நம் மண்ணின் அடையாளமான மஞ்சளுக்கான தினம் இன்று. நம் பாரம்பர்ய மருத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மஞ்சள். இதன் பெருமைகளை பல்வேறு ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து அதில் உள்ள மருத்துவத் தன்மையின் உறுதியை அறிந்த அமெரிக்கா தற்போது மஞ்சளுக்கான காப்புரிமையையும் பெற்று மருத்துவத் தேவைகளுக்கு மஞ்சளை அதிகம் பயன் படுத்தி வருகிறது. மஞ்சளின் பெருமைகளை உலக மக்கள் தெரிந்து கொள்ள இன்று ஜூலை 14 உலக மஞ்சள் தினம் கொண்டாடப்படுகிறது.
மஞ்சள் இல்லாமல் நம் வாழ்வின் எந்த ஒரு செயலும் நடைபெறாது. நம் வாழ்வில் இரண்டறக்கலந்த மங்கலப்பொருட்களுள் பொன்னிறமும் மருத்துவ அருங்குணமும் மிக்க மஞ்சளுக்கே முதலிடம் என்பது அனைவரும் அறிவோம். இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பொருளாக விளங்கும் மஞ்சள் இந்து மதச் சடங்குகள் மற்றும் விழா நிகழ்வுகளின்போது புனிதப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து கடவுளைக் கூட மஞ்சளில் காட்டி விடுகிறது ஆன்மிகம். மஞ்சள் மகாலெட்சுமி விரும்பும் பொருள் என்பதால் லட்சுமியின் அருள் கிடைக்க பெண்கள் மஞ்சளைப் பூசுகின்றனர். பெண்களின் அழகைப் பேணவும் மஞ்சள் பெரிதும் உதவுகிறது.
உணவுப் பொருள்களிலும் முதலிடம் பிடிக்கிறது மஞ்சள் நிறத்தை தருவதோடு அதை தினமும் சமையலில் சேர்த்து நாம் உண்ணும்போது உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது மஞ்சள்.
கல்கி ஆன்லைன் சார்பாக மஞ்சள்தின வாழ்த்துகளை தெரிவித்து மஞ்சள் பற்றிய கருத்துகளை சேலம் லீ பஜார் வணிகர்கள் சங்கத்தின் செயலாளரும் பல வருடங்கள் அனுபவமிக்க பிரபல மஞ்சள் வியாபாரியுமான
திரு. சந்திரசேகரிடம் கேட்டோம்.
“தமிழ்நாட்டிலேயே ஏன் உலகத்திலேயே சேலம்தான் மஞ்சளுக்கு பெயர் பெற்றது. சேலம் சுற்றியுள்ள கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்ன சேலம், உளுந்தூர்பேட்டை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், ஒடுவங்குறிச்சி போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சள்தான் முதல் தரம். அடுத்ததுதான் ஈரோடு என சொல்லலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் அளவுதான் மஞ்சளின் தரத்தை நிர்ணயிக்கிறது. இந்த குர்குமினின் அளவு ஈரோடு மஞ்சளில் 2.5 என்றால் சேலம் மஞ்சளில் 4.5க்கும் மேல் இருப்பதால்தான் முதல் தர மஞ்சளுக்கு தற்போது விலையும் அதிகம் ஆகிவிட்டது. இந்த வகைகள் பெரும்பாலும் அமெரிக்கா, இலண்டன், அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி விடுவதுதான் உண்மை. காரணம் அவர்கள் வியாபாரிகளுக்குத் தேவையான விலையைத் தருவதுதான். வெளிநாடுகளில் தரத்துக்கே முதல் இடம் தருகிறார்கள். ஆஸ்திரேலியா, யுஎஸ்க்கு இங்கிருந்து விளைந்த பச்சை மஞ்சள் போகிறது. அவர்கள் அதை மருந்துக்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நம்மிடம் இருந்து வாங்கி, அதை மருந்தாக்கி நம்மிடமே லாபம் பார்க்கிறார்கள்.
ஆனி, ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை ஆகும் மஞ்சள். ஆரம்ப காலத்தில் இந்தியா முழுவதுமான மஞ்சள் தேவைக்கு நம்மிடம் இருந்தே சென்றது. ஆனால், கடந்த சில வருடங்களாக மத்தியபிரதேசம் போன்ற வடநாட்டினர் இங்கிருந்து தரமான மஞ்சள் விதைகளை வாங்கிச்சென்று அங்கு பயிரிட்டு இங்கு அனுப்பும் அளவுக்கு அதிக விளைச்சல் காண்கின்றனர். காரணம் அங்கிருக்கும் களிமண் பூமி. இங்கு நம் மண்ணில் பத்து மூட்டை மஞ்சள் விளைந்தால் அங்கு ஐம்பது மூட்டைகள் விளைகிறது. மஞ்சள் மட்டும் திரும்பத் திரும்ப ஒரே இடத்தில போட்டு எடுத்தால் விளைச்சலும் சத்தும் குறைகிறது. நமது மண்ணில் விளைச்சல் குறைய இதுவே காரணம். இந்த வருடம் விளைச்சல் இங்கும் அதிகம்தான். எனினும் விவசாயிகள் விலை ஏற்றத்தால் விதைகளை பாதுகாக்காமல் விடும் காரணத்தால் அடுத்த வருட மஞ்சள் உற்பத்தியைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. நல்ல விலை கிடைக்கிறதே என்று வடநாட்டினருக்கு நம் மண்ணில் விளைந்த மஞ்சள் விதைகளை விற்றதால் இன்று அவர்களிடம் இருந்து மீண்டும் நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மஞ்சளின் பூர்வீகம் இந்தியாவின் தமிழ்நாடு என்பதுதான் உண்மை. அமெரிக்காவும் சைனாவும் அதன் மருத்துவ குணத்தை அறிந்து அதன் உற்பத்தியைப் பெருக்கி தற்போது காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று விட்டது. முன்பெல்லாம் மஞ்சளை வேகவைத்து பதப்படுத்தி காயவைத்து பாலிஷ் செய்து, பொடியாக்கி... இப்படி அனைத்தையம் மக்களாகிய நாமே செய்து வந்தோம். ஆனால், இப்போது அதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. சேலம் மஞ்சள்தூள்தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறது” என்கிறார் சந்திரசேகர்.