சிறுதானிய உணவு ஏன் அவசியம்?

சிறுதானிய உணவு ஏன் அவசியம்?
Published on

தி துரித உணவுகளுக்கு மாறிவிட்ட நம் மக்கள் மனதில் தற்போது, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நம் பாரம்பரிய உணவு விஷயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதனால் எண்ணெய், அரிசி, பருப்பு வகைகளைப் பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள். அந்த வகையில் அவர்களைத் தற்போது கவர்ந்திருப்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, மக்காச் சோளம் போன்ற சிறுதானியங்கள். தற்போதைய சூழ்நிலையில் சிறுதானிய உணவுகள் ஏன் தேவை? சிறுதானிய உணவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது? என்று தெரிந்துகொள்வோம்.

நம்மோட தாத்தா பாட்டி காலத்தில் அரிசிச் சோறு விசேஷ நாட்களிலும் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சமைப் பார்கள். மற்ற நாட்களில் சிறுதானிய உணவுகளைத்தான் உண்டு வந்தார்கள். சிறுதானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜிங்க், கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் ஒருவர் எவ்வளவு நேரம் கடுமையான வேலை செய்தாலும் சோர்வடைய மாட்டார். இன்று பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை மற்றும் மூட்டுப் பிரச்னை இருக்கிறது. அதற்குச் சிறுதானிய உணவுதான் சரியான தீர்வாகும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்துக்காக நல்ல பொருட்களை வாங்கிப் பதப்படுத்தத்தான் வேண்டும். சிறுதானிய உணவுகளில் சில வகைகளை செய்யும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு முதலில் பிடிக்காதுதான். காரணம் அதன் நிறம். நாம் எல்லாமே எல்லாப் பொருட்களையும் வெள்ளை நிறத்திலேயே சாப்பிட்டுப் பழகிவிட்டோம். வெள்ளை உணவுதான் சுத்தமானது என்ற தவறான எண்ணம் பரவிவிட்டது. சிறுதானிய உணவுகளின் சத்தான விஷயங்களை எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். சிறுதானிய உணவுகளைச் சாமான்ய மக்கள் கூடப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளார்கள் என்றாலும் இன்னும் அதிகளவில் வீட்டு உணவாகப் பழக்கத்துக்கு வரலைன்றதுதான் குறை. சிறுதானிய உணவகங்களுக்கு இளைஞர்கள் விரும்பி வந்து சாப்பிடுகிறார்கள் என்பது சிறப்பு.

தற்போது கிடைக்கிற உர விளைச்சல் உணவுகளைவிட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானிய ரகங்களின் விலை அதிகம். அதனால்தான் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், விவசாயிகள் விளைவிக்கும் இடத்தில் போய் வாங்கினால் ஏறத்தாழ அதே விலைதான். அது பல கைகளைத் தாண்டி வரும்போதுதான் விலை உயர்ந்து விடுகிறது.

இன்னொன்று, சிறுதானியப் பயிர்களுக்கு 25 சதவிகிதம் தண்ணீர் இருந்தாலே போதும். இயற்கை முறையி்ல் விளைவிக்கப்படும் சில வகைகள் மூன்று மாதத்திலேயே கெட்டுவிடும். அதை உரிய முறையில் வெயிலில் உலர்த்திப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொருட்களின் விலை சற்றுக் கூடுதலாகும். குடும்ப உடல் நலத்துக்காக நல்ல பொருள்களைக் கொஞ்சம் விலை கொடுத்து வாங்குவதில் தவறில்லைதானே! மேலும், அதிகளவில் மக்கள் வாங்கிப் பயன்படுத்தினால் விலை கண்டிப்பாகக் குறையும்.

சிறுதானிய உணவுகளை எப்படி சமையலில் சேர்க்க வேண்டும்? மூன்று வேளையும் சாப்பிடலாமா? என்றெல்லாம் சந்தேகங்கள் வரலாம். உடனடியாக மூன்று வேளையும் சிறுதானிய உணவுகளைச் சாப்பிடக்கூடாது. ஜீரணிக்கச் சிரமமாகிவிடும். இது, குழந்தைகள், முதியவர்களுக்கு உகந்தது இல்லை. நாம் இரண்டு தலைமுறையாக உர வகை உணவுகளைச் சாப்பிட்டுப் பழகிவிட்டோம். சத்தற்ற, சக்கை உணவுகளுக்கு நம் ஜீரண மண்டலம் பழகிவிட்டது. சிறுதானிய உணவுகள் ஜீரணிக்கக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆகையால் முதலில் காலை ஒருவேளை உணவாகச் சிறுதானிய பானம், கேழ்வரகு பானம், கம்பங் கூழ் அல்லது குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட தோசை, இட்லி வகைகளைச் சேர்த்துக்கொண்டு படிப்படியாக மூன்று வேளை உணவுக்கு மாறலாம்.

டிப்ஸ் 1 : தோசை மாவுக்கு அரிசி மூன்று பங்கு, உளுந்து ஒரு பங்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு பங்கு குதிரைவாலி மற்றும் தோல் உள்ள உளுத்தம்பருப்பைப் பயன்படுத்தலாம். நிறம் வேறாக இருந்தாலும் இட்லி சுவையாக இருக்கும்.

டிப்ஸ் 2 : ட்லி மாவில், ஆமணக்குக் கொட்டையை உடைத்து அதிலுள்ள வெள்ளைப் பருப்பை ஒன்றிரண்டு சேர்த்து அரைத்தால் இட்லி புசுபுசுவென இருக்கும். குழந்தைகள் ருசித்துச் சாப்பிடுவார்கள்.
மேலும், பெரியவர்களைவிட சிறுவர்களுக்குச் சிறுதானிய உணவைப் பழக்க வேண்டும். அப்படிச் செய்தால்,  அது தலைமுறையாகத் தொடரும். எதிர்ப்பு சக்தி கூடி ஆரோக்கியம் பெருகும்.

டிப்ஸ் 3: காலையில் குழந்தைகளுக்கு பரபரப்பாக விளம்பரப்படுத்தப்படும்  ஏதாவது ஒரு சத்து மாவை பாலுடன் கலந்து கொடுக்கிறோம். அதற்குப் பதிலாக வெல்லம் பயன்படுத்தி ராகியில் கஞ்சி வைத்துக் குடிப்பது அவ்வளவு நல்லது.

சிறுதானிய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது நீரிழிவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி நீங்குவதோடு எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். குறிப்பாக, சிறுதானியங் களில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் இருக்காது. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் சிறுதானிய உணவுகளைத் தவிர்க்கணும்

சர்க்கரை, எண்ணெய், காரம், கொழுப்பு, உப்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக நோய் வந்து சேரும். சிறுதானிய உணவு இவை அனைத்தையும் சரி செய்யும். ஆனால், சிறுதானிய உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது. போதுமான உடற்பயிற்சி அவசியம். அப்பொழுது தான் உணவு செரிமானமாகும்.

டிப்ஸ் 4: நாம் தற்போது பிரியாணிக்கு பாசுமதி அரிசியைப் பயன்படுத்துகிறோம். சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்தால் தெருவே மணக்கும். சுவையாகவும் இருக்கும்.

டிப்ஸ் 5: பாலிஷ் செய்த அரிசி மாதிரி குதிரைவாலி சீக்கிரம் வேகாது. கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவுதான்.

நீ எங்க வாழறியோ அந்த நிலத்தில் விளைந்த, அந்த சீசன் உணவுகளைச் சாப்பிடு என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்த உணவு கலாசாரம். அதனால்தான் பண்டிகைக் காலங்களில் சாமிக்குப் படைக்கிற  உணவில் அந்தந்தக் காலத்து விளைச்சல்  உணவுகளையே படைக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சிறுதானிய உணவு சாப்பிடுவதைத் தகுதி குறைவாகத்தான் பார்த்தார்கள். இப்போது சிறுதானியங்கள் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்கள் மக்கள். ஆரோக்கியம் பெருகட்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com