டென்னிஸ் வீரரின் பிரியா விடை!

விளையாட்டு
டென்னிஸ் வீரரின் பிரியா விடை!
Published on

- ஆர். மீனலதா, மும்பை

டென்னிஸ் சாம்பியன் ரோஜர் பெடரர் தனது ஓய்வினை அறிவிக்கும் இறுதி களப் போட்டி என்பதால், சமீபத்தில் நடைபெற்ற ‘லேவர் கோப்பை டென்னிஸ்’ பரபரப்பாகப் பேசப்பட்டது.

சுவீடனைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜோர்ன் போர்க் தலைமையிலான ‘ஐரோப்பிய அணி’, அமெரிக்க வீரர் ஜான் மெக்கன்ரோ தலைமையிலான ‘உலக அணி’ இரண்டிலுமுள்ள சிறந்த வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

மேலும், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர் விளையாடும் கடைசிப் போட்டியாக அது இருந்தது.

லேவர் கோப்பை விவரம்

பிரபல டென்னிஸ் வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ராட் லேவர்’ பெயரில் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய அணி, உலக அணி என இரு அணிகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாம்.

ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஆட்ட வீரர்கள் ‘ஐரோப்பிய அணியிலும்’ உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ‘உலக அணி’யிலும் பங்கேற்பார்கள். இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் ஐரோப்பிய அணியே சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.

ரோஜர் பெடரர்

41 வயதாகிய பெடரர் கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் உலகின் சாம்பியனாகத் திகழ்ந்து அநேக பட்டங்களைக் குவித்தவர்.

சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மூவரும் டென்னிஸில் மூவேந்தர்களாகக் கொடி கட்டிப் பறந்த 20 ஆண்டுகளையும் பொற்காலமெனக் கூறலாம்.

ரபேல் நடால் 22; ஜோகோவிச் 21, பெடரர் 20 என்று மொத்தம் 63 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று மும்மூர்த்தி களாகத் திகழ்ந்தனர்.

உடல் பிரச்னைகள், கை-கால்களில் காயங்கள்; அறுவைச் சிகிச்சைகள் என்று பல்வேறு பிரச்னைகளிலிருந்த போதிலும், அவற்றை எதிர்கொண்டு விளையாடியவர்கள்.

2018ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் ஆரம்பம் முதல் தோற்காமல் விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பெடரர், குரோஷியாவின் “மரின் சிலிச்சையுடன்” ஐந்து செட்கள் கடுமையாகப் போராடி 20ஆவது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

பிரியாவிடை

விறுவிறுப்பாக நடைபெற்ற லேவர் டென்னிஸில் பெடரர் – நடால் ஜோடி போராடித் தோல்வியைத் தழுவியது. தனது கடைசி தொழில்முறை டென்னிஸ் போட்டியினை விளையாடி முடித்த பெடரர், ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க விடைபெறுகையில், நடாலும் உணர்ச்சி வசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார். இவர்களிடையேயான நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது இது.

‘என்னுடைய முக்கியத் தருணங்களில் எல்லாம் பெடரர் எனக்கு அருகில் அல்லது முன்னால் இருந்திருக்கிறார் என்கிற உணர்வை வெளிப்படுத்துவது கடினமென்றாலும் அற்புதமானது’ எனக் கூறினார் நடால்.

பெடரர் பெற்ற கிராண்ட் ஸ்லாம்

போட்டி – ஆண்டு

ஆஸ்திரேலிய ஓபன் – 2004, 2006, 2007, 2010, 2017, 2018

பிரெஞ்சு ஓபன் – 2009

விம்பிள்டன் – 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2012, 2017

யு.எஸ்.ஓபன் – 2004, 2005, 2006, 2007, 2008.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com