பெண்கள் சுய தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் இலவசமாக தையல் இயந்திரம் அளிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமீப காலமாக பெண்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்தத் திட்டத்தின் பலன்கள் என்ன மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்போது காண்போம்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம், முன்னேறத் துடிக்கும் பெண்கள் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுய தொழிலில் பெண்கள் கால்தடம் பதிப்பதையும், பாரம்பரிய தொழில்கள் உயிர்த்தெழுவதையும் உறுதி செய்கிறது.
https://pmvishwakarma.gov.in என்ற இணையதள முகவரியில் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பிக்கத் தெரியவில்லை எனில், இ-சேவை மையங்களுக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் எண், அடையாள அட்டை, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். விண்ணப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புதல் சீட்டு வரும். இதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது உங்களின் விண்ணப்ப நிலையை சரி பார்த்துக் கொள்ள இது உதவும்.
தகுதிகள்:
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மேலும், ஏற்கனவே தையல் இயந்திரம் வைத்து தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். வீட்டிலேயே தையல் இயந்திரம் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் வைத்திருக்கும் தையல் இயந்திரத்தின் தகவல்களை விண்ணப்பிக்கும் போது அளிக்க வேண்டும். 18 வயதை பூர்த்தி அடைந்த ஆண், பெண் என இருபாலரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பு.
தையல் இயந்திரம் ஒன்று வாங்க ரூ.15,000-ஐ மத்திய அரசு அளிக்கிறது. விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்படும். இந்தத் தொகையைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களின் தையல் தொழிலை நன்முறையில் முன்னேற்றிக் கொள்ள முடியும்.
தையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில், இத்திட்டம் உண்மை தானா என்ற நம்பிக்கையற்ற பேச்சும் இருக்கிறது. ஆனால், இத்திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பது உண்மை தான்.
இத்திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு, சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு தான் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஆகையால் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பிறகு, சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இத்திட்டம் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இல்லாததால், இன்றளவும் விண்ணப்பிக்காமல் உள்ளனர். இத்திட்டத்தின் பலன்களைத் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.