
தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த, மிகவும் பழைமை வாய்ந்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.
கோயில் கோபுரம் 196 அடி உயரம், 11 நிலைகள், 11 கலசங்கள் கொண்டது. இந்தக் கோபுரத்தில் சிலைகள் எதுவும் கிடையாது. தமிழக அரசின் சின்னமாக இந்தக் கோபுரம் விளங்குகிறது.
பெருமாள் கோயில்களில் வேறு எங்கும் காண முடியாத ஓர் அதிசயத்தை இங்கு காணலாம். பொதுவாக, தாயார் சந்நிதி தனியாகத்தான் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான் பெருமாளுடன் தாயாரும் ஒரே சந்நிதியில் இருப்பார்கள்.
எல்லா பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார், மூவருமாக இருக்கிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகிறது.
எல்லா கோயில்களிலும் ஒரு விமானம்தான் உண்டு. இந்தக் கோயிலில்தான் கருவறையில் இரண்டு விமானங்கள் இருக்கும்.
எப்போதும் வைர, வைடூரிய நகைகளுடன் இருக்கும் இக்கோவில் பெருமாள், ஆண்டாள் அளிக்கும் மாலையை ஏற்கும்போது ஆபரணம் ஏதுமின்றி வேட்டி மட்டும் அணிந்தபடி காட்சி தருகிறார். (திருப்பதி) திருமலையில் இது மிகப்பெரிய வைபவமாகவே நடைபெறுகிறது. இதற்காகத் திருப்பதி பிரமோற்சவத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருமலைக்குச் செல்வது பெரிய விழாவாகவே இங்கு நடைபெறும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை 'எலே’. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு காலத்தில் திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக 'எலே’ என்ற வார்த்தை இங்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாளின் திருப்பாவையில் ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?’ என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். ‘எல்லே’ என்ற இந்த வார்த்தையே திரிந்து 'எலே’ என்று ஆனதாகச் சொல்வர். ஆணாயினும், பெண்ணாயினும் குழந்தைகளையும், நண்பர்களையும் ‘எலே’ என செல்லமாக அழைப்பர்.
நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா என்பவர், கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். அவர் ஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையையே நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள். அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தன. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்குச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே இன்றளவும் குறிப்பிடப்படுகிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர், ஆண்டாளின் ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் புறப்பட்டார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
ஆமாம், அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளக் கரையிலுள்ள படியில் ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார்.
நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.