
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கு பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நவீன மருத்துவத்தில் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது ரேடியம் கதிர்வீச்சு சிகிச்சை. எக்ஸ்ரே எடுப்பதற்கும், உடலில் இறந்துபோன செல்களை அழிப்பதற்காகவும், ரேடியக் கதிர்களைப் பயன்படுத்தலாம் என்பதே முதன் முதலில் கியூரி கண்டுபிடித்ததாகும். ரேடியத்தின் வேதியியல் குணங்களைக் கண்டுபிடித்ததற்காக இரண்டாவது முறை 1911-ல் கியூரிக்கு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரு முறை நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியலறிஞர் உலகிலேயே எவருமில்லை என்ற சிறப்பு பெற்றார் கியூரி.
சிறப்பு மிக்க நோபல் பரிசை முதல்முறையாக தன் கணவருடன் இணைந்து பெற்ற பெண் என்ற பெருமையும் இவரையே சாரும்.
மேரி கியூரிக்குப் பிறகு 24 ஆண்டுகளாக வேதியியல் துறையில் பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படவில்லை. 1935-ஆம் ஆண்டு மேரி கியூரியின் மகள் ஐரின் கியூரிக்கும், அவரது கணவர் ஜோலியட் கியூரிக்கும் செயற்கை கதிரியக்கம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேரி கியூரி பற்றி பார்ப்போம்.
போலந்து நாட்டிலுள்ள வார்சா நகரத்தில் 1867-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி புரோனிஸ்லாவா விலாடிஸ்லாவ், ஸ்க்லோடோவ்ஸ்கி ஆகியோரின் மகளாக பிறந்தார் மேரி. மேரிக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உண்டு. பெற்றோர் இருவருமே பள்ளி ஆசிரியர்கள். அக்காலத்தில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி மட்டுமே அளிக்கப்பட்டது. அப்படி இருந்தாலும் யாரும் கற்றுக் கொடுக்காமலே மேரி அவருடைய ஆர்வத்தின் காரணமாக ஆரம்ப கல்வியை பெற்றார். மேரியின் சிறு வயதிலேயே அவருடைய தாயார் மற்றும் சகோதரி நோய்களுக்கு பலியாகினர். குடும்பத்தில் வறுமை சூழ்நிலை இருந்தாலும் தன்னுடைய படிப்பு மீதான ஆர்வத்தை மட்டும் மேரி விடவில்லை. அக்காலத்தில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை என்றாலும் அவர்களுக்காக நடத்தப்பட்ட ரகசிய பள்ளிகளில் அறிவியலில் மேற்படிப்பை துவங்கி முடித்தார்.
பாரிஸ் சென்று அங்குள்ள சோர்போன் கழகத்தில் இயற்பியலை சிறப்பு பாடமாக மேற்கொண்டார். வறுமையும், சத்துணவு பற்றாக்குறையும் அவரை வாட்டினாலும் படிப்பை மட்டும் கைவிடாமல் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நான்கு ஆண்டுகளில் இயற்பியலிலும், கணிதத்திலும் இரண்டு எம் ஏ பட்டங்களை பெற்றார்.
அச்சமயம் முனைவர் பட்டம் பெற காந்தத்தை பற்றி தான் செய்த ஆராய்ச்சியில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பியரி கியூரி என்ற அறிவியல் மேதையைச் சந்தித்தார். தனது சந்தேகங்களைத் தீர்த்த அவரை நேசித்து 1895 ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு மேரி கியூரி, மேடம் கியூரி ஆனார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஹென்றி பெக்குரல்’ என்பவர் எழுதியிருந்த கதிர்வீச்சு பற்றிய கட்டுரை அவரைக் கவர அதில் ஆய்வுகளைத் தொடங்கினார் அவர். கணவரும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
யுரேனிய உப்புகளிலிருந்து ஒரு வகையான கதிர்கள் தாமாக வெளிப்படுவதைக் கண்டுபிடித்த மேரி கியூரி அவற்றுக்கு ‘கதிரியக்கம்’ என்று பெயரும் இட்டார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1898ஆம் ஆண்டில் ஒரு புதிய கதிரியக்க தனிமத்தை பிரித்து எடுத்த மேடம் கியூரி தம்பதியினர் அதற்கு தாய் நாட்டின் நினைவை போற்றும் வகையில் ‘போலோனியம்’ என்ற பெயரிட்டனர். அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அவர்கள் மேலும் ஒரு கதிரியக்க தனிமத்தைப் பிரித்தெடுத்தனர். அதன் மகத்தான கதிர்வீச்சுத் திறன் காரணமாக அதற்கு ‘ரேடியம்’ என்ற பெயரும் இட்டனர்.
க்யூரி தம்பதிகளின் ஆராய்ச்சி புகழ் உலகமெங்கும் பரவிய நிலையில் லண்டன் ராயல் கழகம் அவர்களுக்கு டேலி பதக்கம் என்ற உயரிய விருதை வழங்கியது. 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்குரல், மேரி கியூரி, பியரி கியூரி மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
புகழ் இருந்தாலும் கியூரியின் குடும்ப வாழ்க்கை வறுமையும் உழைப்பும் நோய்களும் நிறைந்ததாகவே இருந்தது. அவர்கள் கண்டுபிடித்த கதிரியக்கத் தன்மையுடைய போலோனியமும் ரேடியமும் அவர்களுடைய உயிரை உறிஞ்சிகொண்டிருந்தன.
எதிர்பாராத சூழலில் பியரி க்யூரி உயிரிழக்க அந்த வலியில் இருந்து மீள மேரி மேலும் தனது ஆராய்ச்சிகளில் ஆர்வமாகச் செயல்பட்டார். அவரின் ஆராய்ச்சியின் காரணமாக எக்ஸ்ரே எடுப்பதற்கும் உடலில் இறந்துபோன செல்களை அழிப்பதற்கும் ரேடியோ கதிர்களைப் பயன்படுத்தலாம் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்ததற்காகவும், ரேடியத்தின் வேதியியல் குணங்களைக் கண்டுபிடித்ததற்காகவும் இரண்டாவது முறை 1911ஆம் ஆண்டு கியூரிக்கு (வேதியலில்) மீண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1914-ல் மேரியின் முயற்சியால் ‘ரேடியம் இன்ஸ்டிடியூட்’ பாரீசில் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம் மோசமாகிக் கொண்டே வந்த உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் மேரி. அத்துடன் போர் முனையிலும் சேவை செய்து வந்தார். அவர் கண்டுபிடித்த ரேடியக் கதிர்வீச்சின் மூலம் அவருடைய உடல் பாதிப்படைந்து 1934-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி மேரி தனது 66ம் வயதில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு ரேடியம் இன்ஸ்டிடியூட், ‘கியூரி இன்ஸ்டிடியூட்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்நிறுவனத்தில் மேரி பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆராய்ச்சி பற்றிய குறிப்பேடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது சிறப்பு!