என்ன சொல்ல வருகிறார்கள் இந்த படங்களின் இயக்குனர்கள்?

என்ன சொல்ல வருகிறார்கள் இந்த படங்களின் இயக்குனர்கள்?

பெண்களின் முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு , குடும்ப அமைப்பு முறைகள் குறித்து பொதுவெளியில் நிச்சயம் பேசப்பட , விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் சமீப காலத்தில் பார்த்த மூன்று மொழிமாற்ற படங்கள் முற்றிலும் வேறுமாதிரியான உணர்வினை தருகிறது. இதில் பேசப்படுவது பெண்ணியங்களா? என்றும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

அம்மு , கட்டா குஸ்தி மற்றும் ஜெய ஜெய ஜெய ஹே. இந்த மூன்று திரைப் படங்களும் மலையாள கரையோரத்தை அடையாளப்படுத்துவதாக காட்டப்படுவதில் சற்று வியப்பும் இல்லாமல் இல்லை. குறிப்பாக இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படும் மலையாள தேசத்தை சுற்றி தான் கதை பின்னப்பட்டிருக்கிறது.


மூன்று படத்திலுமே "அப்பாவி"களாக இருக்கும் கதை நாயகிகள் வெகுண்டெழுந்து "அடப்பாவி"களாக மாறி விடுவதாக காட்டப்படுகிறது. குடும்ப வன்முறைகள், அடக்குமுறைகள் குறித்து இந்த படங்கள் பேசுவதை நிச்சயமாக வரவேற்கலாம். ஆனால் அதற்கான தீர்வாக காட்டப்படும் விஷயங்கள் அபத்தங்களாக காட்சி படுத்தப்பட்டுள்ளது என்பது நெருடலான விஷயம். வன்முறைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்பது போல் அபத்தங்களுக்கு அபத்தங்கள் என்றுமே  தீர்வாகாது.

இந்த கதைகளின் நாயகிகளின் குணாதிசயங்கள் நிச்சயமாக தற்கால பெண்களை ப்ரதிபலிப்பதாக இல்லை. எழுபது, எண்பதுகளில் இருந்த பெண்களின் பிற்போக்கான குணாதிசயங்களை கொண்டிருப்பதாக தோன்றுகிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுக்கும் இந்த நாயகிகளுக்கும் பெரிய  வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

உதாரணமாக அம்மு திரைப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஒரு காவல்துறை அதிகாரிக்கு பெற்றவர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.  அவர் வெளியுலகில் நல்ல அதிகாரியாக வலம் வருபவர், ஆனால் வீட்டில் மனைவியை சிறிய தவறுகளுக்கும் ரத்தம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்துகிறார். அப்போதும்  மனைவிக்கு அந்த கணவர் மீது காதலாம் அதனால் பிரியாமல் அவனோடே குடும்பம் நடத்தி தொடர்ந்து குழம்பிக்கொண்டிருக்கிறாள். 

அவனை பிரியலாமா? வேண்டாமா? என அப்பா அம்மா முதல் தெரு பிச்சைக்காரன் வரை ஆலோசனை கேட்டும் அவளுக்கு முடிவெடுக்க முடியாமல் குழப்பம். அதன் பிறகு ஒரு கைதியுடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக அவனை தப்ப வைத்து கணவனை சரமாரியாக பழிவாங்குகிறாள். இறுதியில் டைவர்ஸூம் வாங்குகிறாள்.  இதற்கு முதலிலேயே அவனை பிரிந்து போயிருக்கலாம். ஆனால் டைரக்டரும் குழம்பி போய்  அம்முவையும் நன்றாக குழப்பி நம்மையும் பெரும் குழப்பத்தில் தள்ளிவிடுகிறார்.

அடுத்தது கட்டாகுஸ்தி மேலே சொன்ன கதையில் சற்று மாறுதலோடு நகைச்சுவை விஷயங்களை ஆங்காங்கே தூவி நம்மை சற்று ஆசுவாசம் கொள்ள வைக்கிறார் டைரக்டர். இதிலும் அதே ஐஸ்வர்யா லட்சுமியே கதாநாயகி ப்ளஸ் கதைநாயகி,  நாயகனாக விஷ்ணு விஷால்.

கதாநாயகி ஒரு குத்துசண்டை வீராங்கனை என்கிற ஒரே காரணத்திற்காக கேரளாவில் யாருமே அவளை திருமணம் செய்ய முன்வரவில்லையாம். அதனால் யாருக்கும் தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு வெட்டி பந்தா பயலை பிடித்து திருமணம் செய்து தருகிறார்கள் பெற்றவர்கள். அதிலும் ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம். 

கதாநாயகன் விஷ்ணு விஷால் மணல்கயிறு எஸ்வி சேகரை போல பல கண்டிஷன்களை போட்டு திருமணம் செய்கிறார்.  அதாவது அவர் எட்டாவது படித்திருப்பதால் ஏழாவது படித்த பெண் வேண்டும். தலைமுடி நீளமாக இருக்க வேண்டும் , வாயை திறந்து பேசத் தெரியாத அடக்கமான, அமைதியான பெண்ணாக இருக்க வேண்டும் என்பதான சரித்திர முக்கியதுவம் வாய்ந்த கண்டிஷன்களை போடுகிறார்.

பெண் வீட்டார் விசுவை போலவே ஆயிரம் பொய்யாக இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு பொய் சொல்லி திருமணம் செய்து விடுகிறார்கள்.  அதற்கு பிஎஸ்ஸி படித்த குத்துசண்டை வீராங்கனையான பெண்ணுக்கு மறுப்பேதும் இல்லை என்பதை விட அபத்தங்களாக வேறு எதை சொல்ல முடியும். இந்த கதாநாயகி எண்பதுகளில் வந்த சாந்தி கிருஷ்ணாவை விட அப்பாவியாக வருகிறார். திருமணத்திற்கு பிறகு ஒவ்வொன்றாக தெரிந்து, களேபரத்துடன்  நகைச்சுவையாக கதையை நகர்த்தி முடிவில் ஏதோ ஒரு மெசேஜை சொல்லிப் போகிறார் டைரக்டர்.

மூன்றாவதாக ஜெய ஜெய ஜெய ஹே ...!

கதாநாயகி தர்ஷனா ராஜேந்திரன். திரைப்படத்தில் கதைநாயகியை  பெற்றவர்கள் பிற்போக்குதனத்திற்கு பெயர் போனவர்கள்.  கதாநாயகியின் மார்க்கிற்கு வெளியூரில் நல்ல காலேஜ் நல்ல கோர்ஸ்க்கான சீட் கிடைக்க உள்ளூரில் ஓணான் பிடிக்கச்சொல்லி பிஏ மலையாளத்தில் சேர்த்து விடுகிறார்கள். இதற்கு ஒத்து ஓதி  கூடவே அவளின் தாய்மாமன் வேறு குட்டையை குழப்பி விடுகிறார்.

நாயகிக்கு லேங்குவேஜ் படிக்க ஆர்வமில்லாமல் அங்கிருக்கும் ஆசிரியர் ஒருவரை விரும்புகிறார்.  அவர் கதாநாயகியின் பெற்றவரை விட கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாக பரிணாமிக்கிறார்.  அவர் ஒரு ப்ரச்சனையில் கதாநாயகியை பளார் என கன்னத்தில் அறை விட அத்தோடு அவரை  கை கழுவி விடுகிறார் நாயகி. .  இது வீட்டுக்கு தெரிந்து ப்ரச்சனையாகி படிப்பை நிறுத்தி ஒரு கோழிக்கடை வைத்திருப்பவருக்கு திருமணம் செய்து தந்து விடுகிறார்கள்.

அவரோ திருமணத்திற்கு முன்பு வெண்ணையாக வழிந்து விட்டு திருமணத்திற்கு பின்பு தனது வேலையை காட்டுகிறார். கதாநாயகியின் பெற்றவரையும் காதலரையும் விட மிகப்பெரிய பிற்போக்குவாதியாக இருக்கிறார்.தனக்கு போரடிக்கும் பொழுதெல்லாம் நாயகியை கூப்பிட்டு "பளார்" ரென அறைவதை ஹாபியாகவே  வைக்கிறார்..அதன் பிறகு ஒரு இடியாப்பம், பாயா, கட்ட சாயா என ஹோட்டலில் வாங்கி தந்து சமாதானம் செய்கிறார்.

கதாநாயகியின் வாழ்க்கை தினமும் ஒரு பளாரும் கூடவே சாயா, பாயாவும் ஆகிவிட, அதுவே வழக்கமாகிப் போகிறது. தினமும் அடியை பொறுக்கமுடியாத நாயகி மாமியார் , நாத்தனார், அப்பா , அம்மா , அண்ணன் என முறையிட..அவர்களும் வழக்கம் போல் "ஆம்பிளை"ன்னா அப்படித்தான் இருப்பான் என அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Dharshana
Dharshana


இதனால் மனம் வெறுத்த நாயகி ஆன்லைன் மூலம் குத்துச்சண்டை பழகி ஒருநாள் கணவனை துவம்சம் செய்கிறாள். அதன்பிறகு இருவரும் வெஸ்லி வீரர்களை போல மோதிக்கொள்கிறார்கள். இது வீடியோவாக வெளியே கசிந்து வைரலாக அனைவருக்கும் தெரிந்து ப்ரச்சனையாகி விடுகிறது.

நாயகி கர்ப்பமாகி விட்டால் அடங்கி கிடப்பாள் என மாப்பிள்ளையின் அண்ணன் விலைமதிப்பற்ற அறிவுரை கூற...கதாநாயகி கர்ப்பமாகி அபார்ஷனாகி களேபரமாகி இறுதியில் கணவனை பிரிகிறாள்.

இந்த  கதைகளில் பெற்றவர்கள் , உறவினர்கள், கணவன் என அனைவருமே கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளாக காட்சி தருகிறார்கள். கதாநாயகிகளோ இறுதிவரை வாய்மூடி மௌனமாக பொறுமையாக இருக்கிறார்கள்.

இந்த கதையின் சாரங்கள் அடிநாதங்கள்,  எதனை பதிவு செய்கிறது என புரியவில்லை. இந்த இயக்குனர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் அவர்களுக்கும் ஏன் நமக்குமே குழப்பங்கள் ஏற்படுகிறது.பெண் அடிமை தனத்தின் தளைகளை உடைத்தெறிய தேவைபடும் விஷயம் பெண்கல்வியே தவிர வேறெதுவுமில்லை.  இவைகளை தகர்த்துவிட பெண்களுக்கு தேவை கல்வி மற்றும்  பொருளாதார சுதந்திரமே தவிர கராத்தேவோ, குங்பூவோ , வெஸ்லியோ அல்ல... இவை அவசியம் தெரிந்திருக்கவேண்டிய கலைகள் தான் இல்லையென சொல்ல வரவில்லை. இது தற்காப்பு கலைகள் மட்டுமே தானே தவிர வாழ்வியல் கலை அல்ல.. இதனை சாதனைக்காக கையிலெடுக்கலாமே தவிர மற்றவர்களை சோதிக்க அல்ல.. பெற்றவர்கள் சரியில்லையெனில் நிச்சயமாக எதிர்க்கலாம். கணவன் சரியில்லையெனில் தைரியமாக பிரிந்து போகலாமே ...

நாம் நாக்அவுட் செய்ய வேண்டியது பிற்போக்கான விஷயங்களையும், அடிமைதனங்களையும் தானே தவிர நமது அன்பான உறவுகளை அல்ல....!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com