
அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறதா? பொதுவாக உலக நாடுகள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையில் பார்த்தால் அரசியல் வாய்ப்புகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் பண்பு பல நாடுகளில் இல்லை.
உலக நாடுகளில் பெண்களின் ஆளுமைக்கு முதலில் மதிப்பு கொடுக்கப்படுவது இந்தியாவிலும் அதன் துணைக் கண்ட நாடுகளிலும் தான். இந்தியாவில் பெண்களின் அரசியல் வாய்ப்பு இன்றோ, அல்லது கடந்த நூற்றாண்டு காலத்தில் வழங்கப்பட்டது அல்ல. அதற்கு முன்பே அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் களத்தில் கூட இந்தியா பெண்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்கும் நாடாக உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் பெண்களை உடனடியாக மக்கள் ஆதரிக்கின்றனர். இதனால் அவர்களின் அரசியல் வாய்ப்புகள் எப்போதும் பிரகாசமாக இருந்துள்ளது. ஆனால், இந்த வாய்ப்புகள் பெண்கள் முன்னேறியதாக பிரச்சாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுத்தமாக இல்லை என்பது வேதனையான விஷயம்.
ஐரோப்பிய கண்டத்தை பொறுத்த வரையில் பல நாடுகளில் பெண்களுக்கான அரசியல் வாய்ப்பு குறைவாக உள்ளது. மாநிலத்தின் முதன்மை பொறுப்புகளில் அவர்கள் இருப்பது அரிதாக உள்ளது. அல்பேனியா, அன்டோரா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், சைப்ரஸ், செக் குடியரசு, லிச்சென்ஸ்டீன், லக்சம்பர்க், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் வாடிகன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் இதுவரை தலைமை பொறுப்புகளுக்கு வந்தது இல்லை.
தற்போது இத்தாலியில் தலைமை பொறுப்பில் உள்ள ஜார்ஜியா மெலனி மக்களிடம் செல்வாக்கு பெற்ற பெண்மணியாக உள்ளார். மேலும் டென்மார்க்கில் மெட்டே ஃபிரடெரிக்சன், லாட்வியாவில் எவிகா சிலினா மற்றும் லிதுவேனியாவில் இங்க்ரிடா சிமோனிடே போன்ற பெண்மணிகள் அரசுத் தலைவர் பொறுப்பில் உள்ளனர்.
பிரிட்டனை பொறுத்த வரை மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோர் பிரதமராக இருந்துள்ளனர் ஆயினும் அவர்கள் நீண்ட கால செல்வாக்கு பெற முடியவில்லை. ஒப்பிட்டளவில் இந்தியாவில் இந்திரா காந்தி, பாகிஸ்தானில் பெனாசிர், இலங்கையில் சிறிமாவோ மற்றும் சந்திரிகா, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மற்றும் கலிதா ஜியோ போன்றோர் நீண்ட காலம் மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது இலங்கையில் ஹரிணி அமரசூரிய பிரதமராக உள்ளார். இந்தியாவின் ஜனாதிபதியாக மாண்புமிகு திரவுபதி மூர்மு உள்ளார்.
உலகில் அதிக பெண் ஆட்சியாளர்கள் உருவாகிய நாடாக இந்தியா இருந்துள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்களை தலைமைப் பதவிக்கு ஏற்கும் மனநிலையில் தான் இந்தியர்கள் இருந்துள்ளார்கள். இதற்கு உதாரணமாக ராணி துர்காவதி , ராணி அகல்யாபாய் ஹோல்கர், ராணி வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள், ராணி சென்னம்மா, ராணி லட்சுமிபாய், ராணி தராபாய், ராணி அபாக்கா போன்றோர்களை குறிப்பிடலாம்.
இவர்கள் வெளிநாட்டு ராணிகள் போல இல்லாமல் போர்க்களத்தில் நுழைந்து எதிரிகளை துணிவுடன் வேட்டையாடி நாட்டையும் நாட்டு மக்களையும் வீரத்துடன் காப்பாற்றிய மங்கைகள். இந்த அரசிகள் மட்டுமல்லாது ரசியா சுல்தான், பேகம் ஹஸ்ரத் மகால் போன்ற இசுலாமிய பெண்களும் ஆட்சி செய்துள்ளனர். இது இந்தியாவை தவிர வேறு நாடுகளில் நிகழவில்லை.
உலகின் நீண்ட கால தேர்தல் முறையை அமெரிக்கா கொண்டிருந்தாலும் இதுவரை அங்கு பெண்களுக்கு ஜானாதிபதி ஆகும் வாய்ப்பளிக்கப்படவே இல்லை. உலகின் முதல் மூன்று இடத்தில் உள்ள வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவில் பெண்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் கிடைக்கவில்லை. ஆனால் நான்காம் வல்லரசு இடத்தில் உள்ள இந்தியாவில் பெண் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.