நவகிரகத் தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா?

ஆன்மிக துணுக்குகள்
thiruvalleswarar temple
thiruvalleswarar temple

* குரு தலமான சென்னை பாடி திருவலிதாயத்திலுள்ள கிணற்று நீருடன் கங்கை நீரைக் கலந்து, ஒரு மண்டலம் குரு ஹோரையில் அருந்த, குருவருளால் நோய்கள் நீங்கும்.

* திருநள்ளாறு நளதீர்த்தத்தை, சனிப்பெயர்ச்சி அன்று காக்கைகள் குறுக்கே பறந்து கடப்பதில்லை.

* தேனி மாவட்டம், குச்சனூரில் உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் காக்கைக்கு அன்னம் வைப்பர். காக்கை அன்னத்தை ஏற்காவிடில், ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக புரிந்து கொண்டு, உடனே சனிபகவானிடம் மன்னிப்பு கேட்டு அன்னம் படைக்க, காக்கை உடனே அதனை ஏற்கின்றது.

* திருவக்கரையில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கித் திரும்பியுள்ளன.

* தென்காசி திருக்கோயிலில் ஒன்பது கோள்களும் ஆலயத்தில் உள்ள திருவோலக்க மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுத் திகழ்கின்றன.

* திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலய உள்சுற்றில் குருபகவான் கோயில் கொண்டுள்ளார். அங்கே சனி பகவானுக்கும் தனி சந்நதி உள்ளது. மற்ற கிரகங்கள் இந்த ஆலயத்தில் எழுந்தருளவில்லை.

* திருச்சி மாவட்டம், காவிரியின் தென்கரையில் பழுவூர் ஆலய நவகிரகங்கள் தங்கள் சக்தியர், பீடம், ஆயுதம் போன்றவற்றோடு அருட்காட்சியளிக்கின்றனர்.

* திருவெண்காடு தலத்தில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.

* திருவட்டாறு ஆதிகேசவர் மூலவரின் திருமுகத்தில் காலை வேளையில் சூரிய கதிர்கள் படர்கின்றன. மாலையில் சந்திரன் பெருமாளின் நேர் எதிரே தோன்றும் அற்புதம் நிகழ்கிறது.

* திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி ஆலயத்தில் நவகிரக சந்நதி கிடையாது. நந்திதேவர் முன் உள்ள ஒன்பது குழிகளே நவகிரகங்களாக போற்றப்படுகின்றன.

* தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலய நவகிரக சந்நதியில் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் அவரைப் பார்த்தபடியே அபய வரத முத்திரையுடன் காட்சி தருகின்றனர்.

* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் நவகிரகங்கள், விநாயகர் சந்நதிக்கெதிரே, மேலே உத்திரத்தில் இடம் பெற்றுள்ளனர்.

* ராமச்சந்திர மூர்த்தியால் சமுத்திரத்தினுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒன்பது கற்களே தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் நவகிரகங்களாக வழிபடப்படுகின்றன.

* சூரியன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஞாயிறு, சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதிநியமம், தலைஞாயிறு போன்ற தலங்கள் பஞ்ச பாஸ்கரத் தலங்கள் எனப் போற்றப்படுகின்றன.

kailasanathar temple thingalur
kailasanathar temple thingalur

* திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதரை பங்குனி புரட்டாசி மாத பௌர்ணமியிலும் அதற்கு முன் பின் இரு நாட்களிலும் சந்திரபகவான் தன் கிரணங்களால் வழிபடுகிறார்.

* திருச்சி, உத்தமர்கோயிலில் பிரம்ம தேவனான நான்முகனே குருபகவானாக எழுந்தருளியுள்ளார். இத்தலம் சப்த குருதலம் என போற்றப்படுகிறது.

* நவகிரகங்களுக்கான தனிக்கோயில் எனும் பெருமையைப் பெற்றது ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோயிலாகும்.

* சிவாகம வழிபாட்டில் கூறியபடி சுபகிரகங்களான சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கும் நேர் திக்கிலும் பாவக்கிரகங்களான புதன், சனி, ராகு, கேதுஆகிய நான்கும் கோணத் திசையிலும் நடுவில் சூரியனும் உள்ள அமைப்பை அன்பில், ஆலந்துறை போன்ற தலங்களில் தரிசிக்கலாம்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில், ஸ்ரீவாஞ்சியம் , திருவாவடுதுறை, திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்சீலி, திருக்கடையூர் , காளஹஸ்தி , திருவையாறுக்கு அருகில் உள்ள திருமழபாடி, திருவெண்காடு, திருப்புரம்பியம் உள்ளிட்ட இடங்களில் சிவபெருமானை எமன் வழிபட்டுள்ளதால் இங்கெல்லாம் நவக்கிரகங்கள் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com