
நம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் சார்பாக சந்தித்தோம்.
டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி எமது பிரத்யேக பேட்டியிலிருந்து...
கருவூற்ற பெண்களுக்கு தாய்ப்பால் எப்போது சுரக்க ஆரம்பிக்கும்? பாலூட்டுதல் எப்போது தொடங்கும்?
ஒரு பெண் கருவுற்றிருக்கிறார் என்பது உறுதியான 16வது வாரத்திலேயே உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக தாய்ப்பால் உற்பத்திக்கான பணிகள் தொடங்கிவிடும். ஆனால், குழந்தை பிறந்த பின்புதான் மார்பகங்களில் இருந்து தாய்ப்பால் வெளியேறும். அதன்பின்னர்தான் குழந்தைக்கு தாய்ப்பாலை உணவாக அளிக்க முடியும். தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான இந்த முதல் உணவு பரிமாற்றத்தை MAGICAL MOMENT என்பார்கள். தாய்க்கும் குழந்தைக்குமான இந்த பிணைப்பு oxytocin எனும் ஹார்மோன்களால் உருவாக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள்தான் கணவன், மனைவிக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
பொதுவாக சில இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிரமம் இருக்கும். ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் இளம் தாய்க்கு தாய்ப்பால் வரவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்யும்படி கூறுவார்கள். இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம்கூட ஏற்படும். தாய்ப்பால் சுரத்தலில் பற்றாக்குறை இருக்க முடியாது என்பது உண்மையா?
பொதுவாக பெரும்பான்மையான தாய்மார்களுக்கு தாய்ப்பால் மிக இயல்பாக சுரக்கும். ஆனால், சிலருக்கு தாய்ப்பால் எதிர்ப்பார்த்த அளவுக்கு சுரக்காது. குறிப்பாக மகப்பேறு காலத்தில் நீரிழவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், பிசிஓடி, தைராய்டு மற்றும் உடல்பருமன் போன்ற பிரச்சனை உள்ள இளம் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு Lactation Consultant கூறும் வழிமுறைகளை பின்பற்றி தாய்ப்பால் சுரப்பதை சீராக்க முடியும். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரிசெய்துவிடலாம்.
மேலும் குழந்தை போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிப்பதில் சிக்கல் என்ற நிலை தாய்க்கு மட்டும் இருக்கும் பிரச்னை இல்லை. சில குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து போதுமான அளவுக்கு தாய்ப்பால் கிடைத்தாலும், அதனை எடுத்துக்கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படலாம். குறிப்பாக மேல் உதடு ஒட்டி (lip tie) பிறக்கும் குழந்தைகள் மற்றும் நாக்கு ஒட்டி (tongue tie) பிறக்கும் குழந்தைகளுக்கு தாயின் மார்பகத்தில் இருந்து தாய்ப்பாலை உறிஞ்சி குடிப்பதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகநேரம் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள்.
தாய்ப்பால் தொடர்பான கேள்விகளும் பதில்களும் நாளையும் தொடரும்...