
-இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.
ஜலதோஷத்துக்கு பல வைரஸ்கள் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ரெனோ வைரஸ், காக்ஸாக்கி வைரஸ், கரோனா வைரஸ் ஆகிய மூன்றும் பரவலாகத் தாக்குபவை. அதிலும் கரோனா, ரினோ வைரஸ் மிக அதிக அளவில் தாக்கக் கூடியது. நமது மூக்கின் வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ். இது வைரஸ் வளர ஏற்றதாக இருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் இது பல்கி பெருகி நம் உடலிலேயே வைரஸ் உற்பத்தி செய்கிற தொழிற்சாலை போல மாற்றுகிறது. ஏற்கனவே ஜலதோஷம் பாதித்த ஒருவரை தொடுவதாலோ அல்லது காற்றின் மூலமாக தான் இந்த கிருமி மற்றவர்களுக்கு பரவுகிறது. வைரஸ் பாதித்த ஒருவரை அல்லது அந்த கிருமி இருக்கும் எதையாவது தொட்டுவிட்டு அதன் பிறகு நம் கண்களையோ, வாயையோ, திறந்த நிலையில் இருக்கும் புண்க ளையோ தொட நேர்ந்தால், நம்மை யும் பிடித்துக் கொள்ளும் .அந்த வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர் தும்மும் போதும், இருமும் போதும் கா ற்றில் கலக்கும் வைரஸை நாம் சுவாசிக்க நேர்ந்தால் நமக்கும் அது பரவும். மழை நாட்களிலும் குளிர் நாட்களிலும் அதிகம் பேருக்கு ஜலதோஷம் தாக்கும். வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்தால் மற்ற நபர்களுக்கும் அது தொற்றும். வளர்ந்த மனிதர்களுக்கு சராசரியாக வருடத்திற்கு மூன்று முறையும், குழந்தைகளுக்கு ஆறுமுறையும் ஜலதோஷம் வரும் என்கின்றன புள்ளி விவரங்கள் .ஜலதோஷ த்திற்கான அறிகுறிகள் என்ன? அதற்கு நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி இதில் காண்போம்.
அறிகுறிகள்:
முதல் நாள் தொண்டை கரகரப்பாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் மூக்கில் இருந்து நீர் வடியும். மூக்கு அடைத்துக்கொள்ளும். தலை முழுக்க பாரமாக இருக்கிற மாதிரி தோன்றும். கண்ணீர் வடியும். தொண்டையில், மூக்கில், கண்களில் அரிப்பு இருக்கும். சரியான தூக்கம் இல்லாதது போல களைப்பாக இருக்கும். குழந்தைகளாக இருந்தால் காய்ச்சலும் சேர்ந்து கொள்ளலாம். தும்மல் அதிகம் இருக்கும். பிறகு வறட்டு இருமல் ஏற்படும். தலைவலியும் இருக்கும்.
செய்ய வேண்டியது: ஜலதோஷத்துக்கு ஓய்வு தான் முதல் சிகிச்சை. ஓய்வெடுக்கும் போது , கிருமித் தொற்றுக்கு எதிராக போராடும் சக்தி உடலுக்கு அதிகரிக்கிறது.
ஓய்வே இல்லாமல், ஜலதோஷத்துடன் ஓடியாடி வேலை பார்க்கிறவர்களுக்கு அது முற்றிலும் குணமாக கூடுதல் நாட்கள் பிடிக்கும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும். .கஞ்சி மாதிரியான திரவ உணவுகள் அதிகம் குடிக்கலாம்.
காபி, டீ தவிர்க்கவும் .இவை உடலில் உள்ள நீர்ச்சத்தை வெளியேற்றும்.
பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக சாப்பிட வேண்டியது இல்லை. திரவ உணவுகளை போதிய அளவு எடுத்துக் கொண்டாலே போதும். காய்கறி சூப், எளிதில் செரிமானமாக கூடிய உணவுகள் சாப்பிடலாம். இந்த நேரத்தில் சத்தான உணவு அவசியம். ஜலதோஷத்துக்கு காரணமான கிருமிகளோட போராட இது மிக முக்கியம். ஜலதோஷத்தால் வறண்டு, கரகரப்பாக இருக்கிற தொண்டைக்கு சூடான சிக்கன் சூப் இதமளிக்கும். இதில் உள்ள புரோட்டீனும், எலக்ட்ரோலைட்டும் உடலுக்குத் தெம்பைத் தரும்.கடுமையான பயிற்சிகளை தவிர்த்து மிதமான நடைப் பயிற்சி செய்யலாம் .
வெதுவெதுப்பான தண்ணீரில் குளியல் போடலாம். இளஞ் சூடான தண்ணீரில் அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.
தடுப்பு முறைகள்:
நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். தினசரி உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
கைகளை சோப்பு போட்டு கழுவுவது நல்ல பழக்கம். இது கிருமித் தொற்றிலிருந்து நம்மை காக்கும். துணியில் ஆன கைக்குட்டைகளை உபயோகிப்பதற்கு பதில் உபயோகித் ததும் தூக்கி எறியக்கூடிய டிஸ்யூ பேப்பர்கள் சிறந்தவை. துணியில் ஜலதோஷத்துக்கு காரணமான கிருமிகள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும்.
குளிர் காலத்தில் கூட்டம் அதிகம் உள்ள சினிமா தியேட்டர் மாதிரி இடங்களுக்குச் செல்வதை கூடியவரையில் தவிர்க்கவும். காற்று வெளியேற முடியாத அந்த மாதிரி இடங்களில் மற்றவர்களிடம் இருந்து நமக்கும் ஜலதோஷம் எளிதில் தொற்றும்.
குளிர்காலத்தில்தான் அதிகம் சளி பிடிக்கும் என்று சொல்வார்கள்.காரணம், குளிர் காலத்தில் வீட்டில் கதவுகள், ஜன்னல்கள் அடைத்தபடி காற்று வெளியேற வழியின்றி இருக்க நேரிடும். அதன் காரணமாக ஒருவருக்கு பிடித்த ஜலதோஷம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்றும்.
மன உளைச்சலுக்கும் ஜலதோஷத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட மனம் உடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக் கொள்வதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மன உளைச்சலுக்கு காரணமான ஹார்மோன்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைப்பதே இதற்கு காரணம் ஆகும்.
குளிர் ,மழைக் காலம் தொடங்கிவிட்டது. ஜலதோஷம் பிடித்தால் முடிந்தவரை ஒருவரை ஆட்டிப் படைத்து விட்டுத்தான் விடைபெறுகிறது. ஆதலால் மறந்துவிடாமல் மேலே சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து ஜலதோஷம் அண்டாமல் பாதுகாத்துக் கொள்வோமாக!
-----------------------------------------------------------------------
மழை வந்தால், கூடவே வரும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு வீட்டு உணவிலேயே மருந்து இருக்கிறது.. அவை:
* துளசி இலைச்சாறு, சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து தயாரிக்கும் டீ இரண்டும் ஜலதோஷத்திற்கு அருமருந்தாகும்.
* இரண்டு ஸ்பூன் தேன், சிறிது ஏலக்காய் பொடி கலந்து சாப்பிட்டால், சளி, இருமல் தொல்லை நீங்கும்.
* மிளகு பொடி, தேன், நெய் மூன்றையும் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டால், இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட்டால், இருமல் கட்டுப்படும்.
* தொண்டை கட்டிக் கொண்டால், கற்பூரவல்லிச் சாறுடன் பனங்கற்கண்டு கலந்து பருகலாம்.
* சளியை போக்க, பீட்ரூட் சாறு, கொள்ளு சூப் இவை மருந்தாகின்றன.
* மழைக்காலத்தில் தூதுவளை ரசம் செய்து, சுடுசாதத்துடன் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
* முசுமுசுக்கை இலையை அரைத்து தோசை மாவில் கலந்து, காலை வேளையில் தோசை வார்த்து சாப்பிட்டால், தும்மல், சளி, நமைச்சல் நிற்கும்.
* வெற்றிலையுடன் மிளகு சீரகம் சேர்த்து அரைத்து பனங்கற்கண்டு கலந்து குடித்தால் மழைக்காலத்தில் ஜலதோஷம் பிடிக்காது.
* மிளகு ,சீரகம், இஞ்சி, ஓமம் சேர்ந்து சேர்ந்த உணவுகள் சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகள் தாக்காது.
-பி. பாரதி, ஸ்ரீரங்கம்.