பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியது!

பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியது!
Published on

வீட்டில் தனியாக இருந்தாலும் சரி வெளியில் சென்றாலும் சரி பெண்களின் பாதுகாப்பு அவர்கள் கையில்தான் இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு தாக்குதல் நிகழும்போது பெரும்பாலான பெண்கள் திகைத்துப் போய் செயலற்று நின்று விடுவது தவிர்க்க முடியாதது. இது போன்ற சூழலை எதிர்கொள்ள சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், எப்பொழுதும்  தைரியமாக வெளியில் போய் வரலாம். வீட்டிலும் நிம்மதியாக இருக்கலாம்.  அதற்கான சமயோசிதங்கள் இதோ: 

லிப்ட் பட்டன்:

லுவலகத்தில், வீட்டில், பொது இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் என்றால் படிக்கட்டுகள் வழியாக வருவதை விட லிப்டின் உதவிய நாடுவது நல்லது. லிப்ட் இல்லாத இடம் என்றால் வேறு நபர்கள் சிலர் வரும் வரை காத்திருந்த நடந்து செல்லலாம். லிப்டில் ஏறும்போது சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாராவது உள்ளே நுழைவது தெரிந்தால் அத்தனை மாடிகளின் பட்டன்களையும் அழுத்தி விட வேண்டும். ஒவ்வொரு மாடியிலும் லிப்ட் நின்று திறந்து திறந்து மூடும். அடிக்கடி கதவு திறக்கும். லிப்ட்டில் யாருக்கும் தப்பு செய்யத் தோணாது. 

கூந்தல் அலைபாயட்டும்:

யாரோ பின் தொடர்வதாக சந்தேகம் இருந்தால்,  ஜடை பின்னல், ஜடைக்கு மிகவும் ஹேர் பேண்ட் போட்டு கற்றையாக இருக்கும் கூந்தலை அவிழ்த்து விட்டு விடுவது நல்லது. பயந்து ஓடும் பெண்ணை துரத்தும் கயவர்கள் கையில் வாகாக சிக்குவது ஜடையோ, கட்டுக் கூந்தலோதான். 

குரல் கொடுங்கள்:

தாக்குதலை விட அதி பயங்கரமான ஆயுதம் குரல். கூட்டமான இடமோ ,தனிமையான பிரதேசமோ ஓங்கி கூச்சல் போட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் எவ்வளவு பயங்கரமான திருடனும் கதி கலங்கிப் போவான். ஆதலால் குரல் கொடுக்கத் தயங்காதீர்கள்.

உள்ளுணர்வை மதியுங்கள்:

விழாக்கள் மற்றும் விருந்துகளுக்கு செல்லும்போது அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் உணவுகளை வாங்கி சாப்பிடாதீர்கள். குறிப்பாக குளிர்பானங்கள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். கண்முன்பாக வாங்கித் திறந்து தரப்படும் பாட்டில் குளிர் பானத்தில் கூட ஆபத்துகள் ஒளிந்து இருக்கலாம். அறிமுகம் இல்லாத ஒருவர் இதைத் தர வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளுணர்வு எச்சரிக்கையைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். 

நடிப்பை நம்பாதீர்கள்:

பெண்கள் சற்று இரக்க குணம் நிறைந்தவர்கள். ஆதலால் நீங்கள் தனிமையில் இருக்கும் போது யாராவது வீட்டு காலிங் பெல்லை அடித்து விபத்தில் சிக்கியதாகவோ, மயங்கி விழுந்ததாகவோ கூறி தண்ணீர் கேட்பவர்கள், அட்ரஸ் கேட்பவர்கள் போன்றவர்களை நம்பாதீர்கள். குழந்தையை அழ விட்டு பிச்சைக் கேட்கும் பெண்மணி களையும் நம்பாதீர்கள். நகை பணம் பறிக்க இவர்கள் போடும் நாடகம் இது. இதனால் பொன், பொருளை இழந்தவர்கள் அநேகம் பேர். அதேபோல் ஸ்டவ் ரிப்பேர், குடை ரிப்பேர் என்று வருபவர்களையும் உள்ளே விடாதீர்கள். 

பர்ஸில் தேடாதீர்கள்:

வெளியூரு, வெளியிடங்களுக்கு போய்விட்டு வரும்போது நீண்ட நேரம் பர்ஸில் வீட்டு சாவியை தேடாதீர்கள். முன்கூட்டியே கையில் எடுத்து வைத்துக் கொண்டு சட்டென்று திறந்து உள்ளே சென்று விட வேண்டும். நீங்கள் வெளியில் சென்று விட்டு உள்ளே நுழையும் வரை ஒரு 100 பேர் கண்ணில் ஆவது படுவீர்கள். ஆதலால் தினமும் நோட்டமிடும் கயவர்களுக்கு இந்த ஒரு நிமிட இடைவெளியே போதுமானது. ஆதலால் சாவியில் கவனம் வையுங்கள். 

சூழல் எச்சரிக்கை:

இப்பொழுதெல்லாம் 'செல்லின்றி ஓர் அணுவும் அசையாது! 'என்று ஆகிவிட்டது. தங்கள் சூழல் குறித்த எச்சரிக்கையோடு இல்லாமல் நடமாடும் பெண்கள்தான் குற்றவாளிகளுக்கு சுலப இலக்கு ஆகிறார்கள். இருட்டான அல்லது தனிமையான வீதிகளில் நடக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டு கவனமின்றி இருக்கக் கூடாது. காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டோ, பாடல் கேட்டபடியோ, பேசிய படியோ நடக்கக்கூடாது. சுற்றிலும் இருப்பவர்களை கவனிக்கவும். எதிரே யார் வருகிறார்கள். சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஏதாவது நிகழ்கிறதா என சுற்றும் முற்றும் பார்வை சுழற்றியப்படி இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை விஷமிகள் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் விரைவில்  அடையாளம் காணப்பட்டு, தண்டனைக்கு உள்ளாவார்கள். 

தூரத்தில் வீசுங்கள்:

னிமையில் செல்லும்போது யாரோ ஒருவன் ஆயுதத்தைக் காட்டி நகை, பணம் என எல்லாவற்றையும் கேட்டால், அழுகையோடு அவற்றையெல்லாம் சுருட்டி அவன் கையில் கொடுக்காமல், அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே சற்று தூரத்தில் தூக்கி வீசுங்கள். அவன் அதை எடுக்க ஓடும்போது அதற்கு எதிர் திசையில் ஓடி தப்பிக்கலாம். கூச்சல் போட்டு யாரையாவது உதவிக்கும் அழைக்கலாம். இதற்கு அவகாசமும் கிடைக்கும். சமயத்தில் வீசிய பொருட்களை நாமே எடுத்தும் வரலாம். 

தற்காப்புக் கலை:

வீட்டில் சிறு சிறு வேலைகளை செய்து, உடற்பயிற்சி செய்து தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டு வெளியில் நடக்கும்போது ஒரு உற்சாகம் வரும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் வரும். ஆதலால் முடிந்த வரை வீட்டு பெரியவர்கள் சொல்லித் தரும் சின்ன சின்ன தற்காப்பு உத்திகளை கவனமாக கற்றுக் கொள்ளுங்கள். ஒன்றுமில்லை ஓங்கி குத்தவாவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஆபத்துக்கு பாவம் இல்லை. தற்காப்புக்குத்தான். 

கதவு திறந்தே இருக்கட்டும்:

வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தால் கதவை திறக்கும் முன்பே விசாரித்துக் கொண்டு, அவர்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கவேண்டும் .ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால், அவர்கள் போகும் வரை வாசல் கதவைத் திறந்தே வைத்திருக்க வேண்டும். வீட்டுச் சாவியை மறைத்து வையுங்கள். முடிந்தவரை நீங்களாக சென்று யாரிடமும் பேச்சு கொடுக்காதீர்கள். அக்கம் பக்கத்து வீட்டினரின் பார்வை உங்கள் மீது படும்படி நடமாடுங்கள். 

இதுபோல் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டால், தனிமையில் இருக்கும் போதும்,  நடக்கும் போதும், வெளியில் செல்லும்போதும் பாதுகாப்புடன் செயல்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com