Interview: விசில் போடு! அப்படிப் போடு! திருப்பூரின் முதல் பெண் நடத்துனர் கோகிலா!
மகளிர் தினம் என்றாலே பெண்களின் சாதனைகள், தன்னம்பிக்கை ஆகியவற்றை கொண்டாடும் ஒரு சிறந்த நாள் என்றே சொல்லலாம். பல தடைகளையும் சவால்களையும் தாண்டி தங்கள் வாழ்க்கையை தாங்களே வடிவமைத்த பெண்களின் கதைகள் இன்றைய நம் சமூகத்திற்கு பெரும் ஊக்கமாக இருந்து வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு உத்வேகப் பெண்தான் திருப்பூரின் முதல் அரசு பேருந்து பெண் நடத்துனர் ஆர். கோகிலா (Tirupur first women bus conductor)! இவர் திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகரப் பேருந்து (ரூட் எண் 9J) -ல் நடத்துனராக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ராமலிங்கம் நம்பியூர் கிளையில் நடத்துனராக பணியாற்றி வந்தவர். அவர் மறைந்ததை அடுத்து வாரிசு அடிப்படையில் இந்தப் பணி கோகிலாவுக்கு கிடைத்துள்ளது. இதற்காக சில மாதங்கள் உரிய பயிற்சியும் பெற்றுள்ளார் கோகிலா. இந்நிலையில் கோகிலாவுடன் நடந்த சுவாரசியமான நேர்காணலை இந்தக் கட்டுரையில் வாசிப்போம், வாருங்கள்...
திருப்பூரின் முதல் அரசு பேருந்து பெண் நடத்துனர், இந்த அடையாளம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?
இந்த அடையாளம் எனக்கு மிகப்பெரிய பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. பெண்களால் இது முடியுமா? என்று கேட்கும் சமூகத்திற்கு, எந்தத் துறையிலும் பெண்கள் தங்கள் திறமையால் முன்னேற முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, மற்ற பெண்களுக்கும் ஒரு மோட்டிவேஷனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
ஒரு பெண்ணால் எந்தக் கடினமான வேலையையும் செய்ய முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம். இதை எப்படி உணர்கிறீர்கள்?
பேருந்து நடத்துனர் பணி சவாலானதுதான். ஆனால் அது எனக்கு கிடைத்த ஒரு பெரிய கௌரவம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல சவால்களை எதிர்கொண்டு பெண்கள் தினமும் பல பொறுப்புகளைச் சமாளித்து வருகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளைத் தாங்கிக்கொண்டும் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு இடையில், பேருந்து நடத்துனர் பணி கடினமான ஒன்றாக நான் நினைக்கவில்லை. அதனால் வாய்ப்பு கிடைத்தால் எந்தக் கடினமான வேலையையும் பெண்களால் சிறப்பாகச் செய்ய முடியும். செய்கிறார்கள்; செய்வார்கள்!
சிறுவயதில் உங்கள் தந்தை பணியாற்றிய பேருந்தில் பயணம் செய்த நினைவுகள் இப்போது எப்படித் தோன்றுகிறது?
சிறுவயதில் அவர் நடத்துனராக இருந்த பேருந்தில் நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். அப்போது அது ஒரு சாதாரண விஷயமாகத் தெரிந்தது. ஆனால், இன்று அதே துறையில் நான் நடத்துனராகப் பணியாற்றும் போதுதான் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது புரிகிறது. உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், கால் வலியுடன் அவர் குடும்பத்திற்காக நின்றுகொண்டே உழைத்த அந்த நினைவுகள் இப்போதும் எனக்குள் ஒரு ஊக்கத்தை தருகிறது. அப்பாவைப் போலவே உழைக்க வேண்டும் என்ற உறுதி தற்போது எனக்குள் வந்திருக்கிறது.
அரசுத் துறையில் அதிக பெண்கள் வரவேண்டும் என்பதற்கு உங்கள் பரிந்துரைகள் என்ன?
முதலில் பெண்களுக்குத் தைரியமும், சமூகத்தில் அவர்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் குடும்பத்தின் ஆதரவும் மிகவும் முக்கியம். பாதுகாப்பான பணிச்சூழலும் தேவையான ஊக்கமும் கிடைத்தால் பெண்களும் எந்தத் துறையிலும் திறமையாகப் பணியாற்ற முடியும்.
உங்கள் தன்னம்பிக்கையின் ரகசியம் என்ன?
எனக்கு சவால்கள் என்றால் பிடிக்கும். காதல் திருமணம் செய்ததால் பெற்றோரின் ஆதரவின்றி பல கஷ்டங்களுக்கு நடுவே என் படிப்பைத் தொடர்ந்தேன். வேலைக்குச் சென்றுகொண்டே எம்.ஏ. ஆங்கிலம் படிப்பையும் முடித்தேன். 14 ஆண்டுகள் தனியார் துறையில் பணியாற்றிய அனுபவம் எனக்கு பெரிய தன்னம்பிக்கையை அளித்தது. இன்று நடத்துனராக பணியாற்றுவது அந்த நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் கிடைத்த பலனாக நான் நினைக்கிறேன்.
குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ‘சக்சஸ் ஃபார்முலா’ என்ன?
எல்லா பெண்களும் தன்னம்பிக்கை, பொறுமை, கடின உழைப்பு ஆகிய மூன்றையும் பிடித்துக் கொண்டால் எந்தச் சவாலும் அவர்களைத் தடுக்க முடியாது. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனதைத் தளர விடாமல் முன்னேற வேண்டும். குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணும் உண்மையில் ஒரு சாதனையாளர்தான்.
"தைரியம், மனவலிமை, பொறுமை இந்த மூன்றும் சேர்ந்தால் ஒரு பெண்ணை யாராலும் அசைக்க முடியாது; தடுக்க முடியாது. 'உன்னால் முடியாது' என்று சொன்ன உலகிற்கு, 'எங்களால் முடியும்' என்ற பறைசாற்றி சாதித்து வரும் அனைத்துச் சிங்கப்பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!" - ஆர்.கோகிலா.

