?

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறு நடை நடக்க வேண்டும். எல்லாக் காரியங்களுக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உதவிகளை நாடிக் கொண்டிராமல் நாமே செய்ய முற்பட்டால் நாம் நடந்துகொண்டு தானிருப்போம். தோசையை ஊற்றி விட்டுத் திருப்புவதற்குள் ஹால் வழியே படுக்கையறைக்குச் சென்று திரும்பி விடலாம். இந்தக் கணக்கிலேயே சிறிதாவது நடக்கலாம்.

இளம் காலை, மாலை நேரங்கள் நடப்பதற்கு மிகவும் உகந்தவை. அந்நேரங்களில் 'வைடமின் டி' எனும் உயிர்ச்சத்து உடலுக்குச் சூரிய ஒளியிலிருந்து கிட்டுகிறது. உணவு உண்பதற்கு முன் நடப்பதே சிறந்தது.

எப்படி நடக்க வேண்டும்?

1. ஆரம்ப நிலையிலேயே அதிக வேகம் கூடாது. அது வலிகளையும் சோர்வையும் உண்டாக்கிவிடும். மெல்ல மெல்ல படிப்படியாக முன்னேறுங்கள். நடக்க ஆரம்பிக்கும்போது மெதுவான வேகத்தில் ஆரம்பியுங்கள். நடுவே நல்ல வேகம் கூட்டி, முடிக்கும்போது மீண்டும் மித வேகமாக இருக்க வேண்டும்.

தினமும் சிறிது சிறிதாய்க் கூட்டிக் கொண்டு வந்து ஒர் நாளைக்கு இவ்வளவு என்று அளவு வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் எத்தனைக் காலடிகள் (தப்படிகள்) வைக்கிறான் என்பதே கேடன்ஸ் என்று (cadence) கூறப்படுகிறது. இது நடத்தலின் அளவீடாகும். ஆரோக்கியமான ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் 90 காலடிகள் வரை வைக்க இயலும். இந்தக் கணக்கில் 4-5 கிலோ மீட்டர்கள் ஒரு மணி நேரத்தில் நடக்க இயலும்.

2. கூடிய மட்டும் தனியே நடக்கச் செல்லுங்கள். (அப்போதுதான் உங்கள் மனம் பல பிரச்னைகளுக்கும் விடை கண்டுபிடிக்கும். தனிமையில்தான் நடக்கும் சுகத்தை முழுமையாக, மனதார அனுபவிக்க இயலும். பேச்சுத் துணையில் பெரும்பாலும் பிரச்னைகள்தாம் எழுகின்றன.

3. மனதைத் தெளிவாக்கிக்கொண்டு நடங்கள். மனதில் பிரச்னைகள், டென்ஷன் ஆகியவை நிறைய விடாதீர்கள். நடந்து முடித்தபின் சிந்தித்தால் குழப்பங்களுக்கு வழி பிறக்கும்.

4.உங்களை நீங்களே கண்டறிய உதவுகிறது நடைப்பயிற்சி.

யாருக்கு நடைப்பயிற்சி மிகவும் உதவுகிறது?

எல்லோருக்குமே பெருமளவு உதவுகிறது, ஆயினும் நீரிழிவு நோயாளிகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் நடை மிகவும் உகந்தது. ஹார்ட் அட்டாக் வருவதை நடைப்பயிற்சி தடுக்கிறது. பாதிக்கப்பட்ட நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்துகிறது. அட்ரினலின் அளவைச் சமன் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.

நம் முன்னோர்கள் நடைப்பயிற்சியின் அருமையை நன்கு அறிந்திருந்தார்கள். நம் கோயில்களின் சுற்றுக்கள் (பிரகாரங்கள்) பரந்து விரிந்திருப்பதன் காரணம் நாம் நடக்க வேண்டும் என்றுதான்.

''நடக்கவா? யாருக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது? எங்களுக்கென்ன வேறு வேலையில்லையா? என்று தட்டிக் கழிக்காமல் முறையாக எளிய நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். உடல் அழகையும், ஆரோக்கியத் தையும் ஒருங்கே பேணுவோமே!

பின்குறிப்பு:-

மங்கையர் மலர்  மே  1993 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com