உலகத்தின் மிகப் பெரிய ’குக்கூ’ கடிகாரம்!

உலகத்தின் மிகப் பெரிய ’குக்கூ’ கடிகாரம்!

பயணக் கட்டுரை

லகத்திலேயே மிகப் பெரிய குக்கூ கடிகாரத்தைப் பார்க்கும் அனுபவம் 27.12.2022 அன்று கிடைத்தது.

ஜெர்மனியின் ப்ளாக் ஃபாரெஸ்ட். அடர்த்தியான மரங்களை- பெரும்பாலும் பைன் மரங்களைக் கொண்ட மலைத்தொடர். எல்லாக் காலத்திலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம்.  நல்ல குளிர்காலத்தில் வெள்ளைப்பனி மூடிய அழகு.  வெயில் காலத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இரவு பத்து மணிக்கு மேல் என்பதால் நீண்ட நேரம் இயற்கை வனப்பைக் கண்டு களிக்கலாம். நாங்கள் உறவினர் பத்து பேராகச் சென்றோம்.

இங்குதான் ட்ரைபர்க் என்னும் இடத்தில் பிரசித்தி பெற்ற குக்கூ கடிகாரம் உற்பத்தி செய்கிறார்கள். ஆகவே சாலையில் வரிசையாகக் கடைகள். ஒவ்வொரு கடையிலும் விதவிதமான வடிவங்களிலும், அளவுகளிலும்  பார்க்கவே மிக அழகான நூற்றுக்கணக்கான கடிகாரங்கள். சில கடைகளில் 1000 இருக்கிறது என்று கூட விளம்பரப்பலகைகள் தொங்குகின்றன.   ஒவ்வொரு அரைமணிக்கும் ஒருமுறை அந்தந்த நேரத்தை ஒட்டி அத்தனை முறை குக்கூ, குக்கூ என்று  கூவும் கடிகாரங்கள். கீழே தொங்கும் மெல்லிய சங்கிலியை  கையால் இழுத்து கீ கொடுக்கும்  முறைதான் ஒரிஜினலாகச் செய்யப்பட்டன. இப்பொழுது பாட்டரியில் இயங்கும் கடிகாரங்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன. ஏனென்றால் கையால் இயக்கும் கடிகாரங்கள் மிகச்சிறியதே 15000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு லட்சத்திற்கு மேல் விலை போகிறது.

கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ள உலகத்திலேயே மிகப் பெரிய குக்கூ கடிகாரத்தை இங்கு பார்க்கலாம். கடிகாரத்தின் முன்புறம் 15க்கு 15 அடி. உள்ளேயிருந்து அரை மணிக்கு ஒரு முறை கதவைத் திறந்து கூவும் குயிலின் நீளம்  14 அடி. பெண்டுலம்  26 அடி.  ஒரு தந்தையும் மகனும் 5 ஆண்டுகள் உழைத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். பயணிகள் எல்லோரும் மணி அடிக்கும் நேரத்திற்கு முன் அங்கே குழுமி விடுகிறார்கள். முக்கியமாக பன்னிரண்டு மணிக்கு முன் பெருங்கூட்டம் கூடுகிறது. அதன் அருகிலுள்ள கதவு வழியாக கட்டடத்தின் உள்ளே செல்ல வழி உண்டு. மெஷினில் 2யூரோ  நாணயம் செலுத்தினால் மேலே படிகட்டு வழியாக ஏறும் கதவு திறக்கிறது.  அங்கே கடிகாரத்தின் உள்ளேயிருக்கும் பிரம்மாண்ட இயந்திரங்கள், பாகங்களைப் பார்க்க முடியும். அதைப் பற்றின விவரங்களை ஆளுயர பொம்மை ஒன்று உண்மையான மனிதர் பேசுவது போன்று நமக்கு விளக்குகிறது.

கடைகளைத் தாண்டி சிறிது தூரம் மலை ஏறினால் அருமையான‌ மிகப் பெரிய நீர்வீழ்ச்சி.  நாங்கள் சென்றபோது கிருஸ்துமஸை ஒட்டிய விடுமுறை காரணமாக பல கலைநிகழ்ச்சிகளும் அங்கு நடந்து கொண்டிருந்தது. ஒரு குழு ஹாக்கி ஸ்டிக்கைப்போல ஆனால் இன்னும்  மிக நீளமான (கிட்டத்தட்ட எட்டடி நீளம்) வாத்தியத்தை இசைத்தார்கள். புதுமையாக இருந்தது. பைன் மரத்தில் செய்யப்பட்டது என்று அறிந்து கொண்டோம். நிலப்பரப்பைப் பொருத்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலும் இசை கேட்கும் என்கிறார்கள்.

திரும்பும் பொழுது எல்லோரும் ஒரு கடிகாரமாவது வாங்காமல் வருவதில்லை. அது முடியாவிட்டால் கூட அதே மாடலில் ஃப்ரிட்ஜில் ஒட்டும் மாக்னடுடனான  சிறிய அளவு ஓடும் கடிகாரம் (10யூரோ) வாங்கிச் செல்கின்றனர்.

பார்க்க வேண்டிய இடம். குளிர்ச்சி தரும் காற்றும், சுற்றிலும் இசைக்கும்  குக்கூ க்ளாக்குகளும் ஓர் இனிய அனுபவம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com