

பெண்கள் மீதான துஷ்பிரயோகம் அல்லது அவர்களுடைய உடலின் மீதான வன்முறை என்பது புவியியல், கலாச்சாரம் மற்றும் சமூக பொருளாதார என எல்லா எல்லைகளையும் கடந்து பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு மேலாக பெண் சமூகம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாக உள்ளது. பெண்கள் மீதான வன்முறை என்பது உலகம் முழுவதும் ஒன்றுபோலவே உள்ளது. அதற்கு நிற பாகுப்பாடு, மொழி வேறுபாடு, எல்லை கோடுகள் என எந்த அளவுகோலும் இல்லை. பெண்கள் மீது திணிக்கப்படும் இந்த சமூகத்தின் கோர முகம் என்பது அது அவர்கள் மீது உடலளவிலும், மனதளவிலும் செலுத்தப்படும் வன்முறை மட்டும்தான்.
நிதர்சனங்கள் இவ்வாறாக இருக்க, நம்மூர் கிராமங்களில் சென்று பெண்கள் முன்னேறிவிட்டார்களா என கேட்டால், அவங்களுக்கு என்னப்பா வீட்டுக்குள் இருந்து குடும்பத்த கவனிச்சுகிட்ட பெண்களுடைய காலம் எல்லாம் மாறிபேச்சு என்பார்கள். அதே கேள்வியை நகர்புறத்தில் உள்ள ஒரு ஆணிடம் கேட்டால், எங்களுக்கு (ஆண்களுக்கு) எல்லாம் இப்போ யார் வேலை தராங்க? விண்வெளி முதல் ஆழ்கடல்வரை எல்லா இடத்திலும் பெண்கள்தான் பாஸ் என்பார்கள். இப்பாடி ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு குறிப்பட்ட சதவீதமான பெண்கள் பல தடைகளை தாண்டி முன்னேறி இருந்தாலும். வளர்ச்சி பாதையை நோக்கிய பெண்களின் இந்த சிறு நகர்வே ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெரிய அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், அறிவியல் தொழில்நுட்பம், கருத்து சுதந்திரம் என சித்தாந்தம் மற்றும் அறிவியல் ரிதியிலான காலகட்டத்திலும் ஒரு ஆணையோ அல்லது ஒரு சமூகத்தையோ அவமானப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முதல் பலியாவது பெண்தான். குறிப்பாக பெண்ணிண் உடல்தான். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர செயல்.
பெண்கள் மீதான இந்த வன்முறையின் பின்னனியில் உள்ள சில உளவியல் சிக்கல்கள் என்ன? ஆணாதிக்க சமூகத்தின் இந்தப் அருவருப்பான நடத்தைக்கு காரணமாக இருக்கும் அடிப்படை உளவியல் காரணிகளை சுட்டிக்காட்டடுவதே இந்த பதிவின் நோக்கம்.
அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு: பெண்களுக்கு எதிராக நடக்கும் பல செயல்களில் முக்கிய காரணமாக இருப்பது அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஆசை. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடம் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவே அப்படி செய்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை செய்பவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட அதிகாரம் கொண்ட இடத்தில் இருப்பதாகக் கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள். இது ஆண்களிடத்திலும் ஆதிக்க மனோபாவம் கொண்ட பெண்கள் இடத்திலும் காணலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தகைய சூழ்நிலையிலிருந்து தப்பிப்பது சவாலாக இருக்கிறது.
புறச்சூழ்நிலைகள்: பொதுவாக நம்முடைய சமுதாயத்தில் ஜான் பிள்ளையானலும் ஆண் பிள்ளை என கௌரவமாக சொல்லுவார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் கூறுவதுபோல், ஆண் நெடில்... பெண் குறில் என எழுத்து வடிவிலும் பெண்ணை சிறுமைப்படுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்கக சமூகத்தில், சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் பாலின போதங்களை கடைப்பிடிப்பது. ஆம்பள பையன அடிக்ககூடாது, ஆம்பள பையன் அழக்கூடாது.. தாத்தா, அப்பா, அண்ணா, தம்பி, நண்பன் என ஆணாக உள்ள யாரையும் பெண் எதிர்க்கவோ கேள்வி கேட்கவோ கூடாது என்ற கட்டமைப்புக்குள்ளே வளர்க்கப்படுகிறது பெண் பாலினம். இதுபோன்ற ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் வளர்க்கப்படும் ஆண் குழந்தை தன்னை எப்போதும் உயர்ந்த இடத்திலேயே வைத்துக்கொள்கிறது. இவ்வாறு தங்களைச் சுற்றி இருப்பவர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து வளர்ந்த நபர்கள், அவர்களின் சொந்த உறவுக்குள் நுழையும்போது தன்னை சார்ந்து வரும பெண்ணிடம் தான்பிறரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களே பிரதிபலிக்கிறார்கள். இது பெண்ணுரிமை அல்லது பாலின சமத்துவத்தை எதிர்ப்பார்த்து திருமணம் செய்துகொள்ளும் பெண்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தையும், ஒட்டுமொத்த ஆண் இனத்தின் மீது வெறுப்பை உருவாக்கிவிடுகிறது.
சுயமரியாதை மற்றும் பாதுகாப்பின்மை: பொதுவாக ஒருவரிடம் வன்முறையை பயன்படுத்தும் நபர்கள் (ஆண், பெண்) வன்முறையாளர்கள் குறைந்த சுயமரியாதை மற்றும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களின் மனதுக்குள் ஏற்படும் போராட்டங்களுக்கு சமநிலையை ஏற்படுத்த, அவர்களை சக்தி வாய்ந்தவர்களாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் பிறருக்கு உணர வைக்க, இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவது அல்லது புண்படுத்தும் செயல் என்பது தவறானதாக இருந்தாலும், அவர்களுடைய மனப்போராட்டத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருவதால், இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள்.
நாசீசிசம்: இத்தகைய மனநிலை கொண்டவர்கள், தனக்கு தான் அனைத்திலும் உரிமை இருக்கிறது, தன்னை மையமாக வைத்தே அனைத்தும் நடக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பார்கள். இதற்கு காரணம் காலம் காலம் இச்சமூகத்தில் வேறோன்றில் உள்ள ஆணாதிக்க வன்மம்தான். காதலியோ,மனைவியோ அவர்கள் எதிர்பார்ப்பு படி நடக்காதபோது அது அவர்களுக்குள் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்துகிறது. தான் நினைத்தபடியே பிறர் இருக்கவேண்டும் என்ற மிக மோசமான நிலை கொண்டவர்கள் இந்த நாசிசவாதிகள்.
கலாச்சாரம் மற்றும் சமூக நெறிமுறைகள்: பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநிறுத்துவதில் கலாச்சாரம் மற்றும் சமூக நெறிமுறைகள், மதம் மற்றும் சாதியம் ஆகியவை மிகப்பெரும் பங்கை வகிக்கிறது. பெண்ணை அடிமைத்தனமாக நடத்துவதற்கு பல்வேறு பெயர்களில் தடைகளை உருவாக்கிவைத்துள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பு மற்றும் அது ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு ஆண், பெண்ணிடம் தான் செலுத்தும் வன்முறையை எப்போதும் சரியென்றே எடுத்துக்கொள்கிறான். இந்த ஆபத்தான மனபோக்கு பெண்களை தவறாக நடத்துவதை ஏற்றுக்கொள்கிறது அல்லது ஊக்குவிக்கிறது எனலாம். இவர்களுடைய மனநிலையில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டமைத்துக் கொண்டு, அவற்றை மீறி ஒரு பெண் நடக்கும்போது அவர்கள் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய காரணங்களால் தான் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்கள் நடக்கிறது. இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபரின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. பாலின சமத்துவத்தை அனைவரும் முறையாகப் புரிந்துகொண்டு நடந்தால், இத்தகைய வன்முறை செயல்கள் நடப்பது குறையும். இந்திய சமூகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வேரூன்றி உள்ள ஆதிக்க மனோபாவங்கள் களையப்படும்வரை இன்றைய வளரும் தலைமுறையினரிடம் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டிருப்பது காலத்தின் தேவை..