உலக தாய்ப்பால் வாரம் - 1: தந்தையின் பங்கு என்ன?

Lactation Consultant டாக்டர். சோனாலி சந்தானம்
Baby with Parents - World Breastfeeding Week
Baby with Parents - World Breastfeeding Week
Updated on
mm

புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்திற்குத் தாயின் பாலையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. பிறந்தது முதல் ஆறு மாத காலம் வரை குழந்தையின் ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பாலே இருக்கிறது. ஒரு புதிய தலைமுறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அதுவே முதல் ஆதாரம். தாய்ப்பால் மூலமாகதான் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் கிடைக்கிறது.

அனைத்து விதமான சத்துகளும் சரியான விகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள அமுதம் தாய்ப்பால். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக கடந்த 1990ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரமான 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

நம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....

டாக்டர் சோனாலி சந்தானம்
டாக்டர் சோனாலி சந்தானம்

டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆண்டுதோறும் பெரும்பாலான சிறப்பு நாட்கள் ஒரு நாளுக்கு மட்டுமே அனுசரிக்கப்படும் போது, தாய்ப்பால் விழிப்புணர்வு மட்டும் ஒரு வார காலம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் என்ன?

  • பணியிடங்களில் தாய்ப்பாலூட்வதற்காக இளம்தாய்மார்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை?

  • இளம் தந்தைமார்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?

விழிப்புணர்வு:

முன்பெல்லாம் பெண்களுக்கு வீட்டிலேயே பிரசவம் நடக்கும். ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நினைத்து பார்ப்பதே கடினமாக உள்ளது. காலத்திற்கு ஏற்றார்போல் மனிதனுடைய வாழ்க்கை முறையும், உணவு முறையும் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. இதனுடைய வெளிப்பாடுதான் அதிக நோய் தொற்றும் அதனை சரி செய்வதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும்.

அப்படித்தான் தற்போது குழந்தை பிறக்கும் முறையும் மருத்துவ ரீதியாக மாறியுள்ளது. மருத்துவமனைகளிலேயே சுகபிரசவ காலம் மாறி, தற்போது அறுவை சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. இதேபோல்தான் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முதல் உணவான தாய்ப்பாலூட்டுவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தைக்கு ஏன் தாய்ப்பால் ஊட்டவேண்டும்? தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் என்ன? தாய்க்கு அதிகளவு தாய்ப்பால் சுரந்தால் என்ன செய்வது? குறைந்தளவு தாய்ப்பால் சுரந்தால் என்ன செய்வது? குழந்தை பால் குடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? எவ்வளவு நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும்? என ஏராளமான கேள்விகள் இன்றைய இளம் பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த சந்தேகங்களுக்கு தொடர் விழிப்புணர்வு தேவை என்றாலும், இந்த ஒரு வாரம் இந்த உலகமே தாய்பாலின் அருமையை, அவசியத்தை கொண்டாடுவது அவசியம், ஆனந்தம்!

அலுவலகங்களில் தனி அறை:

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் மற்றும் பணியிடங்களில் இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பாலூட்வதற்காக வசதிகளை அமைத்தல் போன்றவை வலியுறுத்தப்படுகிறது. இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் உள்ள கழிவறைகளில் சென்றுதான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுகிறார்கள். இது மிகவும் கேவலமான விஷயம்.

தனியார் நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களில் இளம் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்ட தனி அறைகளை உருவாக்கவேண்டும். அதேபோல், குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிறுவனங்களில் உள்ள Working mothersகளிடம் இருந்து pumping முறையில் சேகரிக்கப்படும் தாய்ப்பால் குழந்தைகளுக்கு சரியான முறையில் கொண்டுச்சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும். தாய்ப்பாலை சேகரிக்க தற்போது தரமான PUMPING BOTTLEகள் அனைத்து இடங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும்.

Pregnat Woman with Husband
Pregnat Woman with Husband

தந்தையின் பங்கு:

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வாக இருப்பாள். குழந்தை பிறப்புக்கு முன்புவரை இருந்த பெண்ணிண் உடல் குழந்தை பிறந்த பின்பு முற்றிலுமாக மாறியிருக்கும். அதேபோல் முதல் முறையாக தாய்மை பொறுப்பை ஏற்கும் பெண்ணுக்கு உளவியல் ரீதியிலான ஆறுதல்கள் தேவைப்படும். அதற்கு ஒரு தந்தையின் பங்களிப்பு அவசியமாகும்.

அடுத்தகால தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்க்கையின் முதல்படி தாய்ப்பாலில்தான் அமைந்துள்ளது. அதற்கு இன்றைய தலைமுறையினர் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும். அதேபோல் தாய்ப்பால் என்பது வெறும் பெண்ணை மட்டும் மையப்படுத்தியது கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் கிடைப்பதும், தாய்ப்பால் கொடுப்பதற்கான ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பொது இடங்களை உருவாக்குவது, வேலைக்கு செல்லும் இளம் பெண்களுக்கு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் தாய்ப்பால் பம்ப் செய்வதற்கான தனியாக ஓய்வு அறைகளை அமைப்பது, அதனை குழந்தைக்கு பாதுகாப்பான முறையில் கொண்டுசேர்ப்பது போன்ற பணிகளை முன்னெடுப்பதும் இந்நூற்றாண்டின் அடிப்படை தேவையாகும்.

தாய்ப்பால் தொடர்பான கேள்விகளும் பதில்களும் தொடரும்...

logo
Kalki Online
kalkionline.com