நவராத்திரியில் எந்த மாதிரி கோலங்கள் போட வேண்டும்?

நவராத்திரியில் எந்த மாதிரி கோலங்கள் போட வேண்டும்?
Published on
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

பெண்ணானவள் தன்னுடைய கற்பனா சக்தியை நவராத்திரி காலங்களிலும், மார்கழி மாதத்திலும்தான் கோலங்கள்மூலம் வெளிப்படுத்துவாள். நவ என்றால் ஒன்பது என்கிற அர்த்தத்தை தவிர, புதியது என்கிற பொருளும் கூறப்படும். நவராத்திரி நாட்களில் ஒன்பது நாட்களும் ஒன்பது புதுப்புது கோலங்கள் போட்டு, தான் மகிழ்ச்சி அடைவதுடன் பிறரையும் பிரமிப்பிற்கு ஆளாக்குவது பெண்களின் தனிச்சிறப்பு.

கோலங்களில், ஃப்ரீ ஹேண்டு கோலம், புள்ளி வைத்த சிக்குக் கோலம், கம்பிக் கோலம், படியிறக்கிக் கோலம், வண்ணப் பொடி கோலம் போன்று வகைவகையான கோல வகைகள் இருக்கின்றன.

ஒருவருக்கு எவ்வளவுதான் நன்றாக கோலம் போடத் தெரிந்தாலும் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் சில வகையான கோலங்களை போடுவதுதான் முப்பெரும் தேவியருக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். அவை என்ன? எப்படி போட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதல் நாள் – அரிசி மாவினால் பொட்டு வைத்த கோலம்.

இரண்டாம் நாள் – கோதுமை மாவினால் கட்டங்கள் அமைவதுபோல் கோலம்.

மூன்றாம் நாள் – முத்துக்கள் கொண்டு மலர்ந்த பூ அமைகிறாற்போன்ற கோலம்.

நான்காம் நாள் –  மஞ்சள் கலந்த அட்சதையைக்கொண்டு படிக்கட்டு இறக்கி கோலம்.

ஐந்தாம் நாள் – கருப்பு கொண்டைக் கடலையைக் கொண்டு பறவையினங்கள் போன்ற கோலம்.

ஆறாம் நாள் –  கடலைப் பருப்பினால் முப்பெரும் தேவியரின் ஒன்பது நாமங்களை (துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியர்களின் நாமங்களை தலைக்கு மூன்று வீதம்) கோலமாகப் போட வேண்டும்.

ஏழாம் நாள் –  எந்தவிதமான கோலம் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் வெள்ளை மலர்களால் ஆன கோலமாகப் போடவேண்டும்.

எட்டாம் நாள் – காசு பத்மம் என்று கூறப்படும் தாமரைக் கோலம்.

ஒன்பதாம் நாள் – கற்பூரத்தினால் சூலாயுதம் வடிவம் அமைத்து, வாசனைப் பொடிகளைக் கலந்து கோலமிடவேண்டும்.

மேற்கண்ட ஒன்பது நாட்கள் கோலமும் பூஜை அறையில் போடலாம். அல்லது கொலு வைத்த இடத்தில் போடலாம். வெளி வாசலில் போடக்கூடாது. 

வெளிவாசலில் எந்த வகையான கோலங்கள் வேண்டுமானாலும் போடலாம். வாயில் நிலைப்படியில் இழைக்கோலம் போடுவது மிகவும் அவசியம்.  தினமும் செம்மண் பூசுவது சுபிட்சத்தைத் தரும்.

கோலங்கள் போடுவோம்; நவராத்திரியை, கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com