சிறுகதை – வலி!

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்
Published on

மீனா மருத்துவமனைக்குள் நுழைந்தபோது காலை மணி ஏழு ஐம்பது. வரவேற்பறை மேசை மீது இருந்த ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு விட்டு வலது பக்க சுவரில் பொருத்தப்பட்டிருந்த வருகை பதிவேட்டு இயந்திரத்தில் தனதுவலது கை ஆள்காட்டி விரல் ரேகையை பதிவு செய்தாள். பணியாளர்களின் ஓய்வறைக்கு சென்று, தான் அணிந்திருந்த புடவையை மாற்றி செவிலியர் சீருடையை அணிந்து வெளியே வந்த போது சரியாக எட்டு மணி.

இரவுப்பணி முடித்து எதிரே வந்த செவிலியர் கமலா இவளைப் பார்த்து, "மீனா டியூட்டிக்கு வந்துட்டா மணி எட்டுன்னு அர்த்தம்" என்று சொல்ல புன்னகைத்தாள் மீனா. அந்தத் தளத்தின் இடது புற அறைகளில் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நான்கு இளம் பெண்கள் அடுத்தடுத்த அறையில் இருந்தனர். வலதுபுற அறைகளில் நேற்று தான் சுகப்பிரசவம் ஆன இளம் தாய்மார்கள் இருவர் இருந்தனர்.

மீனா முதலாவது  அறைக்குள்   நுழைந்தபோது, அந்த இளம் தாய் படுக்கையில் அமர்ந்தவாறு தன் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பாலூட்ட முயன்று கொண்டிருக்க, அருகில் அவளுடைய  வயதான தாய் நின்று கொண்டிருந்தார்.

இவளைப் பார்த்ததும், "நர்ஸம்மா, என் மகளுக்கு பால் சுரக்கவே மாட்டேங்குது. குழந்தையோ பசியில அழுகுது. பாட்டில் பால் புகட்டலாமா?’’ என்ற தாயிடம் "வேண்டவே வேண்டாம். குழந்தை பருகப்பருக பால் சுரந்து விடும். அதனால  தாய்ப்பால் கொடுங்க’’ என்றவாறு குழந்தையின் தலையை மிருதுவாக வருடிக் கொடுத்தாள் மீனா.

“எக்காரணத்தைக் கொண்டும் பாட்டில் பால் கொடுக்கவே கொடுக்காதீங்க. ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் தரணும். குழந்தைக்கு தேவையான எல்லா சத்தும் அதுல இருக்கு. ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான பாசப்பணிப்பு தாய்ப்பால் ஊட்டுவதன்  மூலம்  தான் வரும்’’ அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, "நர்ஸம்மா, அந்த இரண்டாவது ரூம்ல இருக்கிற பெண்ணுக்கு பிரசவ வலி வந்துச்சு போல. துடியா துடிக்குது. வந்து பாருங்க’’ என்று ஆயா வந்து சொல்ல அங்கு விரைந்தாள் மீனா.

அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்து விட்டு, "இது பொய் வலி. இன்னும் பிரசவ வலி வரலை" என்றாள். அருகில் நின்றிருந்த அவளுடைய கணவனிடம்,  "ஏன், உங்க வீட்லருந்து லேடீஸ் யாரும் வரலையா? " என்றாள்.

"இல்லைங்க. நாங்க உறவுகளை எதிர்த்துக்கிட்டு  காதல் கல்யாணம் செய்துக்கிட்டோம்" என்றான் அந்த இளைஞன்.

'’ஓ! அப்படியா? நாங்க இருக்கோம். கவலைப்படாதீங்க. உங்க மனைவி  நல்ல ஆரோக்கியமா தான் இருக்காங்க. இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள பிரசவம் ஆயிடும் போல தெரியுது"

"தேங்க்ஸ் சிஸ்டர்.  நான் ரொம்ப பயந்து போய் இருந்தேன். எவ்வளவு அன்பா அக்கறையா பேசுறீங்க. எனக்கு என் சொந்த அக்காவை பார்க்கிற மாதிரியே இருக்கு’’ என்றாள் அந்தப் பெண் கண் கலங்க. மீனா அவளின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டு தட்டிக் கொடுத்தாள்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? நிச்சயம் இதை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க!
ஓவியம்; தமிழ்

அதன் பின் மற்ற நோயாளிகளை கவனித்து விட்டு பத்து மணிக்கு காலை உணவு உண்ணும் போது, மூன்றாவது அறை பெண்ணுக்கு பிரசவ வலி வந்துவிட, டிபன் பாக்சை பாதியில் வைத்துவிட்டு பிரசவ வார்டுக்கு விரைந்தாள். மதியம் மூன்று மணிக்கு மேல் கிடைத்த இடைவெளியில் கொண்டுவந்த தயிர் சாதத்தை அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

இரவு எட்டு மணியானதும் நர்ஸ் ஜெயாவிடம் டூட்டியை ஒப்படைத்து விட்டு உடைமாற்றிக்கொண்டு தன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு விரைந்தாள்.

“வந்துட்டியா!  ரொம்ப பசிக்குது. சீக்கிரம் இட்லி ஊத்தி சட்னி அரை’’ என்றார் டிவி பார்த்துக் கொண்டிருந்த மாமியார்.

“சட்னி வேண்டாம். நல்ல காரசாரமா குழம்பு வை’’ என்றான் அவளது கணவன், அலைபேசியிலிருந்து கண்களை எடுக்காமல்.

அதற்குள் அவள் வருகையை அறிந்தாற்போல குழந்தை அழ ஆரம்பித்தது. அவசரமாக தொட்டிலில் கிடந்த தன் நான்கு மாதக் குழந்தையை அள்ளிக்கொண்டாள்.

“நீ காலையில எடுத்து வச்சுட்டுப் போன தாய்ப்பால் மதியமே தீர்ந்து போச்சு. பாட்டில்ல பசும்பால் ஊத்திக் கொடுத்தா குடிக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்குது” என்று முகத்தை சுளித்தார் மாமியார்.

ஓவியம்; தமிழ்
ஓவியம்; தமிழ்

குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அவளது நெஞ்சுப் பகுதி ஈரமாகி விட,  சுவரில் சாய்ந்தமர்ந்து குழந்தைக்கு பாலூட்ட ஆரம்பித்தாள் மீனா.

ஆறு மாசம் வரைக்கும் லீவு போட்டு குழந்தையை பார்த்துக்கிறேன் என்று கெஞ்சியும், ‘’நீ வேலை செய்யறது பிரைவேட் ஹாஸ்பிடல்ல. மூணு மாசம்  லீவெடுத்தா போதும். அதுக்கு மேல ஒழுங்கா போய் வேலையில சேரு. அப்பதான் சம்பளம் கிடைக்கும்’’ என்று சிறிதும் ஈரமின்றி கூறிய கணவனை எண்ணிக் குமுறினாள். மார்பகங்களில் பால் சுரக்க சுரக்க, கண்களில் நீர் ஆறாகப் பெருகியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com