கார் வாங்கியிருக்கிறீர்களா? உங்கள் பையன் அல்லது பெண் குழந்தையைப் பெருமையாக முன் பக்கத்து இருக்கையில் உட்கார வைக்கிறீர்கள். அல்லது நீங்கள் முன் இருக்கையில் அமர்ந்து உங்கள் மடியில் குழந்தையை அமர்த்திக்கொள்கிறீர்கள். பலரும் குழந்தையை நிற்க வைத்து அழைத்துச் செல்வதைக் கூடப் பார்த்திருக்கலாம். குழந்தையை 'முன் இருக்கையில் உட்கார வைப்பதோ, நிற்க வைப்பதோ அல்லது உங்கள் மடியில் அமர்த்திக்கொண்டு பிரயாணம் செய்வதோ மிக மிக ஆபத்தான செயலாகும்.
அதிகபட்ச வேகத்தில் கார் செல்லும்போது சாலையின் குறுக்கே இடர்ப்படும் பிராணிகள், சிறுவர் சிறுமியரின் மீது மோதுவதைத் தவிர்க்க அவசரமாக ப்ரேக் போடும்போது காரின் முன்பக்கம் அமைந்துள்ள பகுதியில், உங்கள் குழந்தை சரிந்து மோதிக் கொள்ள வாய்ப்பு அதிகம் உண்டு.
இந்த மோதலினால் குழந்தையின் பற்களில் அடிபடுவதும், மூக்கு உடைபடுவதும் தவிர்க்க முடியாதது.
இந்தியக் கார்களில் 'லாமிநோட் விண்ட் வில்ட் உபயோகப்படுத்தப்படவில்லை. இதனால் மோதப்பட்ட முகத்தில் மிக ஆபத்தான சிறாயப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் மடியில் அமர்ந்துள்ள குழந்தை இருந்தால் காரின் முன்பகுதிக்கும் உட்கார்ந்திருப்பவருக்கும் இடையில் அகப்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையும் உண்டாகலாம்.
குழந்தைகளை காரில் அபாயமின்றி அழைத்துச் செல்வது எப்படி?
1. முன் இருக்கையானாலும், பின் இருக்கையானாலும் மடியில் குழந்தையை உட்கார வைத்துக் கொள்ளக்கூடாது.
2. பின் இருக்கையில் அவர்களைத் தனியாக உட்கார வைக்க வேண்டும்.
3 குழந்தை அமருவதற்கென்றே தயாரிக்கப்பட்ட (Specially designed salety seats) இருக்கைகளை பொருத்துவது மிக நல்லது. இதில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை உட்கார வைக்கலாம்.
4. நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருக்கையில் விமானத்தில் இருப்பதுபோல பெல்ட் இனைத்துக்கொள்ள வேண்டும்.
மேற்கூறிய அதிகப்படி வசதிகளை செலவு செய்து காரில் நாமே பொருத்திக்கொள்ளலாம். அல்லது கார் உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு இவற்றை முன்வைத்து கார் தயாரிக்கும்போதே இத்தகைய
இணைப்புகளுடன் தயாரிக்கச் சொல்லலாம்.
- அமிர்தா சுப்ரமணியம்
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் - ஜனவரி 1999 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடைக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்