சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க!

ஆரோக்கியத் தகவல்
சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க!
Published on

* நுங்கினுள் இருக்கும் சாறைப் பூசினால் வியர்க்குரு அடங்கும். உடலும் குளுமை பெறும்.

* விளாம்பழத்தினுள்ளிருக்கும் சதைப் பகுதியை மசித்து, அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் பித்தம் குறைவதுடன் நாவறட்சியும் அடங்கும்.

* தினமும் இரவில் பப்பாளித் துண்டுகளைச் சாப்பிட்டுவர, சூட்டினால் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

*10 கிராம் சீரகம், 6 பனங்கற்கண்டு இரண்டையும் 3 தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து குடித்துவந்தால், வெயில் நாட்களிலும், மாதவிடாய் சமயத்திலும் ஏற்படும் தசைப்பிடிப்பு இருக்காது.

* உஷ்ணத்தால் ஏற்படும் வறட்டு இருமல் அதிமதுரத்தைச் சாப்பிட்டால் மட்டுப்படும்.

* குளிக்கும் நீரில் வேம்பு, துளசி இலைகளை முதல்நாள் இரவே போட்டு வைத்துக் குளித்தால், வியர்வையால் ஏற்படும் பூஞ்சைத் தொற்றைத் தவிர்க்கலாம்.

* மணத்தக்காளி இலைகளைச் சாறெடுத்து 1 தம்ளர் நீர் சேர்த்துக் குடித்தால் உடல்சூடு, வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவை குணமாகும்.

* கசகசாவை அரைத்து, அதைக் கொதிக்கவைத்த பாலுடன் சேர்த்துக் குடித்தால், வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலி நீங்கும். 1 தம்ளர் பாலுக்கு 1 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் கசகசா விழதைச் சேர்க்கலாம்.

* வல்லாரை மற்றும் கொத்துமல்லியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், சிறு நீர்ப்பாதை எரிச்சல், நீர்க்கடுப்பு இவற்றுக்கு நல்லது.

*நன்னாரி வேரை நசுக்கி தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, சாறெடுத்துக் குடித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

* அரை கப் புழுங்கல் அரிசி, 2 டேபிள் ஸ்பூன் முழு உளுந்து, 2 டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் சீரகம், சிறிது உப்பு இவைகளைச் சேர்த்து நன்றாகக் குழைய வைத்துக் கஞ்சியாக்கி, குடித்தால் உடல்சூடு தணியும்.

* சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நாக்கு வறட்சியாகவே இருக்கும். பார்லியைக் கஞ்சி வைத்து, அந்தக் கஞ்சியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுவது நாவறட்சியை நீக்கும்.

* இளசான நுங்குகளைச் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் காய்ச்சி ஆறிய பாலில் போட்டு சிறிது சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூடு தணியும்.

* தனியா, ஜாதிப்பத்திரி, ஏலக்காய் மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் ஆகும்வரை கொதிக்க வைத்து, ஆறியபின் வெறும் வயிற்றில் குடித்தால் கெட்ட நீர் வெளியேறும். உடல் மணக்கும். குளிர்ச்சியும் ஆகும்.

* கடுக்காய்த் தோல், லோத்ராபட்டை, ப்ளூ அல்லிப்பூ, கோரைக்கிழங்கு, சிறுநாகப்பூ, விளாமிச்சை வேர் தலா 5 கிராம்,  கஸ்தூரி மஞ்சள் கிராம் எடுத்து கலந்து மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பவுடரைக் குழைத்து உடலில் பூசிக் குளித்தால், உடல் மணக்கும்.

*இளநீரைக் குடித்தபின், அதன் வழுக்கையை அரைத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால் வெயிலினால் சருமம் கறுப்பாகாமல் தடுக்கலாம். அதேபோல் தேங்காயை அரைத்து பாலெடுத்து, கடலை மாவு கலந்து, வாரத்துக்கு ஒருமுறை தேய்த்துக் குளித்தால் வெயிலினால் ஏற்படும். சரும வறட்சியைத் தடுப்பதுடன் கறுத்துப் போகாமலும் தடுக்கலாம்.

* கோடையில் உஷ்ணத்தாலும், வியர்வையாலும் சரியாகத் தூங்காமல் பச்சிளங் குழந்தைகள் அவஸ்தைப்படுவார்கள். எப்பொழுதும் அழுதுகொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு டிப்ஸ்:-

நிறைய மல்லிகைப்பூ, ரோஜா வாங்கி அவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, நன்கு காய்ச்சி மூடி வைக்கவும். மறுநாள் எடுத்து வடிகட்டினால் ‘கமகம’வென மணக்கும். இந்த எண்ணெயைக் குழந்தைகளின் உடம்பில் நன்கு பூசி மசாஜ் செய்து பிறகு குளிப்பாட்டினால், வியர்வையால் உண்டாகும் ‘ராஷஸ்’ வராமல் தடுப்பதுடன் சருமத்துக்கு நல்ல எதிர்ப்புச் சக்தியையும் உருவாக்கிக் கொடுக்கும். குளுகுளுவென ஏசி போட்டது போல ஆகிவிடும் குழந்தைகளின் உடல், சுகமாக அயர்ந்து தூங்குவார்கள்.

* புத்தம் புதிய மகிழம் பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு கையளவு பாசிப்பயறு, 3 வேப்ப இலை, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து உடம்பெல்லாம் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க, வியர்க்குருக்கள் மறையும். மேலும், தொடர்ந்து பயன்படுத்திவர, அழுக்குத் தேமல் அடியோடு மறையும்.

- ஆர். சாந்தா, சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com