
பாடகர் மாணிக்க விநாயகம்…?
– லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், சென்னை
'கண்ணுக்குள்ள கெளுத்தி' பாட்டு சூப்பர் ஹிட்டானபோது, 'செமையா இருக்கே!'ன்னு நினைச்சது உண்மை.
'கொடுவா மீச அருவா பார்வை' பாடல் வந்தப்போ கூட, அந்தக் குரல்ல இருந்த எனர்ஜியைப் பார்த்து, யாரோ இளம் வயது பாடகர்னுதான் நினைச்சேன்.
'தேரடி வீதியில் தேவதை வந்தா'ன்னு மாதவன் ஆட்டம் போட்டப்போது, லேசா டவுட் ஆனேன்!
'கில்லி'யில, 'அர்ஜுனரு வில்லு… அரிச்சந்திரன் சொல்லு' பாடலை விஜய்க்காக பாடியபோது, க்யூரியாசிடி எகிறிடுச்சு.
'யாருப்பா அந்த மாணிக்க விநாயகம்?'னு ஆர்வத்தோட தேடினா, வெத்தலைப் பாக்கு போட்ட உதடு, விபூதி பூசிய நெற்றி, சில்க் ஜிப்பா என நடுத்தர வயது ஆசாமி!
தமிழை அந்நியமாகக் கொல்லும் எலக்ட்ரானிக் வாய்ஸ் அல்ல அவரது பிசிறில்லாத, காந்தக் குரல்! மிடுக்கான, எடுப்பான தமிழ்க் குரல்! ஒரு நாடோடிப் பாடகனின் குரலில் உள்ள ஆத்மார்த்தம்! எளிமை! இல்லைன்னா… அவ்வளவு பக்தி ஆல்பம்ஸ் பாடியிருக்க முடியுமா?
பிற உயிரினங்களில் கூட பெண் இனம்தான் தங்கள் குட்டிகளை வளர்த்துப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதைப் பார்த்தீங்களா மேடம்?
– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி
ஓரளவுக்கு ரைட்டு! ஆனா, உங்கக் கேள்வியைப் படிச்சா, 'அப்பா' கடல் குதிரை, 'டேடி' பென்குவின், 'நைனா' கொரில்லா போன்றவை சண்டைக்கு வரும். ஏன்னா, சில உயிரினங்களில் ஆண்களும் 'கண்ணானக் கண்ணே!' என, 'விஸ்வாசம்' அஜீத்தின் டியூட்டி பார்க்கின்றன கெஜலட்சுமி மேடம்!
அம்மா பென்குவின், 'ஹாய்யாக' முட்டையிட்டுவிட்டு, ஃபுல்மீல்ஸ் சாப்பிட கடலுக்குள் போய்விடும். அது திரும்பி வரும் வரை, முட்டைகளைக் கால்களுக்கு இடையே பொத்திக்கொண்டு, ஆடாமல் அசையாமல் அப்பா பென்குவின்தான் அடைகாக்கும். சும்மா ஒரு நாள், இரண்டு நாளா? இரண்டு மாசம் சாப்பாடே கிடையாது!
கடல் குதிரை இருக்கே, அது வேற லெவல்! மம்மி கடல் குதிரை, முட்டைகளை 'டேக் இட்'ன்னு ஹஸ்பென்ட்கிட்டே வைத்துவிடும். கர்ப்பம் தரிப்பதும், பிரசவிப்பதும் ஆண் கடல் குதிரைதான்! அந்த 28 நாட்களும் தவமாய்த் தவமிருந்து பிள்ளைகளைப் பெறும்.
'ஃபாதர்ஸ் டே' கார்ட் கிடைக்காத, ஆண் உயிரினங்களில் திருவாளர் சிங்கத்துக்கு முதல் இடம்! கெத்தா உலாத்தும். சும்மா ரெஸ்ட் எடுக்கும். வேட்டைக்கும் போகாது. பெண் சிங்கம் வேட்டையாடிக் கொண்டு வரும் இறைச்சியை முழுசாக சாப்பிட்டுவிடும். அது ஏப்பம் விட்ட பிறகு, சிந்தி சிதறிதுனல இருக்குற மீதியை தன் மனைவி, குழந்தைகளைச் சாப்பிட அனுமதிக்கும். ரொம்பப் பசியா இருந்தா, தன் மனைவியின் முதல் இணைக்குப் பிறந்த குட்டிகளைக்கூட அடித்துச் சாப்பிட்டு விடுமாம்.
ரொம்ப அல்ப அசிங்கமா இருக்கியே ஆல்ஃபா சிங்கம்!
அனுஷா, நீங்க கேள்வி கேட்க விரும்பும் நபர் யார்? அவரிடம் கேட்க நினைக்கும் கேள்வி என்ன?
– ஜெயந்தி மகாதேவன், பாலவாக்கம்
திரு.மோடி ஜி!
இதோ அந்த பஞ்ச் ('பாஞ்ச்') கேள்விகள்…
அனுஷா மேடம், குமரன் சில்க்ஸ் பிடிக்குமா? அல்லது நல்லியா?
– ஜெய்ஸ்ரீ சாய்நாத், புனே.
கடன்'பட்டு', கஷ்டப்'பட்டு' வாங்காத எந்தப் பட்டானாலும் ஓ.கே! 'நல்லி' கடைக்குள் நுழையும்போது, கும்பிட்டு முக மலர்ச்சியுடன் வரவேற்பார்கள். சந்தோஷமாக இருக்கும்.
அதைவிட, 'நல்லி'யை விட்டு வெளியே வரும்போது, நெருக்கமாகத் தொடுத்த குண்டுமல்லி, மகிழம்பூ, சம்பங்கி விற்பார்கள். சில சமயம் வடு மாங்கா, மா இஞ்சி, பச்சை மிளகு கிடைக்கும்.
('என்னா மாமி… வாங்காம போற?')
பட்டுப் புடைவைக்கும், பூ, ஊறுகாய்க்கும் என்ன கனெக்ஷனோ? தெரியலை? ஆனா, நல்லா வியாபாரம் ஆகும்!
ஒரு ஜோக்கோடு முடிச்சுக்கலாமா? (பதில் எழுதும்போது தானா, 'கிராஸ்' ஆகுது!)
''ஸாரி மேடம், நீங்க கேட்குற ஒமிக்ரான் டிஸைன் பட்டுச் சேலை ஸ்டாக் இல்லை; காஞ்சிபுரத்துல இருந்து நெய்துதான் வரணும்."
''பரவாயில்ல… அதுவரைக்கும் நான் வேற சேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்!"