ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்ணிய செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள ஜான் ஜான் பகுதியில் பிறந்தவர் நர்கீஸ் முகமது. இவர் இமாம் கோமேனி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும் பொழுதே சமத்துவம், பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார். இதனால் இவர் மாணவராக இருக்கும் பொழுதே தனித்து அடையாளம் காட்டப்பட்டார். அதன் பிறகு முற்போக்கு புத்தகங்களை படிக்க தொடங்கி தொடர் முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல், வழிநடத்தவும் தொடங்கினார்.
ஈரான் நாட்டில் உள்ள முன்னணி செய்தித்தாள்களில் முற்போக்கு கருத்துக்களை எழுத ஆரம்பித்தார். ஒருபுறம் பொறியாளராக பணிபுரிந்து கொண்டு, மறுபுறம் பெண்ணிய செயல்பாட்டாளராக பயணித்துக் கொண்டிருந்தார். நர்கீஸ் முகமதின் தொடர் நடவடிக்கைகளால் ஈரான் அரசால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதும் அவர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நோபல் பரிசு தேர்வு குழு தெரிவித்திருப்பது, ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமது மிகச் சிறந்த பெண்ணிய போராளி. மனித உரிமை, சுதந்திரம், சமத்துவம், பெண் விடுதலை குறித்து தொடர் முன்னெடுப்புகளை துணிச்சலுடன் எடுத்து வருகிறார்.
ஈரான் அரசால் பலமுறை கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். 13 முறை சிறை வாழ்க்கை, 5 முறை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர், 31 ஆண்டு காலம் சிறையில் வாழ்க்கை அனுபவித்தவர். மேலும் 154 கசியடிகளை பெற்றவர். இவர் தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.